பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று சட்டமன்றத்திற்கு கருப்பு உடையில் வந்து சலசலப்பை ஏற்படுத்தினார்.
மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்குக் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று(மார்ச் 27) தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கருப்பு உடையில் வந்திருந்தனர்.
ராகுல் காந்தி தகுதி நீக்கத்தைக் கண்டித்து சட்டமன்றத்துக்கு கருப்பு சட்டை அணிந்து வரப் போவதாக நேற்றே சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்திருந்தார்.
அதன்படியே காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடைஅணிந்து தலைமைச் செயலக வளாகத்தில் இன்று கூட்டியிருந்தனர்.
இந்நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் சட்டமன்றத்திற்கு கருப்பு உடையில் வந்திருந்தார். இதனைக் கண்ட சட்டமன்ற வளாகத்தில் இருந்த உறுப்பினர்கள் உட்பட அனைவரது கவனமும் அவர்மீது திரும்பியது.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி சிரித்துக் கொண்டே வானதியைப் பார்த்து, ‘நீங்களும் எங்களுக்கு ஆதரவா? வாங்க வாங்க’ என்று அழைத்தார்.
அப்போதுதான் காங்கிரஸ் உறுப்பினர்களின் கருப்பு உடைக்கான காரணம் குறித்து அறிந்த வானதி ஆச்சரியம் அடைந்தார்.

’ஐ டோன்ட் நோ’ என்று சிரித்துக் கொண்டே காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணியிடம் சொல்லிக் கொண்டே சட்டமன்றத்திற்குள் சென்றார் வானதி சீனிவாசன்.
சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது வானதி சீனிவான் கேள்விகேட்க எழுந்தபோது சபாநாயகர் அப்பாவு,
‘காங்கிரஸ் காரங்க யூனிஃபார்ம்ல வந்திருக்காங்க. நீங்களும் அதே யூனிஃபார்ம்ல வந்திருக்குற மாதிரி எனக்குத் தெரியுது’ என்று நகைச்சுவையாக கேட்டார்.
அதற்கு, ‘தமிழ்நாட்டிலே எமர்ஜென்சியின்போது எப்படியெல்லாம் ஆளுங்கட்சியின் தலைவர்கள் சிரமப்பட்டார்கள் என்பதை நினைவூட்டுவதற்காக நான் கருப்பு உடையில் வந்திருக்கிறேன்” என்று சமயோசிதமாக விளக்கம் அளித்தார் வானதி சீனிவாசன்.
மோனிஷா
குரூப் 4 குளறுபடி: பிடிஆர் விளக்கம்!