’தமிழ்நாட்டின் உரிமையை கர்நாடகா பறிப்பதை ஏற்க முடியாது’: வைகோ கண்டனம்!

அரசியல்

தமிழ்நாட்டிற்கு சொட்டுநீர்கூட வராத வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிடுவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்ப்பாசனத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு டி.கே.சிவகுமார் நீர்பாசனத்துறை தொடர்பான முதல் கலந்தாய்வுக் கூட்டத்திலேயே,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் தடுப்பு அணை கட்டும் பணியை விரைவுப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். ஒன்றிய அரசின் அனுமதியைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறி உள்ளார்.

Vaiko condemning karnataka congress govt on megadattu dam

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு இருந்தபோது, மேகேதாட்டு அணை கட்டி, பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்தவும், 400 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நீர் மின் நிலையம் அமைக்கவும் ரூ. 9 ஆயிரம் கோடி மதிப்பிலானத் திட்டத்தைத் தயாரித்து, ஒன்றிய அரசுக்கு அனுப்பி அனுமதி பெற்றுவிட முனைந்தது.

இந்நிலையில், 2018 இல் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பின்பு மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற முதல்வர் பொறுப்பில் இருந்த எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோர் தீவிரமாக முயன்றனர்.

பசவராஜ் பொம்மை கடந்த ஆண்டு கர்நாடக சட்டமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தபோது, மேகதாட்டு அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில்தான் கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த மாதம் பொறுப்பு ஏற்றது.

கர்நாடக மாநில துணை முதல்வரான டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி வரிசையில் இருந்தபோது, மேகேதாட்டு அணை கட்ட வலியுறுத்தி,

பெங்களூருவிலிருந்து 10.01.2022 இல் நடைபயணம் தொடங்கி, 10 நாட்கள் பல ஊர்கள் வழியாகச் சென்று 19.01.2022 அன்று மேகதாட்டுவில் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்.

தற்போது மீண்டும் காங்கிரஸ் அரசு பொறுப்புக்கு வந்தவுடன், மேகேதாட்டு அணை கட்டும் பணியை தொடங்கப் போவதாக கூறி இருக்கிறது.

நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாட்டு அணை கட்டும் பணியை தொடங்குவோம். எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டோம் என்று கூறி இருப்பது கண்டனத்துக்கு உரியது.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு சொட்டுநீர்கூட காவிரியில் வராது.

உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16, 2018 இல் அளித்தத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய 177.25 டி.எம்.சி. நீர், கானல் நீராகவே போய்விடும் ஆபத்துதான் விளையும்.

எனவே ஒன்றிய பா.ஜ.க. அரசு மேகதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கவே கூடாது. தமிழ்நாட்டின் மரபு உரிமையை கர்நாடக மாநிலம் பறித்துக்கொள்வதை ஏற்கவே முடியாது.

எனவே, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழ்நாடு அரசு விரைவு படுத்த வேண்டும்” என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கலைஞர் நூற்றாண்டு விழா: ஆளுநரை நக்கலடித்த துரைமுருகன்

தமிழ்நாட்டை விட்டுப்போகும் நிறுவனங்கள்: எடப்பாடி அடுக்கும் கேள்விகள்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *