மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவரது கலிங்கப்பட்டி வீட்டில் தவறி விழுந்ததில் அவரது வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவர் விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டார். மே 27 ஆம் தேதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் வைகோவின் ஹெல்த் எப்படி இருக்கிறது என்பது குறித்து இன்று (மே 28) அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
”பொதுச் செயலாளர் வைகோ நேற்று முன்தினம் கால் தடுமாறி விழுந்ததில் இடது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இந்தத் தகவலை அறிந்து, முதலமைச்சர் என்னை அழைத்து தலைவர் உடல்நிலை குறித்து விசாரித்தார்கள். நாளை தலைவரை அறுவை சிகிச்சைக்குத் தயார்படுத்த இருப்பதால் அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாள் கழித்து வீடு திரும்பிய பிறகு வந்து சந்திப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய ஆளுமைகள் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு பதற்றத்துடன் தலைவர் வைகோ அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்கள்.
அரசியல் எல்லைகளை கடந்து அவரின் மீது உள்ள உயர்ந்த மதிப்பால், அன்பால் தலைவர் நலம்பெற வேண்டும் என அனைவரும் தங்கள் விருப்பத்தை என்னிடம் அலைபேசி வாயிலாக பகிர்ந்து கொண்டார்கள்.
தலைவர் வைகோ மருத்துவ சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளார்கள். சிறிய அறுவை சிகிச்சை தான். யாரும் பயப்பட வேண்டியது இல்லை. மருத்துவர்கள் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனிடையே தலைவர் உடல்நிலை குறித்து சில விஷமிகள் தவறான செய்திகளை பரப்பி ஆதாயம் தேட அற்பத்தனமாக முயற்சிக்கிறார்கள்.
தலைவருக்கு எலும்பு முறிவால் ஏற்படும் வலியை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறார்.
எப்போதும் போல வழக்கமான உணவை எடுத்துக் கொள்கிறார். அவருக்கு மிகவும் பிடித்தமானது டென்னிஸ். இப்பொழுது நடைபெறுகிற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளை ஆர்வத்துடன் தொலைக்காட்சியில் பார்க்கிறார்.
தொலைக்காட்சி செய்திகளை பார்த்து அவ்வப்போது தகவல்களை பரிமாறிக் கொள்கிறார்.
எனவே தலைவர் பற்றி வெளிவரும் எந்த செய்தியையும் புறந்தள்ளுங்கள்.
தலைவரின் மீது அன்பு கொண்ட பலர் ஆர்வ மிகுதியிலும், கவலையிலும் தலைவரை நேரில் சந்திக்க வருகிறோம் என, என்னிடம் தெரிவித்து வருகிறார்கள். நம்முடைய வருகையால் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், பிற நோயாளிகளுக்கும் எந்தவித இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதால், யாரும் தலைவரை சந்திக்க வர வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
விரைவில் பூரண நலம் பெற்று தலைவர் வைகோ இல்லம் திரும்புவார். அதன்பிறகு கழகத் தோழர்கள் அவரை சந்திக்கலாம். அதுவரை, நேரில் வருவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது” என்று துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
மே மாதத்துக்கான பாமாயில், துவரம் பருப்பு எப்போது கிடைக்கும்?: உணவுத் துறை அறிக்கை!
யார் பிரதமர் வேட்பாளர்? டெல்லி செல்லும் ஸ்டாலின்