அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு தமிழ்நாட்டில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா வரும் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநில அரசுகளும் அயோத்தி ராமர் கோவில் விழாவை முன்னிட்டு விடுமுறை அறிவித்துள்ளன.
அந்த வகையில் தமிழ்நாட்டிற்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன்,
“ராமபிரானின் முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் தமிழகத்தோடு தொடர்புடையது. பிரதமர் இன்று காலை ஸ்ரீரங்கநாதரை தரிசிக்கிறார். பின்னர் ராமேஸ்வரம் செல்கிறார்.
இலங்கையில் போரில் ராமன் வெற்றி பெற்ற பிறகு சீதையுடன் இணைந்து சிவனை வழிபட்ட இடம் ராமேஸ்வரம்.
ராமர் பூஜை செய்த இடத்தில் பிரதமர் வழிபாடு செய்த பின்னர் கம்பராமாயணத்தை கேட்க உள்ளார். இது பாரம்பரிய ரீதியாக, கலாச்சார ரீதியாக இருக்கின்ற பிணைப்பு. அயோத்தி ராமருக்கும் தமிழகத்திற்கும் இருக்கின்ற பிணைப்பு என்பது மிக மிக நெருக்கமானது.
அந்த வகையில் ராமர் தொடர்புடைய இடங்களுக்கு பிரதமர் சென்று விட்டு பின்னர் அயோத்திக்கு சென்று ஸ்ரீராமனின் பிராண பிரதிஷ்டாவில் கலந்து கொள்வது என்பது மிகவும் பொருத்தமானது.
அதனை தமிழகத்திற்கும் கிடைத்திருக்க கூடிய பெருமையாக நாங்கள் பார்க்கிறோம். ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு தமிழகத்தில் விடுமுறை என்ற அறிவிப்பு வந்தால் நாங்கள் அதனை வரவேற்போம். அதனை சந்தோஷமாக கொண்டாடுவோம். ஏனென்றால் ராமபிரான் இருக்கக் கூடிய பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான். மாநிலத்தின் முதல்வர் கோவிலுக்கு செல்ல மாட்டார். ஆனால் கோவிலுக்கு செல்பவர்களை நாங்கள் தடுக்கவில்லை, இடையூறு செய்வதில்லை என்று சொல்கிறார். அதனால் பெரும்பான்மையான மக்கள் வணங்குகின்ற ஸ்ரீராமபிரானின் இந்த முக்கியமான நாளில் அவர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
திமுகவின் தேர்தல் குழுக்கள்: கொங்கு சலசலப்பு!
தளபதி விஜய் குறித்த கேள்விக்கு… மாளவிகா மோகனன் ஷார்ப் பதில்!