முதல்வர் ஸ்டாலினை பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று (ஆகஸ்ட் 20) நேரில் சந்தித்து பேசினார்.
பாஜக தேசிய மகளிரணித் தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்தார்.
முன்னதாக கலைஞர் நாணைய விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு நாணயத்தை வெளியிட்டதும், கலைஞர் நினைவிடத்தில் அண்ணாமலையை முன்னாள் வருமாறு ஸ்டாலின் அழைத்தும் அரசியல் அரங்கில் பேசு பொருளானது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக பாஜகவுடன் ரகசிய உறவு வைத்திருப்பதாக கூறிவருகிறார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் முதல்வர் ஸ்டாலினை வானதி சீனிவாசன் சந்தித்திருப்பது விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
முதல்வரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக இருப்பது கோவை விமான நிலைய விரிவாக்கம். கோவை விமான நிலையத்தை சர்வதேச தரத்திலான விமான நிலையமாக மாற்றுவதற்கு மாநில அரசு நிலங்களை கையகப்படுத்திக் கொடுப்பதில் தாமதத்தை ஏற்படுத்தி வந்தது.
இப்போது தேவைப்படும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீடுகளை மாநில அரசு கொடுத்ததற்கு பின், விமான போக்குவரத்து ஆணையத்துக்கு கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலங்களை கொடுக்க அரசு தயாராக இருக்கிறது என்று முதல்வர் தெரிவித்தார்.
கோவைக்கு ஒரு நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்.
இதனிடையே முதல்வர் கோவை வந்திருந்த போது தொகுதி சார்ந்த விஷயங்களை பேச நேரம் கேட்டிருந்தேன். இன்றுதான் நேரம் கொடுத்தார். கோவை தெற்கு தொகுதிக்கு என்ன என்ன வேண்டுமென முதல்வரிடம் தெரிவித்திருக்கிறேன். நேரம் கொடுத்த முதல்வருக்கு நன்றி” என கூறினார்.
“திமுக, பாஜக உறவு குறித்து நிறைய பேசி கொண்டிருக்கிறார்கள். அதற்குள் செல்ல நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்” என்றும் தெரிவித்தார் வானதி சீனிவாசன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஆம்ஸ்ட்ராங் கொலை… இயக்குனர் நெல்சன் மனைவியிடம் விசாரணை!
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு தீர்ப்பு… மீண்டும் ஒத்திவைப்பு!