தற்கொலைக்கு முயற்சித்த மதிமுக எம்.பி கணேசமூர்த்தி உயிர்பிழைக்க 50க்கு 50 சதவீதம் தான் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றவர் கணேசமூர்த்தி.
நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், நேற்று காலை தனது வீட்டில் திடீரென பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
உயிருக்கு போராடிய நிலையில் அவரை கண்ட குடும்பத்தினர், உடனடியாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கணேசமூர்த்தி அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனை கேள்விப்பட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, துரைவைகோ இருவரும் நேற்று இரவு கோவை மருத்துவமனைக்கு நேரில் சென்று கணேசமூர்த்திக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ பேசுகையில், “கணேச மூர்த்தி கல்லூரி காலத்தில் இருந்தே எனக்கு அவருடன் நல்ல தொடர்பு. அறிஞர் அண்ணாவை நேரில் பலமுறை சந்தித்தவர்.
அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அங்கும் தன்னுடைய கடமைகளை சிறப்பாகவே செய்தார்.
இம்முறை கட்சியிலே எல்லோரும் சேர்ந்து, ’துரை வைகோவை வேட்பாளராக்கி நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். கணேச மூர்த்திக்கு அடுத்த சான்ஸ் பார்ப்போம்’ என்றனர். ஆனால் அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஓட்டெடுப்பு எல்லாம் நடந்தது. அதில் 99% பேர் துரை வைகோவை நிறுத்த வேண்டும் என்றனர்.
இது கணேசமூர்த்தி வேண்டாம் என்று அல்ல. 2 சீட்டுகளை வாங்கி ஒன்றை துரைக்கும் மற்றொன்றை கணேசமூர்த்திக்கும் கொடுக்கலாம் என்று தெரிவித்தனர். அப்படியே செய்யலாம் என சொன்னேன்.
ஒருவேளை அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனாலும், சட்டமன்ற தேர்தல் ஒரு வருடத்தில் வருகிறது. ஒரு நல்ல தொகுதியில் அவரை எம்.எல்.ஏ. ஆக்கி விட்டு, அதன் பிறகு அதைவிட பெரிய பதவி ஏதாவது ஸ்டாலினிடம் சொல்லி வாங்கிக் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் காயம் எல்லாம் ஆறிவிடும் என நம்பினேன்.
ஆனால் இந்த வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகெல்லாம் நன்றாகவே பேசினார். அவரது வீட்டில் மகன், மகளிடமும் கொஞ்சம் கூட எதையும் காட்டிக்கொள்ளாமல் நன்றாகத் தான் பேசியிருக்கிறார். நேற்றுகாலை நான்கு முறை மருத்துவரிடம் பேசியுள்ளார். ஆனால், அப்பொழுதெல்லாம் அவரது பேச்சில் எந்தவித பதற்றமும், சோகத்தில் இருப்பதாக அறிகுறியோ தெரிந்து கொள்ள முடியவில்லையாம்.
அதன் பின்னர் தான் அவர் தென்னை மரத்துக்கு போடும் நஞ்சினை கலக்கி குடித்திருக்கிறார். அங்கு வந்த கபிலனிடம் ‘இதை குடித்து விட்டேன், நான் போய் வருகிறேன்’ எனக் கூறியுள்ளார். அதன் பின்னர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய முதலுதவி சிகிச்சைகள் அனைத்தும் செய்து விட்டனர்.
கணேசமூர்த்தி உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் பேசுகையில், ‘முதலுதவி சரியாக செய்ததால் தான் சிகிச்சை அளிக்க முடிகிறது. 50க்கு 50 சதவிதம் வாய்ப்புள்ளது. இது மாதிரியான நிலையில் ஏற்கனவே பலரை பிழைக்க வைத்திருக்கிறோம்.
அதற்குரிய உபகரணங்கள் மருத்துவமனையில் உள்ளது. அவற்றை பயன்படுத்தி சிகிச்சை எடுக்கும் போதும் கொஞ்சம் ரத்த அழுத்தம் குறைவதால் அவருக்கு செடிஷன் கொடுத்து மயக்க நிலையில் வைத்திருக்கிறோம்
மேலும் 2 நாள் சென்ற பின் தான் எதையும் கூற முடியும். விஷ முறிவுக்கான சிகிச்சையும் எக்மோ சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று வைகோ செய்தியாளர்களிடம் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வேலைவாய்ப்பு : இந்தியன் வங்கியில் பணி!
பாஜக வேட்பாளராக களமிறங்குகிறார் கங்கணா