திமுகவை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் மதுரை மாநாட்டின் நோக்கம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொன்விழா மாநாடு மதுரையில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். காலை மாநாடு நடைபெறும் இடத்தில் 51 அடி கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றினார். இதனை தொடர்ந்து அதிமுக மாநாட்டில் பட்டிமன்றம், இசை, பாடல் கச்சேரிகள் என கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
கலை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசியபோது, “சிலுவம்பாளையம் என்ற கண்ணுக்கு தெரியாத கிராமத்தை இன்று அனைவருக்கும் தெரிய வைத்தது எடப்பாடி பழனிசாமி தான். அதியமான் அவ்வைக்கு கொடுத்தது நெல்லிக்கனி ஜெயலலிதா நமக்கு கொடுத்தது தங்க கனி. இந்த மாநாட்டிற்கு ஆகஸ்ட் 20-ஆம் தேதியை அறிவித்தது ஒரு அர்த்தத்தோடு தான். அதிமுக ஆரம்பித்த அதே ஆண்டில் திண்டுக்கல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் அதிமுக வென்றது. அன்றைக்கு முடங்கிய திமுகவால் எம்ஜிஆர் மறைந்த வரை ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
ஆகஸ்ட் மாதத்தில் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. வெள்ளையனே வெளியேறு என்று காந்தியடிகள் வெள்ளையர்களுக்கு எதிராக போர் முழக்கம் எழுப்பினர். இன்றைக்கு மதுரை மாநகரில் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் திமுகவிற்கு எதிராக முழக்கம் எழுப்பிக்கொண்டிருக்கிறோம். எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த வேண்டும் என்று சில கூட்டங்கள் புறப்பட்டிருக்கிறது. வானில் வட்டமடித்து பறக்கும் வானம்பாடி எடப்பாடியார். அவரை கூட்டுக்குள் பூட்டி சிறை வைக்க சிலர் முயன்றால் திமிறி எழுவார். திமுகவை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் இந்த மாநாட்டின் நோக்கம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
இண்டர் மியாமிக்கு முதல் கோப்பை… மெஸ்ஸியை கொண்டாடும் அமெரிக்கா!
ஜவான் படத்தை ரூ.22 கோடிக்கு வாங்கிய நிறுவனம்!