அன்னபூர்ணா உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தோமா? – வானதி சீனிவாசன் பேட்டி!

அரசியல்

ஜிஎஸ்டி குறித்து கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து சீனிவாசன், நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்டார்.

இந்த விவகாரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்டோர் நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்கவைக்கவில்லை என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் இன்று (செப்டம்பர் 13) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “கோவை ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் சீனிவாசன். மிக நீண்ட அனுபவம் வாய்ந்தவர். சமுதாயத்தில் மிகவும் மதிக்கத்த நபர். எனக்கு சகோதரர் மாதிரி. இரண்டு பேரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் தான்.

நிர்மலா சீதாராமன் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில், காரத்திற்கும் இனிப்பிற்கும் ஒரே மாதிரி ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்போது, அவரது கடைக்கு சென்று நான் ஜிலேபி, ஸ்வீட், காரம் சாப்பிட்டதாக சொன்னார். அந்த இடத்திலேயே நான் அவரிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியிருக்க முடியும். ஆனால், நான் எதுவும் சொல்லவில்லை,

ஏனென்றால் அது ஒரு பொதுமேடை. பின்னர் நான் இதை பற்றி பேசவில்லை. மறுநாள் காலை 7 மணியில் இருந்து அவர் தொடர்ச்சியாக எனக்கு போன் செய்தார். நான் அமைச்சரிடம் தவறுதலாக பேசிவிட்டேன், அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், நேரம் ஒதுக்கி தாருங்கள் என்றார்.

காலையில் வாய்ப்பில்லை, மதியம் பார்க்கலாம் என்று அவரிடம் சொன்னேன். மதியத்திற்கு மேல் ஓட்டலுக்கு வந்தார். மதியம் 2.30 மணிக்கு ஓட்டலுக்கு வந்து, நான் பேசிய விஷயம் தவறு. உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டேன். சோஷியல் மீடியாவில் வைரலாக வேறு மாதிரி போய்விட்டது. அதனால் நீங்கள் மனது புண்பட்டிருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் ஆர்.எஸ்.எஸை சார்ந்தவன் தான் என்று சொன்னார். அந்த வீடியோவும் எங்களிடம் இருக்கிறது.

உடனே அமைச்சர், ஜிஎஸ்டி பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்? அதற்கு பதிலளிப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது? உங்கள் தொகுதியை சேர்ந்த ஒரு பெண் எம்.எல்.ஏ அவர்கள் உங்கள் கடையில் வந்து என்னென்னவெல்லாம் சாப்பிட்டார் என்று பொதுவெளியில் பேசுவது முறையா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சீனிவாசன் என்னிடம் மன்னிப்பு கேட்டார். நீங்கள் சகோதரி மாதிரி தான். ஏதோ அந்த நேரத்தில் தவறுதலாக பேசிவிட்டேன் என்றார்.

அரசியல் என்பது சவால் நிறைந்த, போராட்டம் நிறைந்த பாதை. இன்றைக்கும் பெண்களுக்கு சம வாய்ப்புகளும், சம உரிமைகளும் இல்லை. அதனால் என் மீது கருணை காட்டுங்கள் என்று நான் சொல்லவில்லை. அதேமேடையில், ஒரு ஆண் அமைச்சரோ, எம்.எல்.ஏவோ இருந்தால் இந்த மாதிரியான பேச்சுக்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? என்பதை யோசித்து பாருங்கள்.

ஆளும் கட்சியை சேர்ந்த மாநில அமைச்சர்கள் தேர்தல் இல்லாத சமயங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்திருக்கிறார்களா? தமிழகத்தில் பெண் அமைச்சரோ, எம்.எல்.ஏ-வோ பொதுவெளியில் சென்றால் அவர்களை எளிதாக கேள்வி கேட்டு அதனை வீடியோவாக வெளியிடுவது இயல்பாக இருக்கிறது. ஏனென்றால் சமுதாயத்தின் பார்வையில் எவ்வளவு உயர்ந்த பொறுப்புக்கு சென்றாலும் பெண்கள் தானே என்ற பார்வையாக இருக்கிறது.

அதனால், நாங்கள் அவரை மிரட்டி கூட்டிக்கொண்டு வந்து மன்னிப்பு கேட்கவைக்கவில்லை. ஆணவத்தில் அதிகாரத்தில் தொழிலதிபரை மன்னிப்பு கேட்க வைப்பீர்களா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதில் சாதியை வேறு இழுக்கிறார்கள்.

சமூகநீதி பேசுகிற தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது நடக்கும் வன்முறையில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது.  திமுகவின் பொய்களை பார்லிமெண்டில் நிர்மலா சீதாராமன் தோலுரிக்கிறார் என்பதால் இந்த சம்பவத்தில் ஜாதி வர்ணம் பூசுகிறார்கள். அன்னபூர்ணா ஓனரிடம் நேரடியாக சென்று நான் சொன்ன விஷயத்தில் பொய் இருக்கிறதா என்பதை நீங்கள் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

இந்த வீடியோவை ஹோட்டலில் இருந்த சில கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்கள். பொதுமேடையில் அவர் அப்படி பேசியதால் எங்கள் கட்சிக்காரர்களுக்கும் வருத்தம் இருக்கிறது. அவர் மன்னிப்பு கேட்ட வீடியோவை வெளியிட்டதில் நான் சரி தவறு என்ற விவாதத்திற்குள் செல்லவில்லை.

ஒருபக்கம் பிரச்சனை என்றால், மறுபக்கம் ஆக்‌ஷன் இருக்கத்தான் செய்யும். கடந்த ஒரு மாதமாக இந்த நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்தோம். ஆனால், இந்த பிரச்சனையை முன்னிறுத்தி மட்டுமே இந்த விவகாரம் திசைமாறியுள்ளது” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னையில் நேற்று இரவு பவர்கட்… தங்கம் தென்னரசு விளக்கம்! 

அன்னபூர்ணா உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைப்பதா? – கொந்தளித்த கனிமொழி, ஜோதிமணி

+1
0
+1
1
+1
0
+1
1
+1
5
+1
0
+1
0

1 thought on “அன்னபூர்ணா உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தோமா? – வானதி சீனிவாசன் பேட்டி!

  1. இப்ப தெரியுதா மக்களே, வடநாட்டு பத்திரிகை ஆளுங்க ஏன் நம்ம ஜியை புகழோ புகழ்னு புகழ்றாய்ங்கனு புரியுதா இப்ப…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *