பேரா.நா.மணி
“இந்திய ஆட்சிப் பணியில் ஓர் அப்துல் கலாம்” இறையன்பு பணி நிறைவு பெற்ற நாளன்று ஒரு பேராசிரியரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இது. “தண்டோரா விற்கு ஓய்வு கொடுத்த தலைமகனுக்கு இன்று பணி ஓய்வு” இது இன்னொருவர் பகிர்வு.
மாணவர்களுக்காக, இவர் எழுதிய புத்தகங்களை, தூத்துக்குடி மீனவர் ஒருவர், பள்ளி பள்ளியாக சென்று, தன் சொந்த செலவில் புத்தகங்கள் வாங்கி விநியோகிப்பார். அவருக்கு அன்று பெருத்த சோகம். நாகையில் இவர் சார் ஆட்சியராக இருக்கும் போது, அவருடன் பணியாற்றிய இஸ்லாமியர் இன்று வரை நெருங்கிய நண்பர். அவர் எங்கெங்கெல்லாம் பணியாற்றினாரோ, யாரெல்லாம் உடன் வேலை செய்தார்களோ,அவர்கள் அனைவரும் இன்றுவரை அவருடைய நல்ல நண்பர்கள். அவர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்.
குணாம்சங்களில் உயர்ந்து நிற்கும் இறையன்பு
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் படித்த வகுப்பு தோழர்கள் அனைவரும் அவரது நட்பு வட்டம். சமீபத்தில் அவரது வகுப்பு தோழனுக்கு மாரடைப்பு. மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு அழைத்து “கொஞ்சம் அவரை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று ஒருவார்த்தை சொல்கிறார்.
தனியார் மருத்துவமனை சென்றிருந்தால் பல லட்சம் பணம் விரையம். மாரடைப்பு ஏற்பட்ட நண்பரின் மாமியார் தவறி விடுகிறார். அதனைக் கேள்விப்பட்டு அவரது மாமனாரின் லைனில் வருகிறார். அருகில் இருந்து தேற்றுவது போல் ஆறுதல் வார்த்தைகள் சொல்கிறார். நேரில் வர இயலாமைக்கு வருத்தம் தெரிவிக்கிறார். இப்படி சொல்லத் தொடங்கினால் பல பக்கங்கள் நீளும்.
சிறிய குழந்தை ஒன்று, அவரது எழுத்தை வாசித்து விட்டு, ஒரு வரி கடிதம் எழுதினால், அந்தக் குழந்தைக்கு, நான்கு வரியில் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்து கடிதம் எழுதுவார். இவ்வளவு நல்ல குணங்கள் எப்படி வாய்த்தது இவருக்கு? ஐஏஎஸ் என்ற அதிகார வர்க்கத்துக்குள் நுழையும் போதே “மதம் என்னும் பேய் படியாது இருக்க வேண்டும்” என்று வள்ளலார் கூறியது போல, “அதிகார போதையும் ஐஏஎஸ் அகந்தையும் பிடிக்காமல் இருக்க வேண்டும்” என்று சபதம் எடுத்துக்கொண்டு இந்திய ஆட்சிப் பணிக்கு வந்திருக்க வேண்டும்.
அத்தோடு மட்டுமல்ல. பெரும் இலக்கிய ஆளுமை. கவிதை, கட்டுரை, நாவல், சிறுகதை எனப் பலத் தளங்களிலும் தடம் பதித்தவர். சாமான்ய மனிதனின் சக தோழன். மனித மாண்புகள் யாவற்றிலும், குறையேதும் கண்டறிய இயலாதவர். இப்படி நிறைய மனிதர்கள் தமிழ் மண்ணில் வாழ்ந்து இருப்பார்கள். வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.
ஆனால்,அவர்களில் எத்தனை பேர் இந்திய ஆட்சிப் பணியில் அமர முடிந்தது? அமர்ந்த பின்னர், எத்தனை பேரால் அதனை தக்கவைத்துக் கொள்ள முடிந்தது? தான் கொண்ட கொள்கைகளை கடை பிடிக்க முடிந்தது? அப்படிப்பட்டவர்களில் எத்தனை பேருக்கு தமிழ் நாட்டின் தலைமை செயலாளர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது? அப்படி ஆன பிறகும், தனது அடிப்படை குணாம்சங்களிலிருந்து வழுவாமல் நிமிர்ந்து நிற்க முடிந்தது? ஒரே ஒருவர் தான். அவரே இறையன்பு.
இனி அப்படி ஒருவர் அந்தப் பொறுப்புக்கு வர இயலுமா? பெரிய கேள்விக்குறி. ஒரு முறை அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ஐஏஎஸ் அதிகாரிகளில் பலர், தங்களுக்கு கொம்பு முளைத்திருப்பதாக நினைப்பு. ஐஏஎஸ் அதிகாரிகள் கொஞ்சம் பெரிய அரசு ஊழியர்கள் அவ்வளவுதான்” என்றார். இந்த தன்மை தான், அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
தமிழும் இறையன்பும்
ஓர் ஐஏஎஸ் அதிகாரி, உயர்ந்து, உயர்ந்து, தலைமைச் செயலாளர் என்று உச்ச அந்தஸ்தை எட்டி விடுகிறார். அதற்கு மேம்பட்ட பதவிகளே இல்லை. இவருக்கு முன் அந்த பொறுப்புக்கு வந்தவர்கள் 47 பேர். இவர்களில் யார் ஒருவருக்கும், ‘தலைமைச் செயலாளர்’ என்ற பெயர் பலகை ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பது கண்ணுக்கு தெரியவில்லை.
இறையன்பு அந்த இருக்கையில் அமர்ந்த பிறகு தான், தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் ‘தலைமைச் செயலாளர்’ என்ற பெயர் பலகை காணக் கிடைக்கிறது. “திருக்குறள் உலகப் பொதுமறை” என ஓயாமல் சொல்லிக் கொள்கிறோம். அதனை அனைத்து அரசு அலுவலகங்களிலும் எழுதி வைக்க, முறைப்படுத்த ஓர் இறையன்பு வேண்டி இருந்திருக்கிறது.
ஊராட்சி தலைவர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை
அவர் செய்த, சின்ன, சின்ன, செயல்கள் கூட, பெரிய, பெரிய விளைவுகளை உண்டாக்க வல்லவை. ‘தண்டோரா’ போடுவதிலும் சாதி பாகுபாடு இருக்கிறது என உணர்ந்து, முற்றாக இதனை முற்றாக தடை செய்தார். பட்டியல் சமூக மக்கள் பஞ்சாயத்து தலைவராக ஆகமுடியும். ஆனால், சுதந்திர தினம் குடியரசு தினத்தில் கொடியேற்ற கூட முடியவில்லை. இதனை சரி செய்ய, அத்தகைய பிரச்சினை நிலவும் ஆதனூருக்கு நேரில் சென்று சரி செய்தார். அத்தோடு, அது போன்று இருக்கும் பல கிராம பஞ்சாயத்துகளை, எப்படி சரி செய்வது என பலகட்ட கூட்டங்கள், நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
கிராமசபை கூட்டங்களின் முக்கியத்துவம் உணர்ந்து அதன் பொருண்மைகள் குறித்து பல முறை மாவட்ட ஆட்சியர்களோடு காணொளி வாயிலாக விவாதித்து இருக்கிறார். தானே சாமான்ய மனிதனைப் போல கலந்து கொண்டு இருக்கிறார். “தூய்மை பணியாளர்களுக்கு, உணவருந்த ,உடை மாற்ற, ஓய்வெடுக்க இத்தனை ஆண்டு காலம், ஓர் சிறிய அறை கூட இல்லையே சார்” என்று மதுரையிலிருந்து ராமச்சந்திரன் என்பவர் ஒரு கடிதம் எழுதுகிறார்.
உடனடியாக, மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதி, ஓய்வறைகளை தமிழகமெங்கும் அமைக்க உத்தரவாதம் செய்துள்ளார். சிறை துறை விழிப்புணர்வு பணி அலுவலர்களோடு நேரில் கலந்தாய்வு. தான் எழுதிய பல்வேறு புத்தகங்களை சிறை நூலகங்களுக்கு பரிசளிப்பு செய்தார். மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, இலவச வீடுகள் வழங்கவும், தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன் வைத்தார். அவர்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை இயன்றவரை செய்து கொடுத்தார்.
குடியரசு தினம், சுதந்திர தினத்தில் அரசு ஊழியர்களுக்கு முதல்வர் பரிசு வழங்கி கௌரவித்து வருகிறார். இந்தப் பட்டியலில், கடைநிலை ஊழியர்கள் காலம் காலமாக இடம் பெறவில்லை. இவர் தலைமைச் செயலாளர் ஆன பிறகுதான் அவர்களும் அரசு ஊழியர்களாக கருதப்பட்டு, மற்ற அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் மரியாதை கிடைக்க ஏற்பாடு செய்தார்.
அடுத்தடுத்த நடவடிக்கைகள்
“ஆதி திராவிடர் நல விடுதிகள் அவலம் தீர்க்குமா அரசு?” என்றொருவர் ‘இந்து நாளிதழில்’ கட்டுரை வடித்தார். இரண்டு வாரங்கள் கழித்து,கட்டுரையாளரை அழைத்து, “நீங்கள் எழுதிய கட்டுரையின் மீது நடவடிக்கைகள் சில எடுக்கப்பட்டுள்ளது. அவற்றை பரிசீலனை செய்யுங்கள்” என்று கூறினார். “ஆதிதிராவிடர் நல விடுதிகள்: அவலம் தீர்க்க புறப்பட்ட அரசு” என அதே கட்டுரையாளர், மீண்டும் ஒரு கட்டுரை எழுதினார்.
காவல் நிலையங்கள் எங்கும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களால் நிரம்பி வழிந்தது. நிரந்தரமாக பழுதடைந்த வாகனங்கள், பயன்படுத்த முடியாத வாகனங்கள், அரசு அலுவலகங்களில், சந்து பொந்துகளில் எல்லாம் நிறுத்தப்பட்டிருந்தது. சில நேரங்களில் அவை நடமாட்டத்திற்கும் இடையூறாக இருந்தது. அவற்றை ஏலம் விட உடன் நடவடிக்கை எடுத்தார்.
அதன் வழியாக, அரசு கருவூலத்திற்கு 29,20,00,264 ரூபாய் சென்று சேர்ந்தது. “ஆவின் நிறுவனத்தில் தான், அரசு நிறுவனங்கள் இனிப்பு பலகாரம் வாங்கி விற்க வேண்டும்” என்று அவர் போட்ட உத்தரவு ஆவினுக்கு எத்தனை பெரிய இலாபம் தரும் சிந்தனை. சென்னையில் மழை நீர் தேக்கம் எவ்வளவு பெரிய பிரச்சனை? எவ்வளவு பெரிய ஆபத்து? என எல்லோருக்கும் தெரியும். தனது குறுகிய கால பணி காலத்திலேயே, அதனைத் தடுக்க முடியும் என்று சாதித்துக் காட்டியவர். அதற்காக மட்டுமே 14 கள ஆய்வுகளை சென்னை மாநகர் முழுவதும் மேற்கொண்டார்.
ஓய்வு நேரத்திலும் பணி
மாவட்ட நிர்வாகத்தை செம்மையாக நடத்த, வாராவாரம் ஆட்சியாளர்களோடு காணொளி உரையாடல். பின்னர் இரண்டு வாரத்திற்கு ஒன்று என அந்த ஆய்வுக் கூட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டது. 20 மாவட்டங்களில் கள ஆய்வுகள். அந்தக் கள ஆய்வில், கள நிலவரங்களை கற்றுக் கொண்டார். அதனை சரி செய்ய திட்டங்களை வகுத்தார்.
கள அனுபவம் காலை கூட்டங்கள் வாயிலாக, புதிதாக பொறுப்பேற்கும் மாவட்ட ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டிய 51 குறிப்புகளை அடையாளம் கண்டு பட்டியலிட்டு மாவட்ட ஆட்சியருக்கு தந்துள்ளார். இனி காலத்திற்கும் அவை பயன்படும்.
ஞாயிறுதோறும் மாலையில் மாவட்ட ஆட்சியர்கள், துறை தலைவர்கள்,அரசுத் துறை செயலாளர்கள் ஆகியோருக்கு கடிதம் எழுதுவதை தன் வாடிக்கையாக கொண்டிருந்தார். அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை இக்கடிதங்களை எழுதுவதால் இதனை ஓய்வு நேரப் பணி என்று இறையன்பு வர்ணிக்கிறார்.
அரசு ஊழியர்களாக சேர்வோருக்கு, தங்கள் கடமை உணர்வுகளை, சமூக பொறுப்புகளை, நயம்பட எடுத்துரைக்க, பணிக்கு சேரும் பயிற்சி காலமே சிறந்த காலம் என்று கணிக்கிறார். பவானி சாகரில் பயிற்சி பெறுவோர் மத்தியில், காணொளியில் பயிற்சி அளித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச பயிற்சிகளை வழங்காததால், பத்தாயிரம் பேருக்கு பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் அனைவருக்கும் விரைந்து பயிற்சியை முடித்து, பதவி உயர்வு அடைய வழி செய்திருக்கிறார். தங்கள் வீட்டை கூட்டிப் பெருக்கி கண்ணாடி போல் வைத்திருக்கும் அரசு ஊழியர்கள் கூட,தாங்கள் பணியாற்றும் அலுவலகத்தை குப்பை காடாக வைத்திருப்பதை காண முடியும். அரசு அலுவலக அலங்கோலத்தை மாற்றியமைக்க, தூய்மையாக வைத்துக் கொள்ள, பெரும் முயற்சி எடுத்தார்.
“எழில்மிகு அலுவலகம்” என பெயரிடும் படி கூறினார். பெயர் பலகையில் “எழில் மிகு” என்று எழுதி வைத்து விட்டு, அதன் தோற்றப் பொலிவை தராமல் இருக்க இயலுமா? அதற்காகவே எழில் மிகு தோற்றம் கண்டன பல அலுவலகங்கள். “அரசு நிர்வாகத்தில் கோப்புகள் தேக்கம்” ஓர் இயல்பான பிரச்சினை. இதை ஒரு முக்கிய பிரச்சனையாக கருதினார் இறையன்பு. ஒரே இடத்தில் ஒதுங்கி நிற்கும் கோப்புகளை, முடங்கி விடாமல் தடுக்க துரித மாற்றங்கள் செய்தார்.
தனித்துவமான நிகழ்வுகள் நடந்தேறும் போது, அவற்றுக்கு தனித்துவமான கவனம் செலுத்தினார். ‘செஸ் ஒலிம்பியாட்டில்’, 182 நாடுகள், 1,970 வீரர்கள் பங்கேற்பு. 44 நாட்கள் நடைபெற்றது. அனைவரின் பாராட்டை பெற்ற நிகழ்வு. நமக்குத் தெரிந்த விஷயங்கள் அவ்வளவே. ஆனால், இவ்வாறு இது செவ்வனே நடத்தி முடிக்க இறையன்பு எடுத்த முயற்சிகள் ஏராளம். நாள் தோறும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார். பின்னர் வாரத்திற்கு மூன்று நாள் ஆய்வு என அப்பணிகளை மெருகேற்றினார்.
தமிழ்நாடு அரசு, வரவு செலவு அறிக்கையில் ஓர் மாற்றம் செய்தது. வேளாண்மை வரவு செலவு அறிக்கை தனியாக சமர்ப்பிக்கப்பட்டது. அதிலும் தன் சிறப்பு கவனத்தை செலுத்தினர். நமது மண்ணையும், மரபையும் இதனோடு இணைத்தார். இதனோடு, தமிழ் இலக்கிய மரபையும் கோர்த்து, மணக்கும் படி செய்தார். தமிழ் நாட்டில் கொரோனாவின் கொடூரம் கட்டுக்குள் வர, மாபெரும் சிறப்பு முகாம்கள் முக்கிய காரணம். ஒரே நாளில் ஐந்தரை இலட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டது. அதனைத் திட்டமிட்டு நடத்த அவரது பணி பெரும் பணி.
கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு நினைவாக போடப்பட்ட மருத்துவ முகாம்கள் சென்னையில் உழைக்கும் மக்கள் குடியிருப்புகளில் இவரால் அவை பரிசோதித்து பார்க்கப் பட்டவை. இவரது பணிக்காலத்தில், பிரதமர் நான்கு முறையும், குடியரசுத் தலைவர் இரண்டு முறையும்,துணை குடியரசு தலைவர் அவ்வப்போதும் தமிழகத்திற்கு வந்து சென்றுள்ளனர். மாநில அரசு செய்ய வேண்டிய பணிகளை திட்டமிட்டு செய்யப்பட்டதால்,தகை சால் மாந்தர்கள் வருகை சுமூகமாக நடந்து முடிந்தது.
எளிய மக்கள், அரசுப் பணிகளில் சேர, வாழ்வில் ஏற்றம் பெற, ஆளுமை திறனை மேம்படுத்திக்கொள்ள, அண்ணா நிர்வாக மையத்தில் தனி கவனம் செலுத்தினார். அதனை பேணி வளர்த்தார்.
AIM TN என்ற யூடியூப் சாதனம் வழியாக, ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இப்போது பயிற்சி பெற்று வருகின்றனர். குடிமைப் பணி நேரடிப் பயிற்சி பெறுவோருக்கு, விடுதி வசதிகளை மேம்படுத்தினார். வகுப்பறைகளை மிடுக்குள்ள வகுப்பறைகளாக மாற்றியுள்ளார்.
இறையன்பு புரியாத புதிர்
பணியில் சேர்ந்த காலம் முதல், சுமார் 20 துறைகளில் அல்லது பொறுப்புகளை எடுத்து செய்துள்ளார். அந்தப் பணிகளை சுருக்கமாக எழுதினாலும் தனிக் கட்டுரையாக தான் வடித்தெடுக்க முடியும். ரெக்கை கட்டிக் கொண்டு பறக்கும், இத்தனை பணிகளின் ஊடாக, 150 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது வியப்பிலும் வியப்பு.
நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை, தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பிரபலமான எல்லா இதழ்களிலும் எழுதியுள்ளார். இவற்றில் பல தொடர்களாக வெளிவந்தவை. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டங்களில் இலக்கிய உரைகள் ஆற்றி இருக்கிறார். 1500 மேற்பட்ட தொலைக்காட்சி உரையாடல்களில் பங்கு பெற்றிருக்கிறார். 1000க்கும் மேற்பட்ட வானொலி உரைகளை நிகழ்த்தியுள்ளார்.
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற, குறைந்தபட்சம் 100 பேருக்கு பயிற்சிக்கான பல்வேறு உதவிகளை செய்திருக்கிறார். 50 பேர் இவரது படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவரது நூல்கள் பலவற்றுக்கு, இலக்கிய விருதுகள் தேடி வந்தன. “மூளைக்குள் சுற்றுலா” நூல் அவரது மாஸ்டர் பீஸ் எனலாம். இதன் வெளியீட்டு விழாவில், சுமார், 2000 பேர் கலந்து கொண்டு இருப்பர். இந்த 2000 பேருக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைத்துவிட்டு, தனித்தனியாக அலைபேசியில் அழைத்துப் பேசினார்.
விழா முடிந்து, எல்லோரும் ஊர் திரும்பிய பிறகு,மீண்டும் ஒருமுறை ஒருவர் விடாமல் அழைத்து பேசி, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மேனாள் நீதி அரசர் சந்துரு, “அன்று முதல் இன்று வரை, எனக்கு ஓர் புரியாத புதிர். ஐஏஎஸ் அதிகாரியான இறையன்பு, இவ்வளவு வேலைகளையும் செய்து கொண்டு, இவ்வளவு எழுதிக் குவிக்க, படிக்க எங்கிருந்து நேரம் கிடைக்கிறது” என்றார்.
அந்த புதிர், இன்னமும் நீடிக்கிறது. தனது இலக்கியத்தில் மேலாண்மை நூலுக்கு இரண்டு லட்சம் ரூபாய் ரொக்க பரிசை கிடைத்தது. பரிசுத்தொகை முழுவதையும் மயிலாப்பூர் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி நூலகத்திற்கு கொடுத்துவிட்டார். இவை யாவற்றையும் தாண்டி, ஏழை எளியோருக்கு உதவி செய்து வருகிறார். அதன் உச்சம், சுனாமி பாதித்த போது, மைசூர் குடிமக்கள் மன்றத்தோடு இணைந்து, அவர் ஆற்றிய சேவை. 4.5 கோடி மதிப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்தார்.
இறையன்பு நேர்மையானவர். தூய்மையானவர், வெளிப்படையாக தெரிந்தவை. “சார் நேர்மையாக இருப்பதில் எந்த ஒரு சிரமமும் இல்லையா”? என்ற கேள்விக்கு, “பணியில் சேர்ந்த நாள் முதலே, நாம் யார் என்று அவர்களுக்கு தெரிந்து விடும். நமக்கு ஏற்ற துறைகளையே ஒதுக்குவார்கள்” என்று கூறி சிரித்தார். அவர் பணியாற்றிய துறைகளில் பார்த்தாலே அவர் சொல்லின் சூட்சுமம் புரியும். தலைமைச் செயலாளரானவுடன் , மேலும் தூய்மை காக்க வேண்டும் என்று நினைத்தார்.
தனது புத்தகங்கள் நூலகங்களுக்கு கொள்முதல் செய்யப்படக்கூடாது என உத்தரவு பிறப்பித்தார். தனது புத்தகங்களுக்கு பரிசு அறிவித்தல் கூடாது என நிபந்தனை விதித்தார். அதனையும் மீறி சில தேர்வுகள் வந்த போது, நேரிடையாக அதனை நிராகரித்தார். தான் இளநிலை வேளாண் பட்டம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பதக்கம் பெற்றவர். பட்டப் படிப்பில் நான்குக்கு நான்கு புள்ளிகளை சிந்தாமல் சிதறாமல் வாங்கியவர்.
ஐஏஎஸ் தேர்வில் இந்தியாவில் 15 ஆவது இடம். தமிழ் நாட்டில் முதலிடம். படிப்படியாக உயர்ந்து தலைமைச் செயலாளராக உயர்ந்தவர். ஒரு பல்கலைக்கழகத்தின் சிறந்த முன்னாள் மாணவர் தேர்வுக்கு இதைவிட வேறு என்ன தகுதி வேண்டும்? இத்தனை தகுதிகள் திறமைகள் எல்லாம் வெளிப்படையானது. எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் கூட தான் தலைமைச் செயலாளராக இருக்கும்போது அதனை பெற்றுக் கொள்ளக் கூடாது என மறுத்தார்.
இத்தகைய மனிதர் நேர்மையை ஊக்குவித்தல் இயல்பானது தானே. நேர்மையாக, சேவை மனதோடு பணியாற்றிய அரசு ஊழியர்களை அழைத்து, பாராட்டி, கௌரவம் செய்தார். பொன்னாடை போர்த்தினார். புத்தகங்கள் பரிசளித்தார். அத்தகைய நேர்மையாளர்கள் கடைக்கோடியில் தூய்மைப்பணி ஆற்றுவோராக இருந்தால், அவர்களுக்கான பாராட்டை மேலும் கூட்டினார். குப்பையில் கிடந்த தங்கத்தை உரியவர்களிடம் சேர்த்த மேரியை நேரில் அழைத்து பாராட்டினர். வாழ்த்தினார். கௌரவித்தார். வறுமையை போக்க அண்ணா நிர்வாக பயிற்சி மையத்தில் தொகுப்பு ஊதிய அடிப்படையில் அவர் மகனுக்கு வேலைவாய்ப்பை வாங்கிக் கொடுத்தார்.
இறையன்பு பெற்ற கௌரவம்
ஒரு தலைமைச் செயலாளரை, அன்போடு, உரிமையோடு ” அன்புள்ள மாமாவிற்கு” என்று விழித்து கடிதம் எழுதிய மாணவனை அழைத்து, அவனது குறைகளை கேட்டு அறிந்தார். அவனது குடும்பத்திற்கு நகர்ப்புற வாழ்விட வாரியத்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டு வீடு ஒன்றை ஒதுக்கீடு செய்து கொடுத்தார். ஐஏஎஸ் அதிகாரிகளை பற்றியும் அவர்களது அதிகார போதைகள் பற்றியும் ஒரு முறை இவ்வாறு கூறினார்.
“எவ்வளவு உயரத்தில் இருந்து ஐஏஎஸ் அதிகாரிகள் பணி ஓய்வு பெற்றாலும், பணி ஓய்வு நாளன்று அவர்களது உண்மையான கௌரவம் அவர்களுக்கே தெரிந்து விடும். பணிகளை ஒப்படைத்து விட்டு, சாவியை கொடுத்து விட்டு, தனது அறையை விட்டு வெளியேறி, வராண்டாவில் நடந்து செல்லும் போது, அவர்களின் உண்மையான கௌரவம் அவர்களுக்கு புரிய வரும். நமது கௌரவம் பெரிதாக இருந்திருந்தால் கடைநிலை ஊழியர் கூட நம்மை திரும்பி பார்க்க மாட்டார்” என்றார். 2023 ஜூன் 30 ஆம் தேதி மாலை தனது அறையிலிருந்து அடியெடுத்து வைத்து வெளிவந்த போது அவரது வார்த்தைகளின் முழுமையான பொருள் புரிந்தது.
அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார்? ஒற்றை வரியில் சமூக சேவை என்று பதிலளித்திருக்கிறார். அவர் ஏற்கனவே செய்து வந்ததும் சமூக சேவையே. ஆனால் அதற்கு சில கட்டுப்பாடுகள் இருந்தது. சொல்ல முடிந்ததை பேச முடிந்ததை செய்ய முடிந்ததை தனது பணி வரம்பிற்குள் நின்று தான் செய்திருக்கிறார். இன்றுள்ள இளைஞர் சக்திக்கு இவர் போன்ற மாபெரும் சக்தி தேவைப்படுகிறது. என்ன செய்யப் போகிறார்? பொறுத்திருந்து பார்ப்போம்.
கட்டுரையாளர் குறிப்பு
பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: எல்லோரும் குடிக்கலாமா… ஏ.பி.சி. ஜூஸை?