விடுதலை சர்ச்சை: தியேட்டரில் நடந்தது என்ன? வளர்மதி விளக்கம்!

அரசியல்

வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்த விடுதலை திரைப்படம் மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் விமர்சன ரீதியாகாவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விடுதலை திரைப்படம் வெளியான அன்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் பொதுநல மாணவ எழுச்சி இயக்கத்தின் நிறுவனரும், சமூக செயற்பாட்டாளருமான வளர்மதி ஒன்பது வயது பெண் குழந்தை மற்றும் 4 பேருடன் படம் பார்க்க சென்றுள்ளார்.

விடுதலை திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதால் குழந்தைக்கு படம் பார்க்க அனுமதியில்லை என்று டிக்கெட் பரிசோதகர் அவரிடம் தெரிவித்துள்ளார். டிக்கெட் பரிசோதகர் மற்றும் திரையரங்க மேலாளர் விக்னேஷ் ஆகியோரிடம் வாக்குவாதம் செய்து தனது குழந்தையை திரையரங்கிற்குள் வளர்மதி அழைத்து சென்றுள்ளார்.

இதுகுறித்து திரையரங்க மேலாளர் விக்னேஷ் விருகம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். திரையரங்கிற்கு வந்த காவல்துறையினர் வளர்மதியிடம் பெண் குழந்தையை வெளியே அழைத்து செல்ல கூறியிருக்கிறார்கள்.

இதனால் வளர்மதி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக திரையரங்க மேலாளர் விக்னேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் காவல்துறையினர் வளர்மதி மீது அத்துமீறி நுழைதல், பொது இடத்தில் பிரச்சனையில் ஈடுபடுதல், திரைப்பட சட்டம் 1952 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மின்னம்பலத்திடம் பேசிய வளர்மதி, “திரையரங்க மேலாளர் விக்னேஷ் எனது குழந்தையை படம் பார்க்க அனுமதிக்காததால் அவரிடம் 20 நிமிடங்களுக்கு மேல் வாக்குவாதம் செய்தேன். அதன்பிறகே அவர் திரையரங்கிற்குள் செல்ல அனுமதித்தார்.

பின்னர் தியேட்டரில் இருந்த குழந்தைகளை புகைப்படம் எடுத்து கமிஷனருக்கு அனுப்ப போகிறோம், படத்தை பாதியில் நிறுத்துவோம் என்று மிரட்டும் தொனியில் பேசினார். 10 நிமிடங்கள் தாமதமாக தான் படம் திரையிடப்பட்டது. இனிமேல் பிரச்சனை செய்ய மாட்டார்கள் என்று நினைத்தோம். ஆனால் காவல்துறையை அழைத்து வந்து படத்தை பாதியில் நிறுத்தினார்கள்.

வீடியோவில் நான் பேசுவது மட்டும் தான் தெரிகிறது. திரையரங்கில் இருந்த 75 சதவிகித பேர் காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். பெரும்பான்மை மக்களுடைய முடிவு இவர்கள் கொடுத்த ‘ஏ’ சான்றிதழக்கு எதிராக உள்ளது.

இதே விடுதலை படத்தை நாளைக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்ப மாட்டார்களா? பாகுபலி படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது. அதனை சிறுவர்கள் திரையரங்கிற்கு சென்று பார்க்கவில்லையா?

இந்த படத்தை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பார்க்க கூடாது என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. 40 வயதில் ரத்தத்தை பார்த்து மயங்கி விழக்கூடியவர்கள் இருக்கிறார்கள். 15 வயதில் அதனை எளிதாக கடந்து செல்லக்கூடிய குழந்தைகளும் இருக்கிறார்கள்.

ஜிப்சி படத்திற்கு 52 கட் செய்திருக்கிறார்கள். ஆளுங்கட்சிக்கு எதிரான வசனங்களோ, காட்சிகளோ வந்து விடக்கூடாது என்பதில் சென்சார் போர்டு கவனமாக செயல்படுகிறது.

கலைத் துறையில் கலைஞர்களுக்கான சுதந்திரம் இருக்கிறது. ஆபாச நடனம், டபுள் மீனிங் படங்களை சென்சார் போர்டு தடை செய்திருக்க வேண்டும். ஆனால் அதுபோன்ற படங்களில் எந்த காட்சிகளையும் கட் செய்வதில்லை. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பு செய்கிறார்கள். அதனை குழந்தைகளும் பார்க்க தான் செய்கிறார்கள்.

விடுதலை திரைப்படம் முழுக்க முழுக்க காவல்துறையின் அராஜகத்தைக் காட்டுகிறது. எனக்கு இந்த படத்தை பார்த்தபோது வாச்சாத்தி, வீரப்பன் தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் செய்த அட்டூழியங்கள் தான் நினைவுக்கு வந்தது. காவல்துறையினர் அராஜகத்தை பற்றி படம் பேசுவதால் படத்தை பார்க்க கூடாது என்று தடுக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

செல்வம்

ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு: இன்று விசாரணை!

ஸ்டாலின் தலைமையில் இன்று சமூக நீதி தேசிய மாநாடு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *