மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு!

Published On:

| By christopher

என்னுடைய மகன் துரை வைகோ வாக்கெடுப்பு மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டார். மதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை என வைகோ பேசியுள்ளார்.

ம.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 14-ந்தேதி நடைபெறுகிறது. அதை ஒட்டி அவைத்தலைவர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான உட்கட்சித் தேர்தலும் நடைபெறுகிறது. இதில் மதிமுகவைச் சேர்ந்த பலர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று (ஜூன் 1) பொதுச்செயலாளர் பதவிக்கு பூர்த்தி செய்த வேட்பு மனுவை தேர்தல் பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் பிரியகுமார், ஆ.வந்தியதேவன், ஆவடி அந்திரி தாஸ், தாயகம் ருத்திரன் ஆகியோரிடம் வைகோ வழங்கினார்.

தொடர்ந்து, அவைத் தலைவர் பதவிக்கு அர்ஜுன ராஜ், பொருளாளர் பதவிக்கு செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் பதவிக்கு துரை வைகோ ஆகியோரும் பூர்த்தி செய்த செய்த வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு மல்லை சத்யா, ஆடுதுறை மணி, ராஜேந்திரன், ரொஹையா சேக் முகமது ஆகியோர் பூர்த்தி செய்த வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

இதில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு முதன்முறையாக பெண்மணி ஒருவர் (ரொஹையா சேக் முகமது) போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பொதுச்செயலாளர் பதவிக்கு வைகோவைதவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் மதிமுகவின் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை

தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், “மதிமுகவில் எத்தனையோ புயல் வீசினாலும் இந்த இயக்கத்தை மன உறுதியுடன் நடத்தி வருகிறோம்.

என்னுடைய மகன் துரை வைகோ வாக்கெடுப்பு மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டார். மதிமுகவில் வாரிசுஅரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை. வரும் காலத்திலும் இதில் எந்தவொரு மாற்றமும் இருக்காது.

மதிமுகவில் இளைஞர்கள் அதிகமாக இணைகிறார்கள். இதனால் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி மதிமுக பயணிக்கும்” என்றார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஓய்வுபெறும் நாளில் பேருந்தை கட்டிப்பிடித்து அழுத ஓட்டுநர்!

முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு பாஜகவில் புதிய பதவி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share