பாஸ்கர் செல்வராஜ்
குஜராத் படுகொலையில் மோடியின் பங்கு குறித்த பிபிசியின் ஆவணப்படம், எல்லையில் 65 முனைகளில் இந்திய ராணுவம் கொண்டிருந்த நடமாட்ட மேற்பார்வை உரிமையை 26 இடங்களில் இழந்திருப்பது, பங்குச் சந்தையில் அதானி முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதை அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்டு இந்திய பங்குச் சந்தையின் மீது நடத்தப்பட்டிருக்கும் நிதியத் தாக்குதல் என மூன்று செய்திகள் மிகக் குறைந்த காலத்தில் வெளிவந்து ஒன்றிய பார்ப்பனியத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது.
இரு ஏகாதிபத்தியமும் முரண்படுவதேன்?
பிபிசியின் ஆவணப்படம் மோடியை தாக்குவதன் மூலம் அவரை மையப்படுத்தி கட்டியெழுப்பப்பட்ட குஜராத் வளர்ச்சி அரசியலை கேள்விக்குள்ளாக்குகிறது. எல்லையில் ஏற்பட்ட இழப்பை வெளியிட்டு இந்து தேசியத்தை காக்க வலுவான இந்துத்துவ அரசு வேண்டுமென இந்து சமூகத்திடம் பெற்ற ஆதரவு தகர்க்கப்படுகிறது.
அதானியின் பங்குகளை சரியவைத்து இந்த இந்துத்துவ அரசியலுக்குப் பின்னிருக்கும் பொருளாதாரக் கட்டமைப்பு உடைத்து நொறுக்கப்படுகிறது. இவை இந்துத்துவர்களின் பொருளாதாரம், அரசியல், சமூக அடித்தளங்களின் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
இதை பார்ப்பனிய சமூக ஏகாதிபத்தியத்துக்கும் அமெரிக்க முதலாளித்துவ ஏகாதிபத்தியத்துக்கும் முட்டிக்கொண்டதன் வெளிப்பாடு என பலரும் சரியாகவே கணிக்கிறார்கள். அப்படி முட்டிக்கொண்டால் மனித உரிமை பிரச்சினையை கையில் எடுப்பார்கள் என்பதும் எதிர்பார்த்ததுதான்.
ஆனால், இத்தனை நாளாக ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் இப்போது முட்டிக்கொள்வதன் காரணமென்ன என்பதுதான் இங்கே நமக்கு எழும் கேள்வி.
டாலர் மூலதனத்துக்கும், ரூபாய் மூலதனத்துக்குமான முரண்
குஜராத் படுகொலையோ, எல்லை விவகாரமோ பார்ப்பனிய பாசிச எண்ணம் கொண்ட சிறுபான்மை இந்துக்களையோ ஜனநாயக சிந்தனையற்ற அடிமை மனப்பான்மை கொண்ட பெரும்பான்மையோ எள்ளளவும் அசைக்காது.
ஆனால், அதானி நிறுவனங்களின் வீழ்ச்சியினால் சிக்கலுக்கு உள்ளாகும் எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்ட உள்நாட்டு நிதி நிறுவனங்கள் அதனால் ஏற்படப்போகும் நிதிய நெருக்கடி நிச்சயம் நடுத்தர வர்க்கத்தை நிலைகுலைக்கும். ஆகவே இந்த மோதலின் மையம் மூலதனம்.
மேலும், கொரோனா காலத்தின்போது இந்தியாவுக்குள் நுழைந்த டாலர் நிதிமூலதனத்தின் பெரும்பகுதி ரிலையன்ஸ் நிறுவனத்துக்குத்தான் சென்றது; அதானிக்கு அல்ல. அதானி பங்குகளின் வளர்ச்சி பெரும்பகுதி பொதுத்துறை, உள்ளூர் நிதி நிறுவனங்களினால் உண்டானது.
ஆகவே, இது வெறும் அதானியின் மீதான தாக்குதல் மட்டுமல்ல; ரூபாயின் மீதான தாக்குதலும்கூட. எனவே இதை அந்நிய டாலர் நிதிமூலதனத்துக்கும் உள்ளூர் ரூபாய் மூலதனத்துக்கும் இடையிலான முரண் என்ற கோணத்தில் புரிந்துகொள்ள முயலலாம்.
ரூபாய் மூலதன வரலாறு நாடு சுதந்திரமடைந்தபோது நிதித்துறை அரசிடமா, தனியாரிடமா என்ற வாக்குவாதத்தில் வங்கித்துறை தனியாரிடமும் காப்பீட்டுத்துறை ஒன்றியத்திடம் என ஆளுக்கு பாதியாக பிரித்துக்கொண்டார்கள்.
எழுபதுகளில் தங்கத்தை பின்புலமாகக் கொண்ட நிதிய கட்டமைப்பு முடிவுக்கு வந்து நிதிய நெருக்கடி எழுந்தபோது இந்திய வங்கி முதலாளிகள் அரசிடம் கொடுத்துவிட்டு நழுவியதில் வங்கித்துறையும் ஒன்றியத்திடம் வந்தது. எரிபொருளையும் தொழிற்துறை தொழில்நுட்பத்தையும் பின்புலமாகக் கொண்ட பெட்ரோடாலர் நிதியமுறை அப்போது நடைமுறைக்கு வந்தது.
அப்போது எரிபொருள், தொழில்நுட்பம் ஆகிய இரண்டையும் வைத்திருந்த சோவியத் ரஷ்யா பெட்ரோடாலருக்கு மாற்றான இன்னொரு துருவமாக விளங்கியது. டாலர் நிதிமூலதனத்தை அனுமதிக்க கொடுத்த அழுத்தத்தை சோவியத்தின் உதவியுடன் இந்தியா எதிர்கொண்டது. இந்திய தொழிற்துறை மூலதனமும் நடுத்தர வர்க்கத்தை சேமிக்க ஊக்குவித்து உருவான வங்கி மூலதனமும் இந்திய உற்பத்தியில் ஈடுபட்டது.
டாலர் மூலதன பதிலீடு
அமெரிக்க அழுத்தத்துக்கு உட்பட்டு பின்னாட்களில் படிப்படியாக டாலர் நிதி மூலதனத்தை ஒன்றியம் அனுமதித்தது. சோவியத் உடைப்பின்போது இந்திய பார்ப்பனிய ஆளும் வர்க்கத்தின் முதுகெலும்பை உடைத்து டாலர் நிதிமூலதனத்துக்கு இருந்த தடைகளை அமெரிக்கா நீக்கியது. வங்கி, காப்பீடு உள்ளிட்ட துறைகளில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டது.
மக்களை சேமிப்பதற்கு பதிலாக செலவு செய்யத் தூண்டும் நுகர்வு கலாச்சாரம் ஊக்குவிக்கப்பட்டது. 2008 நெருக்கடியைத் தீர்க்க ட்ரில்லியன் கணக்கில் டாலரை அமெரிக்கா அச்சிட்டது. அது உற்பத்தி சுழற்சியில் ஈடுபட்டு, லாபமீட்ட இந்தியாவில் எஞ்சி இருந்த தடைகளை நீக்க காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுத்தது. பல துறைகளில் அந்நிய முதலீடு 49 விழுக்காடு வரை அனுமதிக்கப்பட்டது.
சிக்கலுக்குள்ளான ரூபாயும், காங்கிரஸும்
இந்த முதலீட்டுக்கு லாபம் தரும் சில்லறை வர்த்தகம், தொலைத்தொடர்பு, மின்னணு வர்த்தகம் குறி வைக்கப்பட்டது. சில்லறை வர்த்தகத்துக்கு எழுந்த எதிர்ப்பை அடுத்து காங்கிரஸ் பின்வாங்கியது. தொலைத்தொடர்பு, மின்னணு வர்த்தகத்துக்கான போட்டி அலைக்கற்றை ஊழல் விவகாரமாக வெடித்தது. பொருள் உற்பத்தியை விட அதிகமான மிகைடாலர் உற்பத்தி உலகம் முழுவதும் எண்ணெய், விலைவாசி உயர்வைக் கொண்டு வந்தது.
எண்ணெய் உற்பத்தியாளர்களும் அதை நுகரும் நாடுகளும் மாற்றை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். இந்தியாவில் விலைவாசி உயர்வு இரட்டை இலக்கத்தை எட்டியது. இதை ஈரானிடம் இருந்து ரூபாயில் எண்ணெய் வாங்கி சமாளிக்க முயன்றது இந்தியா. 2013இல் டாலரை உள்ளிழுக்க ஆரம்பித்த டாலர் சுருக்க சுழற்சி இந்திய பங்குச்சந்தையை பதம் பார்த்தது. எண்ணெய், விலைவாசி உயர்வுடன் இதுவும் சேர்ந்து ரூபாயின் மதிப்பை பத்து ரூபாய்க்கும் மேல் வேகமாக சரித்தது.
மாற்றை நோக்கி காங்கிரஸ், மாற்றப்பட்ட ஆட்சி
அமெரிக்க ஒற்றை துருவத்தில் இருந்து உலகம் விலக ஆரம்பித்தது. இந்தியாவின் டாலர் மூலதன நெருக்கடியை பிரிக்ஸ் கூட்டமைப்பின் டாலர் நெருக்கடி நிதி, ஆசிய உள்கட்டமைப்பு வளர்ச்சி வங்கி (AIIB) ஆகியவற்றில் இணைந்து எதிர்கொள்ள முயற்சி செய்தது மன்மோகன்சிங் அரசு. சீன முதலீடு, சீன நிறுவனங்களுக்கும் அனுமதி அளிப்பதன் மூலம் அமெரிக்க டாலர் அழுத்தத்தைக் குறைக்க முயன்றது.
இதற்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய தரகு பார்ப்பனிய பனியாக்களும் கைகோத்தார்கள். அண்ணா ஹசாரே ஊழல் ஒழிப்புப் போர் நாடகம் முகநூலில் ஒளிபரப்பப்பட்டது. குஜராத் வளர்ச்சி அரசியல் கோசத்தை அதற்கு தீர்வாக முன்வைத்து பாஜக ஆட்சிக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த ஆட்சி அந்நிய முதலீட்டுக்கு இருந்த வரம்பை மேலும் தளர்த்தியது. வங்கி, காப்பீட்டில் பொதுத் துறையின் ஆதிக்கம் உடைக்கப்பட்டு தனியாரின் கையோங்கியது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் முறைசாரா உற்பத்தியையும், வர்த்தகத்தையும் வங்கிப் பரிவர்த்தனையின்கீழ் கொண்டுவரப்பட்டது. பிஎஸ்என்எல் மற்றும் பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திவாலாக்கப்பட்டு இரு குஜராத்திகளிடம் போய் செறிவடைந்தது. பொதுத்துறை நிதி நிறுவனங்களில் இருந்த மக்களின் சேமிப்பு வேண்டப்பட்டவர்களுக்கு வாரி வழங்கப்பட்டது.
நாளை தொடரும்
வர்த்தகத்தில் போட்டி, மோதலில் உலகம்
கட்டுரையாளர் குறிப்பு
தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!
திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கைது!