வைத்திலிங்கம் வழக்கு… சிஎம்டிஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!

அரசியல்

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஸ்ரீராம் நிறுவனத்திற்கு அடுக்குமாடி கட்டிடம் கட்ட திட்ட அனுமதி கொடுத்த ஆவணங்கள் தொடர்பாக சிஎம்டிஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்டோபர் 23) ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக வைத்திலிங்கம் இருந்தார்.

2013ஆம் ஆண்டு சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்துக்கு சொந்தமான ஸ்ரீராம் பிராபர்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட்  நிறுவனம் 57.94 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்ட அனுமதி கேட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (சிஎம்டிஏ) விண்ணப்பித்தது.

இந்த திட்டத்திற்கு 2016-ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதி வழங்குவதற்கு அப்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்திற்கு ஸ்ரீராம் நிறுவனம் ரூ.27.9 கோடி லஞ்சம் கொடுத்ததாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தது.

இந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு, ஸ்ரீராம் பிராபர்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் இயக்குநர் கே.ஆர்.ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறையினரின் எஃப்.ஐ.ஆரை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள வைத்திலிங்கம் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், சென்னை சேப்பாக்கம் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் உள்ள வைத்திலிங்கம் அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், சிஎம்டிஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ஸ்ரீராம் நிறுவனத்திற்கு அடுக்குமாடி கட்டிடம் கட்ட திட்ட அனுமதி கொடுத்த ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

எதன் அடிப்படையில் திட்ட அனுமதி கொடுக்கப்பட்டது? முறையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கிறதா? எவ்வளவு தொகைக்கு திட்ட அனுமதி கொடுக்கப்பட்டது? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நிஜ வாழ்க்கையில் இதை செய்யாததுதான் என் தவறு- நடிகை சமந்தா உருக்கம்!

சென்னை – திருச்சி பாலத்தில் விரிசலா? – வைரல் வீடியோ உண்மையா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0