கர்நாடக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நேற்று (ஏப்ரல் 27) தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாதியில் நிறுத்தப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு ஆதிக்கம் செலுத்தும் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவினரின் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.
அதன்படி கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் வாக்குகளை சேகரிக்கும் வகையில் நேற்று சிவமொக்கா என்இஎஸ் மைதானத்தில் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் கர்நாடக முன்னாள் அமைச்சரும், பாஜக சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். ஈஸ்வரப்பா மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. இருப்பினும் சில நிமிடங்களிலேயே, மேடையில் எழுந்து நின்ற ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும், அவரின் வற்புறுத்தலின் பேரில் கன்னடத்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் பரவிய நிலையில் இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆதிமொழிக்கு அவமானம்
இந்த சம்பவம் தொடர்பாக கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில், “கர்நாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது கண்டு இடிவிழுந்த மண்குடமாய் இதயம் நொறுங்கியது.
ஒலிபரப்பாமல் இருந்திருக்கலாம்; பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம். கன்னடத்துக்குள் தமிழும் இருக்கிறது; திராவிடத்திற்குள் கன்னடமும் இருக்கிறது. மறக்க வேண்டாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
CSKvsRR : 200வது போட்டியில் ராஜஸ்தான் அணி படைத்த சாதனை பட்டியல்… இதோ!
மந்தமான பொன்னியின் செல்வன்-2 டிக்கெட் விற்பனை!
அட அட என்ன பற்று… அக்கா கருத்து சொல்லுங்க அண்ணனின் பற்று பத்தி… சர சர…..