மாயமானும் மண்குதிரையும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு வைத்திலிங்கம் பதிலடி கொடுத்துள்ளார்.
மாயமானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்தது போல என்று ஓபிஎஸ் டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மே 11) பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று (மே 12) தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், “நேற்றைய தினம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து பேட்டி கொடுத்திருந்தார். அந்த சந்திப்பின் போது பண்ருட்டி ராமச்சந்திரன் சென்றிருந்தார்.
நான் (வைத்திலிங்கம்), ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பில் உடன்பாடு இல்லை என்பதால் தான் உடன் செல்லவில்லை என்று பேட்டிக் கொடுத்திருந்தார்.
எங்களுடைய எண்ணமே அதிமுக ஒன்றுபட வேண்டும். அதன்படி, பிரிந்திருப்பவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஜெயலலிதாவின் எண்ணப்படி தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஓபிஎஸ் டிடிவி தினகரனை சந்தித்தார்.
ஓபிஎஸ், டிடிவி சந்திப்பில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்று கற்பனையாக ஒரு முன்னாள் முதல்வர் பேசுவது அவர் வகித்த பதவிக்கு அழகல்ல.
இப்படி பொய்யையே சொல்லி ஏதோ ஒரு சூழ்ச்சியில் அவர் முதலமைச்சரானார். அவர் வகித்த முதலமைச்சர் பதவிக்கான பண்பு அவரிடம் இல்லை. மேலும் மாயமானும் மண்குதிரையும் நம்பி சென்றால் கரை சேர முடியாது என்று சொல்லி இருக்கிறார். அந்த மாயமான் இல்லை என்றால் அவர் முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது.
தூதுவிட்டு காலில் விழுந்து முதலமைச்சராகி, பின்னர் உயர்த்திவிட்டவர்களையே துரோகி, மாயமான் என்று பேசும் எடப்பாடி பழனிசாமி கடந்த காலத்தைக் கொஞ்சம் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்களின் கடைக்கண் பார்வை கிடைக்காத என்று ஏங்கிக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு பணபலம், அதிகார பலத்தால் கட்சியை அவருடைய சொத்தாக்க நினைக்கிறார். அதிமுகவின் தூய்மையான தொண்டர்கள் இருக்கும் வரை அதை அனுமதிக்க மாட்டார்கள்.
இவர் மண்குதிரை என்கிறார். ஆனால் எடப்பாடி ஒரு சண்டிகுதிரை, அது எதற்கும் உதவாது. அதிமுகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, தனிக்கட்சி வைத்திருக்கின்ற ஏ.சி.சண்முகம் மற்றும் தலைவர் காலத்தில் இருந்த பெரியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் தான் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியும். இவர்களை எல்லாம் தவிர்த்து அதிமுக ஆட்சிக்கு வரமுடியாது.
இரட்டை இலை சின்னம் கிடைத்த பிறகு 8 தேர்தல்களில் படுதோல்வி அடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு 2 சதவீதம் கூட வாக்கு இருக்காது. ஆனால் தொண்டர்கள் பலம் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனிடம் இருக்கிறது.
ஒன்றுபட்டு செயல்படுவோம் என்று அன்று இருவரும் சந்தித்ததை அதிமுகவின் 95 சதவீத தொண்டர்கள் வரவேற்கின்றனர். தடித்த வார்த்தைகளால், தகுதியை மீறி, தன்னிலை மறந்து பேசுகின்ற எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பேசினார்.
தொடர்ந்து, ஓபிஎஸ் – டிடிவி சந்திப்பின் போது ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு, “முதல் முறையாக சந்திக்கும் போது கூட்டாக செல்ல வேண்டாம் என்று கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், சையது கான் ஆகியோர் தான் முடிவெடுத்தோம்.
இப்படிப் பேசுகின்ற எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றபோது, அதிமுகவின் பொருளாளர் என்று சொல்கின்ற திண்டுக்கல் சீனிவாசன், துணைப்பொதுச்செயலாளர் என்று சொல்கின்ற நத்தம் விசுவநாதன், எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்று சொல்லிக்கொண்டிருக்கிற ஆர்.பி.உதயகுமாரை ஏன் அழைத்துச் செல்லவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”ஓபிஎஸ் நிச்சயமாக சசிகலாவை சந்திப்பார். எடப்பாடி அணியில் இருக்கின்ற நிறைய பேர் ஒன்று சேர வேண்டும் என்று எங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் கொங்கு மண்டலத்தில் திருச்சியை விட சிறப்பான ஒரு மாநாட்டை நடத்துவோம். அந்த மாநாட்டில் சசிகலா, டிடிவி தினகரன் கலந்து கொள்வது குறித்து காலம் பதில் சொல்லும்” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
ஆவடி நாசர் நீக்கம்: பாராட்டிய அண்ணாமலை
ராகுலுக்கு தண்டனை விதித்த நீதிபதி உட்பட 68 நீதிபதிகளின் பதவி உயர்வுக்கு தடை!