அதிமுக கரை போட்ட வேஷ்டி கட்டக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது என ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் இன்று (நவம்பர் 9) தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர் செல்வம் தரப்பு பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், “அதிமுக கரை போட்ட வேஷ்டி கட்டக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். யார் வேண்டுமானாலும் அதிமுக கரை போட்ட வேஷ்டி கட்டலாம். சிலர் தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். வேஷ்டி கட்டக்கூடாது என்று யார் சொன்னாலும் அது கேலிக்குரியது. ஹீரோ வில்லனிடம் தொடர்ந்து அடிவாங்கிக்கொண்டு இருப்பான். கடைசியில் ஒரே அடி வில்லன் அவுட்டாகி விடுவான். அதுபோல தான் சட்டபோராட்டங்களில் இறுதியில் நாங்கள் வெல்வோம்.
அதிமுக ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற மனநிலையில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளார். தேர்தல் நேரத்தில் சசிகலாவை சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் ஓ.பன்னீர் செல்வம் அவரை சந்திப்பார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!