விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வரும் மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிடுகிறார்.
கடந்த தேர்தலிலேயே திருமாவளவன் பிரச்சாரம் செய்யும்போது, வன்னியர்கள் அடர்த்தியாக இருக்கும் பகுதிகளில் அவர் பிரச்சாரத்துக்காக செல்ல எதிர்ப்பு எழுந்தது. ஆங்காங்கே போலீஸார் குவிக்கப்பட்டு பதற்றமும் ஏற்பட்டது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது மிகவும் பரபரப்பு ஏற்பட்டு நள்ளிரவு தாண்டியும் வாக்கு எண்ணிக்கை நீடித்து, மூவாயிரத்து சொச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த பின்னணியில்… “ வரும் 2024 தேர்தலில் திருமாவளவன் சுமார் நான்கு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார், அவருக்காக வன்னியர் அமைப்பான படையாச்சியார் பேரவை களமிறங்கும்” என்று அறிவித்துள்ளார் அந்த பேரவையின் நிறுவனத் தலைவரும், புதிய உழைப்பாளர் கட்சியின் தலைவருமான திருவாரூர் எம்.பி. காந்தி.
இந்த அரசியல் நகர்வு வட மாவட்டங்களில் அரசியல், சமூக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பாமகவின் ஆரம்பகாலத்தில் தீவிரமாக களப்பணியாற்றிய எம்.பி. காந்தி, பிறகு டாக்டர் ராமதாஸின் நடவடிக்கைகளில் அதிருப்தி ஏற்பட்டு வெளியேறியவர். வன்னியர் சமுதாயத்தின் முதுபெரும் தலைவரான விழுப்புரம் எஸ்.எஸ்,ராமசாமி படையாச்சியாரின் பெயரில், ‘படையாச்சியார் பேரவை’ என்ற அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வந்தார். கலைஞர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களோடும் நல்லுறவு கொண்டிருந்தவர் காந்தி. வன்னியர் சமுதாயத்துக்கான பல்வேறு முன்னெடுப்புகளை திமுக, அதிமுக இரு ஆட்சிகளிலும் செய்தவர்.
இந்நிலையில்தான் மார்ச் 24 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் அலுவலகத்தில் திருமாவளவனை சந்தித்த படையாச்சியார் பேரவை நிறுவனத் தலைவர் எம்.பி. காந்தி, ‘புதிய உழைப்பாளர் கட்சி’ என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டதையும் இந்த கட்சி இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக இத்தேர்தலில் களமாடும் என்றும் அறிவித்தார்.
திருமாவளவன், ராமசாமி படையாச்சியாரின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் ராமதாஸ் ஆகியோருடன் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. காந்தி,
“சுதந்திரத்துக்கு பின் நடந்த முதல் தேர்தலான 1952 தேர்தலில்… ராமசாமி படையாச்சியார் அவர்கள் 18 எம்.எல்.ஏ.க்களையும் 4 எம்.பிக்களையும் வெற்றி பெறச்செய்தார். அவரது ஆதரவில்தான் அன்றைய காங்கிரஸ் முதலமைச்சராக ராஜாஜி பதவியேற்றார் என்பது வரலாறு. அப்போது மிக மிக ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த வன்னிய மக்களும், தலித் மக்களும் ஒற்றுமையாக இருந்து இந்த நாட்டை வழி நடத்தினார்கள். அதற்கு எடுத்துக் காட்டாக ஐயா ராமசாமி படையாச்சியார் வாழ்ந்து காட்டினார்.
இன்றைக்கு ஒரு இக்கட்டான நிலையில் இரு சமூகங்களிடையே வெறுப்புணர்ச்சியை உருவாக்கி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் சில கட்சிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில்… 1952 இல் எப்படி இரு சமுதாயத்தினரும் ஒன்றாக இருந்து இந்த நாட்டை வழி நடத்தினார்களோ, அதுபோல வன்னியர்களும், தலித்துகளும் ஒருங்கிணைந்து இந்த தேர்தலை சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதனால் ராமசாமி படையாச்சியார் உருவாக்கிய உழைப்பாளர் கட்சியை புதிய உழைப்பாளர் கட்சி என்ற பெயரில் நாங்கள் வழி நடத்த இருக்கிறோம்.
இன்றைய நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் திருமாவளவன் திகழ்கிறார். அவரோடு சேர்ந்து பணியாற்றினால்தான் வன்னியர், தலித் இரு சமுதாய மக்களின் வாழ்வாதாரமும் மேலோங்கும் என்ற ஒற்றை நோக்கில் எந்த விதமான அரசியல் எதிர்பார்ப்பும், பிரதிபலனும் இல்லாமல் இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறோம்.
விடுதலை சிறுத்தைகள் நிற்கிற விழுப்புரம், சிதம்பரம் இரு தொகுதிகளிலும் நான்கு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கிற சூழ்நிலையை உருவாக்குவோம்” என்றார் எம்.பி. காந்தி.
தொடர்ந்து புதிய உழைப்பாளர் கட்சியின் கொடியை திருமாவளவன் அறிமுகப்படுத்தினார்.
அதன் பின் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “படையாச்சியார் பேரவை என்ற சமூக இயக்கமாக நெடுங்காலமாக இயங்கி வந்த அமைப்பு, நாட்டின் நலன் கருதி அரசமைப்பு சட்டத்தின் பாதுகாப்பு கருதி, இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையில்… எம்.பி. காந்தி அவர்களும், எஸ்.எஸ்.ஆர். ராமதாஸ் அவர்களும் ஒருங்கிணைந்து புதிய உழைப்பாளர் கட்சி என்ற அரசியல் கட்சியை உருவாக்கியிருக்கிறார்கள்.
எஸ்.எஸ்.,ராமசாமியார் உருவம் பொறித்த கொடியை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் இந்த அரசியல் இயக்கத்தின் முதன்மையான குறிக்கோள்கள் என்பதை உறுதிப் படுத்தியிருக்கிறார்கள்.
சாதியின் பெயரால் இந்த மண்ணில் ஒரு சொட்டு ரத்தம் சிந்தக் கூடாது, உழைக்கும் மக்கள் சாதியின் பெயரால் பிளவுபட்டு கிடக்கக் கூடாது, சமூக நல்லிணக்கம் தேவை என்று என இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் எங்களுக்கு ஆதரவும் தெரிவித்திருக்கிறார்கள்,
இன்றைக்கு நாடு தழுவிய அளவில் சமூக நீதிக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. ஓபிசி மக்களும், ஒடுக்கப்பட்ட பூர்வகுடி மக்களும், சிறுபான்மையினரும் சமூக நீதி இருந்தால் மட்டுமே தலை நிமிர்ந்து வாழ முடியும்.
இந்தியா கூட்டணிக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். விரைவில் தமிழக முதல்வரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு புதிய உழைப்பாளர் கட்சி முன் வரும் என்பதையும் இரு தலைவர்களும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு என் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார் திருமாவளவன்.
சிதம்பரம் தொகுதியில் தலித், வன்னியர் என இரு பெரும் சமுதாயங்கள் இருக்கும் நிலையில், படையாச்சியார் பேரவையின் இந்த முன்னெடுப்பு திருமாவளவனின் வெற்றிக்கான வாய்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தத் தேர்தலுக்கான ஒரு நிகழ்வாக மட்டுமல்லாமல்… வன்னிய- தலித் ஒற்றுமையை மீண்டும் ஏற்படுத்தும் ஒரு சமூக மாற்றத்துக்கான வித்தாகவும் அமைந்திருக்கிறது.
–வேந்தன்
கோவையில் அண்ணாமலை…கொடுக்கப்போவது என்ன விலை?
”கணேசமூர்த்தி உயிர்பிழைக்க 50-50 தான் வாய்ப்பு உள்ளது” : வைகோ கவலை!
Comments are closed.