மாடு முட்டி சேதமான மோடி ரயில் !

Published On:

| By Jegadeesh

பிரதமர் மோடி செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் இன்று ( அக்டோபர் 6 ) மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் காந்தி நகர் நோக்கி சென்ற போது எருமை மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயில் என்ஜின் முன்பக்கம் சேதமடைந்தது.

இந்தியாவில் இயங்கும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், ரயில்களின் பயணிகளுக்கு சொகுசு பயணத்தை ஏற்படுத்தி கொடுக்கவும் மத்திய அரசின் புதிய திட்டத்தின் படி ’வந்தே பாரத்’ ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. மொத்தம் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலில் எக்ஸிகியூட்டிவ் பெட்டிகளில் உள்ள இருக்கைககள் 180 டிகிரி அளவுக்கு சுழலும் வகையில் உள்ளது. கண்காணிப்பு கேமரா வசதி உள்ளது. மேலும் 400 மிமீ முதல் 650 மிமீ உயரம் வரை ரயில் பாதையில் தண்ணீர் இருந்தாலும் இந்த ரயில் பாதுகாப்பாக இயங்கும். இதுதவிர ஆட்டோமேட்டிக் கதவுகள், 34 இன்ச் எல்சிடி டிவி வசதிகள் உள்ளன. இந்த ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் தன்மை கொண்டது.

இந்நிலையில் காந்திநகர் -மும்பை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த மாதம் 30ம் தேதி குஜராத்தில் பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதையடுத்து மும்பை-காந்தி நகர் இடையே வந்தே பாரத் ரயில் தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று அக்டோபர் 6 காலை மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலம் காந்திநகருக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. காலை 11:15 மணியளவில் பட்வா-மணிநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வேகமாக சென்றது. அப்போது தண்டாவளத்தின் நடுவே எருமை மாடுகள் கூட்டமாக வந்தன. இதையடுத்து ரயிலின் வேகம் குறைக்கப்பட்டது. இருப்பினும் ரயில் எருமை மாடுகளின் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. நவீன தொழில் நுட்பம் மற்றும் ரயில் என்ஜின் பைலட்டுகளின் சாமர்த்தியம் ஆகியவற்றால் பயணிகள் காயமின்றி தப்பித்தனர். இதையடுத்து உடனடியாக சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள், ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து ரயில் என்ஜினை சரிசெய்தனர். இதையடுத்து மீண்டும் அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மதத்திற்குள் 74 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.வ.ஜெகதீஸ் குமார்

அதிமுகவில் இணைந்த திமுகவினர்: எடப்பாடி ட்விஸ்ட்!

‘ஆதி புருஷ்’ படத்துக்கு கிளம்பிய எதிர்ப்பு: இதுதான் காரணம்!

Comments are closed.