ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக தங்கள் தலைவரான வாஜ்பாயின் கருத்தை பின்பற்றியிருக்க வேண்டும் என்று தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இன்று (மார்ச் 25 ) கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் சமயத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இது தொடர்பாக குஜராத் பாஜக எம்.எல்.ஏ. புருனேஷ் மோடி தொடுத்த அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி நேற்று (மார்ச் 24 ) ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தனது சொந்த மாநிலமான பீகாரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், “நான் ஒன்னும் சட்ட நிபுணர் அல்ல.. ஆனாலும், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனை அதிகம் என்றே நினைக்கிறேன்… தேர்தல் காலத்தில் அரசியல் தலைவர்கள் ஆவேசமாகத் தான் பேசுவார்கள்.
தேர்தல் காலத்தில் ஒருவர் இதுபோல பேசுவது இது முதல்முறை இல்லை.. இது கடைசி முறையாகவும் நிச்சயம் இருக்காது. இது ஒரு அவதூறு வழக்கு. இதற்கு இரண்டு ஆண்டுகள் சிறை எல்லாம் அதிகம் என்றே நான் நினைக்கிறேன்” என்றார்.
மேலும், “மத்தியில் இருப்பவர்களிடம் நான் வாஜ்பாயின் ஒரு பிரபலமான வரியை நினைவூட்ட விரும்புகிறேன்.. சிறிய இதயம் கொண்டவர்கள் யாரும் பெரியவர்களாக மாற மாட்டார்கள். ஆளும் தரப்பில் இருப்பவர்கள் சட்ட நுணுக்கங்களைக் காரணம் காட்டுகின்றனர்.
ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையைச் சுட்டிக் காட்டி ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் தவிர்க்க முடியாதது என்று கூறுவார்கள். இருந்தாலும், அவர்கள் தங்கள் சொந்த தலைவரான மறைந்த வாஜ்பாயின் கருத்தைப் பின்பற்றியிருக்க வேண்டும். ராகுல் காந்தியைத் தகுதி நீக்கம் செய்ய அவசரம் காட்டியிருக்கக் கூடாது.
இன்றைக்கு அவர்கள் (பாஜக) ஆட்சியில் உள்ளனர். பெரிய மனதுடன் இருக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. அவர்கள் சில நாட்கள் காத்திருந்து, மேல்முறையீடு செய்ய அவகாசம் தந்திருக்க வேண்டும். அப்படி அவகாசம் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” என்று பிரசாந்த் கிஷோர் பேசினார்.
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கவும் பிரசாந்த் கிஷோர் தவறவில்லை, ”காங்கிரஸ் டெல்லி தலைமை ஒன்றை உணர வேண்டும். டெல்லியில் அமர்ந்து கொண்டு ஆவேசமாக ட்வீட் செய்வதன் மூலமும், நாடாளுமன்றத்திற்கு அணிவகுப்பு நடத்துவதன் மூலம் அரசியலில் வெல்ல முடியாது. நான் உதாரணம் சொல்கிறேன். இப்போது நான் சரண் மாவட்டத்தின் மர்ஹௌரா தொகுதியில் இருக்கிறேன்.
மக்களைச் சந்தித்து, இது எப்படி ஒரு அநீதி என்பதை மக்களுக்கு விளக்கும் ஒரு காங்கிரஸ் தொண்டரையும் நான் இதுவரை பார்க்கவில்லை.. நாடு முழுக்க மக்களை அவர்கள் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், இதுபோல எதையும் அவர்கள் செய்ததாகத் தெரியவில்லை” என்று காங்கிரஸ் கட்சியை பிரசாந்த் கிஷோர் விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து, “காங்கிரஸ் உள்ளிட்ட எந்தவொரு கட்சியாக இருந்தாலும் வெறும் செய்தியாளர் சந்திப்பு, ட்வீட்கள் மூலம் இருப்பை காட்டிக் கொள்ளலாம். ஆனால் கிராமங்களைச் சென்றடையாத வரை, அரசியல் போரில் வெற்றி பெற முடியாது என்பதை உணர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்