சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 17) ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஊடகங்களின் வாயிலாகச் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது என்று தற்போது தெரிந்துகொண்டேன். அதிமுக ஆட்சிக் காலத்தில் அவர் அமைச்சராக இருந்த போது பணம் வாங்கிக்கொண்டு பணிநியமனம் செய்தார் என்பது தான் குற்றச்சாட்டு.
இதில் 1000க்கும் மேற்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தில் அவர் ஒரு முக்கியமான நபர் என்பதால், அவருக்கு எதிராகச் சாட்சி சொல்ல நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார்கள். அதனால்தான் அவர் இத்தனை நாட்கள் சிறையிலிருந்தார். தற்போது அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.
இதை நாங்கள் எப்படி பார்க்கிறோம் என்றால் , தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் அனைவருமே, அவர்களின் வழக்கு விசாரணையை விரைவில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
ஏன் என்றால் பெரும்பாலான நேரங்களில் சாட்சிகளை அவர்கள் ‘ஹோல்ட்’ செய்வதும், மிரட்டுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதிலும் இப்போது இருக்கும் திமுக அரசு, குற்றம் சாட்டப்பட்டவர்களை நியாயமாக விசாரிப்பதற்கு அனுமதிப்பது இல்லை. இதுதான் வரலாறு.
அதனால் திமுக அரசு அவர்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வழக்கை நீர்த்துப்போக செய்யாமல் இருக்க வேண்டும்.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, அதிமுக அரசில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது உள்ள ஊழல் வழக்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் தான் பேசியிருந்தார்.
இன்றைக்குச் செந்தில் பாலாஜி திமுகவிற்கு மாறியிருப்பதால். அதை அவர் மறந்திருக்கலாம். ஆனால் மக்கள் இதை மறந்திருக்க மாட்டார்கள். ஆகையால் இதை மனதில் வைத்துக்கொண்டு இந்த அரசு செயல்பட வேண்டும்.” என்று கோரிக்கை வைத்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்…”15 மாத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி” – ஜோதிமணி
“செந்தில் பாலாஜியை வரவேற்கிறேன்” – ஸ்டாலின் மகிழ்ச்சி!
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு!