மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் வாழ்க்கையை ஆவணப்படமாக வெளியிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
வைகோவின் அரசியல் பயணத்தை விவரிக்கும் வகையில் ”மாமனிதன் வைகோ தி ரியல் ஹீரோ” என்ற தலைப்பில் ஆவணப்படத்தை வைகோவின் மகனும் மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளருமான துரை வைகோ உருவாக்கியிருக்கிறார்.
இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வரை தமிழக உரிமைகளுக்காகவும் மக்கள் பிரச்சனைகளுக்காகவும் வைகோ குரல் கொடுத்து முன்னெடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படத்தை உருவாக்க வேண்டும் என்பது வைகோவின் மகன் துரை வைகோவின் 7 வருடக் கனவு, 3 வருட முயற்சி, 1 வருட உழைப்பில் ஆவணப்படம் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை இன்று (செப்டம்பர் 11) சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
கி.வீரமணி, கே.எஸ். அழகிரி, நல்ல கண்ணு, திருமாவளவன், ஜவாஹிருல்லா, முத்தரசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் வைரமுத்து உள்ளிட்டோரும் விழாவில் கலந்துகொண்டனர்.
ஆவணப்பட வெளியீட்டிற்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
“திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டவை. வைகோ ஒரு ரியல் ஹீரோ. அவர் ஒரு உணர்ச்சிமிக்க, எழுச்சிமிக்க ஒரு போராளி வைகோ. 56 வருடம் வைகோவின் அரசியல் வாழ்வு.
அதனை 1.30 மணி நேரத்தில் கொண்டு வந்து சேர்க்க முடியாது. ஆனால் அதனை மிகச் சிறப்பாக, மிகுந்த உணர்ச்சியோடு, நமக்கெல்லாம் ஒரு பெரிய பாடமாக உருவாக்கித் தந்திருக்கக் கூடிய துரை வைகோ அவர்களைப் பாராட்டுகிறேன்.
வைகோ கோபாலபுர இல்லத்திற்கு கலைஞருக்கு உடல்நிலை சரியில்லாத போது பார்க்க வந்திருந்தார்.
அப்போது கலைஞரின் கையை பிடித்துக் கொண்டு ’அண்ணா கவலைப் படாதீர்கள், உங்களுக்கு எப்படி பக்கபலமாக நான் இருந்தேனோ, அதுபோல தம்பி ஸ்டாலினுக்கு இருப்பேன்’ என்று கலைஞரிடம் கூறினார்.
வைகோவைப் பற்றிப் பேச நிறைய விஷயங்கள் உள்ளது. அதற்கு நேரம் போதாது. அண்ணன் வைகோ இந்த சமுதாயத்துக்கு நல்ல உடல்நலனோடு தொடர்ந்து பாடுபட வேண்டும், பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
தனது கருத்தை ஏற்று 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவை உறுப்பினராக செல்ல சம்மதம் தெரிவித்ததற்கும் தற்போது நன்றி தெரிவித்தார் ஸ்டாலின்.
நிகழ்ச்சி முழுவதும் உருக்கம், நெகிழ்வு என்றே சென்றது.
மோனிஷா