முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து, அவர் குறித்து தான் வாசித்த கவிதை வீடியோவை பகிர்ந்துள்ளார்.
முன்னாள் திமுக தலைவரும், முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பிரபலங்கள் பலரும் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து கடந்த 2018ம் ஆண்டு கலைஞரை நேரில் சந்தித்து அவர் முன் தான் கவிதை வாசித்த வீடியோவை தற்போது நினைவஞ்சலியாக பகிர்ந்துள்ளார். வைரமுத்து கவிதை வாசிக்க கலைஞர் ரசித்தபடி அதனை கேட்கும் வீடியோ குறித்து பலரும் நெகிழ்ந்து வருகின்றனர்.
அந்த கவிதையானது,
பிடர் கொண்ட சிங்கமே பேசு
இடர்கொண்ட தமிழ்நாட்டின்
இன்னல்கள் தீருதற்கும்
படர்கின்ற பழைமை வாதம்
பசையற்றுப் போவதற்கும்
சுடர் கொண்ட தமிழைக் கொண்டு
சூள் கொண்ட கருத்துரைக்கப்
பிடர் கொண்ட சிங்கமே
நீ பேசுவாய் வாய் திறந்து
யாதொன்றும் கேட்கமாட்டேன்
யாழிசை கேட்கமாட்டேன்
வேதங்கள் கேட்கமாட்டேன்
வேய்க்குழல் கேட்கமாட்டேன்
தீதொன்று தமிழுக் கென்றால்
தீக்கனல் போலெழும்பும்
கோதற்ற கலைஞரே
நின்குரல் மட்டும் கேட்க வேண்டும்
இடர்கொண்ட தமிழர் நாட்டின்
இன்னல்கள் தீருதற்கும்
படர்கின்ற பழைமை வாதம்
பசையற்றுப் போவதற்கும்
சுடர் கொண்ட தமிழைக் கொண்டு
சூள் கொண்ட கருத்துரைக்கப்
பிடர் கொண்ட சிங்கமே
நீ பேசுவாய் வாய் திறந்து.. என்று விவரிக்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
சிறப்புக் கட்டுரை: நவீன சென்னையை வடிவமைத்த கலைஞர்!