உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று மதியம் 12.30 மணி முதல் அமலுக்கு வந்தது.
கடந்த 2022 உத்தரகாண்ட் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்து.
கடந்தாண்டு உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த சட்டம் இன்று (ஜனவரி 27) 12.30 மணி முதல் அமலுக்கு வந்தது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜனவரி 28) உத்தரகாண்ட் வருகிறார். அவரது பயணத்துக்கு ஒருநாள் முன்னதாக மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொது சிவில் சட்ட இணையதளம் 27-ம் தேதி இன்று மதியம் 12.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி இதனை தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பாஜக நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தது. இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் உத்ரகாண்ட் ஆகும்.
பொது சிவில் சட்டம் பலதார மணத்தை தடை செய்கிறது, 21 வயது வயது நிரம்பிய ஆண்கள் 18 வயது நிறைவடைந்த பெண்கள் திருமணம் செய்து கொள்ளலாம். வாடகை தாய் பெற்றெடுத்த குழந்தையோ அல்லது தத்து எடுக்கப்பட்ட குழந்தையோ இனி பயாலாஜிக்கல் குழந்தைகளுக்கு உள்ள அதே உரிமை பெற்றோரின் சொத்தில் உண்டு.
மகன், மகள்களுக்கும் பெற்றோரின் சொத்தில் சம பங்கு அளிக்கப்படும். முக்கியமாக திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்களும் தங்களை முறையாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
21 வயதிற்குட்பட்டவர்கள் லைவ்-இன் உறவில் இருந்தால் பெற்றோரின் ஒப்புதல் இருக்க வேண்டும். தனிநபர்கள் தங்களுடைய லைவ்-இன் உறவுகளைப் பதிவு செய்யத் தவறினால் அல்லது தவறான தகவலை வழங்கினால், மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை, அல்லது ரூ. 25,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படலாம்.