வடசென்னையில் வேட்புமனு தாக்கலின் போது அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 20-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
இந்தநிலையில், வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமியும், அதிமுக சார்பில் ராயபுரம் மனோவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பேசின் பிரிட்ஜ் மண்டல அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய இரண்டு கட்சியினரும் ஒரே நேரத்தில் வந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பொதுவாகவே வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர்கள் அந்தந்த மண்டல அலுவலக தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் தனக்கு எந்த நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று கேட்பது மரபு.
அந்தவகையில், எங்கள் வேட்பாளர் மனோ தேர்தல் நடத்தும் அலுவரை தொடர்புகொண்டபோது முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று சொல்லியிருக்கிறார்.
அதன் அடிப்படையில், நான் முன்கூட்டியே தேர்தல் மண்டல அலுவலகத்திற்கு வந்தேன். எங்கள் வேட்பாளர் காலை 11.59-க்கு வந்துவிட்டார். முதலில் வந்தது நாங்கள் தான். எங்களுக்கு 7-ஆம் நம்பர் டோக்கன் கொடுத்தார்கள்.
அந்த டோக்கனை எடுத்துக்கொண்டு நாங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சென்றோம். அப்போது இரண்டு சுயேட்சைகள் மனுத்தாக்கல் செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள் காத்திருந்தோம். எங்களுடைய நேரம் வந்தபோது திமுகவை சேர்ந்த வேட்பாளர் கலாநிதி, அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட 8 பேர் உள்ளே சென்றார்கள்.
கொஞ்சம் கூட மரபை பின்பற்றாமல் எங்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளே நுழைந்து நாற்காலியில் அமர்ந்தார்கள். உடனே தேர்தல் அதிகாரியிடம் முதலில் வந்த எங்களிடம் தான் நீங்கள் வேட்புமனு வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
திமுக இரண்டாவது நம்பர் டோக்கன் வாங்கியுள்ளனர். அதுவும் வேட்பாளர் வாங்கவில்லை, மற்றொருவரை வைத்து டோக்கன் வாங்கியுள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர் முதலில் வருபவர்களுக்கு தான் முன்னுரிமை என்று எங்களிடம் சொன்னார். அதன்படி 11.59-க்கு முதலில் வந்த எங்களை தான் அனுமதிக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டோம்.
இதனை தொடர்ந்து முறைப்படி பார்த்தால் அதிமுக தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி தீர்ப்பு வழங்கினார்.
இதனால் அலுவலரை திமுகவினர் மிரட்டினர். தலைமை தேர்தல் அதிகாரியை தொடர்பு கொண்டு என்ன செய்யலாம் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி கேட்டார். அவரும் நீங்கள் அதிமுக வேட்பாளரை தான் முதலில் அனுமதிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இதை திமுகவினரிடம் சொன்ன போதும் அவர்கள் ஏற்கவில்லை.
தேர்தல் ஆரம்பகட்டத்தில் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து சட்டத்தை கையில் எடுத்துள்ளனர் திமுகவினர். ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரி எங்கள் வேட்புமனுவை தான் முதலில் ஏற்றார்” என்று தெரிவித்தார்.
தோல்வி பயத்தால் அதிமுகவினர் அராஜகத்தை கட்டவிழ்த்து விடுகிறார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் சேகர்பாபு பேசியபோது,
“திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளைய அருணா காலை 10 மணிக்கு காவல்துறை பதிவேட்டில் பதிவு செய்துவிட்டார். எங்களுக்கு இரண்டாம் எண் டோக்கன் கிடைத்தது. அதிமுகவின் டோக்கன் எண் ஏழு. நாங்கள் உள்ளே வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது, எங்களுக்கு பின்னால் அதிமுகவினரும் வந்தார்கள். ‘எங்களுடைய வேட்புமனுவை தான் நீங்கள் முதலில் பெற வேண்டும், எங்களுடைய வேட்பாளர் முதலில் வந்துவிட்டார்’ என்று பிரச்சனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
தேர்தலை அமைதியாக சந்திக்க வேண்டும், சிறு அசம்பாவிதத்திற்கும் இடமளிக்க கூடாது என்ற வகையில், நாங்கள் அமைதியாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் முறையிட்டோம். அதிமுகவினர் அலுவலர் முன்னிலையில் எங்களை அவதூறாக பேசினர்.
தோல்வி பயத்தால், அரஜாகத்தை கட்டவிழ்த்து விடுவார்கள். அனைத்தையும் சந்தித்து களத்தில் கடுமையான போராட்டங்களை சந்தித்த இயக்கம் திமுக. தேர்தல் அதிகாரியை நாங்கள் மிரட்டவில்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரை மணி நேரத்தில் 50% சார்ஜ்…. என்ன மாடலா இருக்கும்?
திமுக கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் சிக்கல்!