துணை முதலமைச்சராக இன்று (செப்டம்பர் 29) பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் போகிறார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டது. விளையாட்டுத்துறையை கவனித்து வரும் உதயநிதி, திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்துறையின் அமைச்சராகவும் கூடுதலாக கவனிக்க உள்ளார்.
அத்துடன் அமைச்சர்களான மனோ தங்கராஜ்(பால்வளத்துறை), செஞ்சி கே.எஸ்.மஸ்தான்(சிறுபான்மையினர் நலத்துறை), கே.ராமச்சந்திரன்(சுற்றுலாத்துறை) ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்குமாறு முதல்வர் அளித்த பரிந்துரைக்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
மேலும் தற்போது ஜாமீனில் வெளியே வந்த செந்தில்பாலாஜிக்கும் மீண்டும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போன்று டாக்டர் கோவி.செழியன், சா.மு.நாசர், பனைமரத்துப்பட்டி ஆர்.ராஜேந்திரன் ஆகியோரும் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று மாலை 3.30 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளனர்.
இந்த நிலையில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், “துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின் உங்களை வாழ்த்துகிறேன்.
உங்கள் அன்னையைப் போலவே நானும் மகிழ்கிறேன்.
இந்த உயர்வு பிறப்பால் வந்தது என்பதில் கொஞ்சம் உண்மையும்
உங்கள் உழைப்பால் வந்தது என்பதில் நிறைய உண்மையும் இருக்கிறது.
பதவி உறுதிமொழி ஏற்கும் இந்தப் பொன்வேளையில்
காலம் உங்களுக்கு மூன்று பெரும் பேறுகளை வழங்கியிருக்கிறது.
முதலாவது உங்கள் இளமை
இரண்டாவது உங்கள் ஒவ்வோர் அசைவையும் நெறிப்படுத்தும் தலைமை
மூன்றாவது உச்சத்தில் இருக்கும் உங்கள் ஆட்சியின் பெருமை
இந்த மூன்று நேர்மறைகளும் எதிர்மறை ஆகிவிடாமல் காத்துக்கொள்ளும் வல்லமை உங்களுக்கு வாய்த்திருக்கிறது.
உங்கள் ஒவ்வோர் நகர்வும் மக்களை முன்னிறுத்தியே என்பதை மக்கள் உணரச் செய்வதே உங்கள் எதிர்காலம்;
என் பாடலைப் பாடிய ஒரு கலைஞன் துணை முதல்வராவதை எண்ணி என் தமிழ் காரணத்தோடு கர்வம் கொள்கிறது.
கலைஞர் வழிகாட்டுவார் துணை முதல்வராகும் நீங்கள் இணை முதல்வராய் வளர வாழ்த்துகிறேன்” என வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி… வாரிசு அரசியலின் அடையாளம்’ : தமிழிசை
இடிந்து விழுந்த காரைக்கால் மருத்துவமனை: பயந்தோடிய நோயாளிகள்!