”நாகாலாந்து போராடியது போல தமிழ்நாடும் போராட வேண்டும்”- ஆளுநருக்கு எதிராக வைகோ கையெழுத்து இயக்கம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று (ஜூன் 20) தொடங்கியது.

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநரை பொறுப்பில் இருந்து அகற்றக் கோரி மதிமுக சார்பில் ’ஆளுநருக்கு எதிராக கையெழுத்து இயக்கம்’ இன்று தொடங்கியது. தாயகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “மதிமுக ஜூன் 14 ஆம் தேதி நடத்திய பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளோம்.

ஆளுநர் உரையில் பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை தவிர்த்துவிட்டு வாசித்தது மன்னிக்க முடியாத குற்றம். பெரியாரும், அண்ணாவும், டாக்டர் அம்பேத்கரும் உச்சரிக்க தகுதியற்றவர்களா?

அதுமட்டுமில்லாமல் மார்க்சிசம் காலாவதியான ஒன்று என்றால், கார்ல் மார்க்ஸை பற்றி ஆளுநருக்கு என்ன தெரியும்? கார்ல் மார்க்ஸ் பெயரையும் சொல்லவில்லை.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்ததை நாமெல்லாம் பெருமையாக நினைத்துக் கொண்டு இருக்கின்ற வேளையில் வெளிநாட்டிற்கெல்லாம் சென்று முதலீடுகளை வாங்கமுடியாது என்று ஆளுநர் பேசுகிறார்.

ஒரு முதலமைச்சரின் முயற்சியை முகத்திற்கு நேராக பேசக்கூடிய ஒருவர் எப்படி ஆளுநராக இருக்கலாம்? முதலமைச்சரின் கருத்துக்களை விமர்சிப்பதற்கு இவர் (ஆளுநர்) என்ன எதிர்கட்சிக்காரரா?

ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை விமர்சிக்கின்றார் என்றால் இவரை மக்கள் தேர்ந்தெடுத்தார்களா? மத்திய சர்க்காரில் இருக்கக்கூடியவர்கள் போட்ட பிச்சை கவர்னர் பதவி.

மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ கொள்கைகளைப் பரப்பக்கூடியவர்களை ஆளுநர்களாக நியமிக்கிறது. ஆளுநர் இங்கு வந்து சனாதன தர்மத்தில் இருந்து வந்தது தான் இந்தியா என்று சொல்கிறார். இது ஒரு புதிய கண்டுபிடிப்பு.

ஆளுநர் பதவியை விட்டுவிட்டு என்ன வேண்டுமானாலும் உளறி கொள்ளுங்கள். ஆனால் அரசியல் சட்டத்திற்கு எதிராக ஒரு மும்மொழி கொள்கையை இங்கு கொண்டு வருவேன் என்று பேசிக்கொண்டிருக்கிறார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்ற வகையில் இந்தியைத் திணிக்க வேண்டும் என்று சொல்வதற்கு இவருக்கு என்ன தகுதி, உரிமை இருக்கின்றது?
ஒவ்வொரு நாளும் முதலமைச்சர் ஒரு கருத்தை சொன்னால் அதனை மறுத்து உடனே ஒரு கருத்தை சொல்கிறார். அப்படிப்பட்டவர் எப்படி ஆளுநராக இருக்கலாம்?

தமிழ்நாட்டின் முதல் விரோதி மற்றும் அரசியல் சட்டத்திற்கு விரோதி ஆளுநர் ஆர்.என்.ரவி என்பது அவரது பேச்சுக்களில் தெரிகிறது. எனவே அவரை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும்.

நாகாலாந்தில் இதே நாசக்கார வேலையை செய்ததால் அவரை மக்கள் விரட்டியடித்தார்கள். அங்கிருந்து இங்கே தூக்கிப் போட்டுள்ளார்கள். தமிழ்நாட்டு மக்களும் நாகாலாந்து மக்களை போல எதிர்த்துக் கிளர்ந்து எழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து இயக்கத்தை நாங்கள் நடத்துகின்றோம்.

எல்லோரும் கையெழுத்து இடவேண்டும். கடைத்தெருவில், கடற்கரைகளில், உணவகங்களில் பொதுமக்கள், தொழிலாளர் தோழர்கள் என அனைவரிடமும் கையெழுத்து வாங்க வேண்டும்” என்று தொண்டர்களுக்கு உத்தரவிட்டார் வைகோ.

மோனிஷா

விஜய் குறித்து அவதூறு: பாஜக பெண் நிர்வாகி கைது!

செந்தில் பாலாஜி மனைவி கேவியட் மனு தாக்கல்!

signature movement against governer rn ravi
[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts