தமிழ்நாட்டு அரசியலில் பெண்களின் பங்கு முக்கியமானது. அதிலும் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே பயணிக்கும் பாஜகவில் இருந்து கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.ஆக வென்று காட்டியவர் வானதி சீனிவாசன். தற்போது பாஜக தேசிய மகளிரணி தலைவராகவும் இருப்பதால், நாடு முழுவதும் பயணிக்கிறார்.
மேலும் தமிழக அரசியல் களத்தில் பாஜக சார்பில் தவிர்க்கமுடியாத சக்தியாக தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவர் நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மாநில, தேசிய அரசியல் நிலவரம் குறித்து பல்வேறு தகவல்களை பேசியுள்ளார்.
எம்.எல்.ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள், மகளிரணி தலைவராக இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்கிறீர்கள் எப்படி இருக்கிறது இந்த பயணம்?
இந்த அரசியல் பயணம் கஷ்டமாக இல்லாமல் நான் விரும்பத்தக்கதாக உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் ஆன பிறகு நிறைய பேருக்கு உதவி செய்ய முடியும் என்ற நிறைவு இப்போது இருக்கிறது.
இந்தியா முழுவதும் பயணம் செய்கிறீர்கள். ஆனால் சென்னையில் உங்களை பார்க்க முடிவதில்லையே?
உண்மை தான். தமிழ்நாட்டுக்கு வரும்போது கவனம் முழுவதும் தொகுதியில் உள்ளது. சென்னைக்கு கணவர், குழந்தைகளை சந்திக்க வேண்டும் என்றாலோ அல்லது கட்சி நிகழ்ச்சிகளுக்காகவோ மட்டுமே வர முடிகிறது. அரசியல் நிகழ்ச்சிகளுக்காக சென்னைக்கு வருவது என்பது பெருமளவில் கடந்த சில ஆண்டுகளாக குறைந்துவிட்டது.
நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி 15 லட்சம் மக்களுக்கு கொடுப்பேன் என்று பேசியதற்கான ஆதாரங்கள் அதிகளவில் இருக்கும் போது, முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள்?
கருப்பு பணத்தை மீட்டு 15 இலட்சம் ரூபாய் கொடுப்பேன் என்று பிரதமர் கூறிய அர்த்தத்துக்கும், நீங்கள் அதனை வாக்குறுதியாக கருதி கூறுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
வெளிநாடுகளில் கருப்பு பணத்தை மீட்கும்போதும் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளோம். நாடாளுமன்றத்திலும் தெரிவித்துள்ளோம். அதில் மத்திய அரசு தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசுவதில்லையே ஏன்?
அதானி குறித்து பேச என்ன இருக்கு? அதானிக்கு ஆரம்பத்தில் குஜராத் தொழில் தொடங்கவும், மத்திய அரசின் பல்வேறு ஒப்பந்தங்களை கொடுத்ததும் காங்கிரஸ்.
நாடாளுமன்றத்தில் எல்லாவற்றுக்கும் மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. தமிழ்நாடு அரசு திட்டத்தில் அதானிக்கு பங்கு இல்லையா? அதுகுறித்து ஏன் பேச மறுக்கிறார்கள். தொழிலதிபர்களுடன் விமானத்தில் ஒன்றாக பயணம் செய்வதை வைத்து எப்படி மோடியை அதானியுடன் தொடர்புபடுத்த முடியும்?
பொதுத்துறை நிறுவனத்தின் நஷ்டம் ஏற்படும் போதோ, தவறு பண்ணும்போது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அரசாங்கம் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டு தான் இருக்கிறது.
பொது சிவில் சட்டத்தை பாஜக ஆதரிக்கிறது. திமுக, காங்கிரஸ் அதனை எதிர்க்கிறது. உங்கள் கருத்து என்ன?
இந்தியாவில் கிரிமினல் சட்டத்தை போல அனைவருக்குமான பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் வகுத்த அம்பேத்கர் அப்போதே எழுதியுள்ளார். இதை திடீரென பாஜக கொண்டு வரவில்லை.
அதேவேளையில் பொது சிவில் சட்டத்தின் மூலம் இந்து சட்டத்தை தான் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் பின்பற்ற வேண்டுமா? என்று கேள்வி எழும். உண்மையில் இந்து சட்டத்தில் கூட சீர்திருத்தப்பட வேண்டியவை நிறைய உள்ளது. பல்வேறு சட்டங்கள் பாலின பாகுபாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது.
பொது சிவில் சட்டத்தை பொறுத்தவரை இன்னும் விவாதிக்க வேண்டி உள்ளது. சாதக பாதகங்களை ஆராய்ந்த பிறகு இதில் அரசு முடிவெடுக்கும்.
பெங்களூரில் எதிர்க்கட்சிகள் விரைவில் கூட உள்ளது. அதேநேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது பாஜக. இதனைவைத்து பாஜகவிற்கு பயம் வந்துவிட்டதாக ஸ்டாலின் பேசியுள்ளார். என்ன நினைக்கிறீர்கள்?
ஆம். ரொம்ப பயப்படுகிறார் மோடி. (நக்கலாக சிரிக்கிறார்). ஸ்டாலின் அவருக்கு ஏற்பட்டுள்ள பயத்தை மற்றவர்களுக்கு பயம் வந்துவிட்டதாக கூறி வருகிறார். முதலில் ஸ்டாலின் மாநில அரசை கவனிக்கட்டும். தேசிய அளவில் ஒன்றாக செயல்படும் எதிர்கட்சிகள் மாநில அளவில் எதிரியாகவே இருக்கின்றன.
மேற்கு வங்கத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளது மம்தா பானர்ஜியின் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி. அப்படி இருக்கும் போது தேசிய அளவில் மட்டும் எப்படி இந்த கட்சிகள் எல்லாம் ஒன்றாக செயல்பட முடியும்? வரும் நாட்களில் இந்த ஒற்றுமையின் உண்மையின் முகம் தெரிய வரும்.
கர்நாடகா தேர்தலில் தோற்றாலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தான் ஜெயிக்கும். கர்நாடகா தோல்வியால் பாஜகவிற்கு பயம் வந்துவிட்டதாக எதிர்கட்சிகள் கருதினால் அவர்கள் தங்களையே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்று அர்த்தம்.
அஜித் பவார் பற்றி…
பாஜகவை பொறுத்தவரை ஊழல்வாதியாக (அஜித் பவார்) இருந்தாலும், முன்னாடி எப்படி இருந்தார் என்பது முக்கியமில்லை. கட்சியில் சேர்ந்தபிறகு அவர் எப்படி இருக்கிறார் என்பதே முக்கியம்.
அரசியல் கட்சிக்குள் ஒரு குடும்பத்தின் கை அதிகரிக்கும்போது ஜனநாயகம் அடிபட்டு விடுகிறது. முடிவெடுக்கும் அதிகாரம் அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை.
அது தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் நடந்தது. குடும்ப அரசியல் தலையீட்டால் தான் அஜித் பவார் அங்கிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். ஆனால் பாஜகவில் இந்த குடும்ப அரசியல் என்பது இல்லை.
வானதி சீனிவாசன் வேலுமணிக்கூட இருக்கனும், எதிரணிக்கூட போய்விட கூடாது என்று சிபி ராதாகிருஷ்ணன் சமீபத்திய பேட்டியில் கூறினார். அந்த எதிரணி யார்? திமுகவா? அல்லது பாஜகவிலேயே எதிரணி உள்ளதா?
அவர் இயல்பாக கூறிய வார்த்தை அது. இதில் உள்ளர்த்தம் பார்க்க வேண்டாம். நாங்கள் ஒரே கட்சியில் பல ஆண்டுகள் பணியாற்றி வருகிறோம். அவர் சகோதரி என்ற அக்கறையில் கூறினார் என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.
பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் அதிமுக வேலுமணியுடன் நீங்கள் ஒன்றாக அரசியல் செய்ய முடியுமா?
கூட்டணியில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்குள் நிச்சயம் கொள்கை வேறுபாடுகள், முரண்பாடுகள் இருக்கும். பாஜகவில் உள்ள அனைத்து கொள்கைகளையும், அதிமுகவால் ஏற்க முடியாது. கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து கொள்கைகளையும் திமுகவால் ஏற்க முடியாது. இதனை தாண்டி தேர்தலில் கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன. கொள்கைகளை ஏற்றுக்கொண்டால் தான் கூட்டணி என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, தமிழ்நாட்டில் பாஜக எங்க இருக்கு? என்று பேசியிருந்தார். எப்படி பார்க்கிறீர்கள்?
அவர் பாஜகவின் எம்.பியாக இருந்தவர், கட்சியின் பதவிகளை வைத்திருந்தவர். அவர் ஒவ்வொரு முறையும் பல்வேறு கருத்துகள் வெளியிட்டு வருகிறார். எனவே அவர் கருத்துக்கு நான் பதில் அளிக்க முடியாது.
நெறியாளர்: பெலிக்ஸ் இன்பஒளி
கிறிஸ்டோபர் ஜெமா
காமராஜர் 121வது பிறந்தநாள் விழா கோலாகலம்: தலைவர்கள் மரியாதை!
”இந்தியாவின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்பணித்தவர் காமராஜர்”-மோடி புகழாரம்!