அமெரிக்க – பார்ப்பனிய ஏகாதிபத்திய முரணும் சுயாட்சிக்கான வாய்ப்பும் – பகுதி 2

அரசியல் சிறப்புக் கட்டுரை

பாஸ்கர் செல்வராஜ்

நேற்றைய தொடர்ச்சி….

வர்த்தகத்தில் போட்டி, மோதலில் உலகம்

எரிபொருள் வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கம் உடைந்து சீனாவும், ரஷ்யாவும் சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்ய ஆரம்பித்தன.

தொலைத்தொடர்பு மற்றும் மின்னணு சாதன தொழில்நுட்பங்களில் அமெரிக்காவின் ஏகபோகம் தகர்ந்து சீனா இந்தப் பொருட்களுக்கான சந்தையில் போட்டியாளன் ஆனது.

இந்த இரண்டின் உற்பத்தியையும் கட்டுப்படுத்தி லாபமீட்டிய டாலரின் ஆதிக்கத்தைத் தக்கவைக்க மத்திய கிழக்குப் போர்களிலும் சீனாவுடன் வர்த்தகப் போரிலும் ஈடுபட்டது அமெரிக்கா.

சீனாவையும்  ரஷ்யாவையும் சுற்றிவளைத்து அவற்றின் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி அடிபணிய வைக்கும் தந்திரங்களில் ஈடுபட்டு வந்தது. உக்ரைனும், தைவானும் உலக அரசியலின் முக்கிய இடத்துக்கு வந்தன.

2019 ஆகஸ்டில் ஒன்றியம் ஜம்மு காஷ்மீருக்கு வழக்கப்பட்ட சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப்பெற்று மாநில உரிமை பறிக்கப்பட்டு ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது, முஸ்லிம் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையாகச் சித்திரிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் அக்சாய்சின் பகுதியையும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என்று ஆர்ப்பரித்தார் அமித் ஷா. அக்சாய்சின் பகுதி திபெத்துக்கும் சிஞ்சியாங் சுயாட்சி பகுதிக்கும் இடையில் இருக்கும் சீனாவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இரண்டு பகுதிகளையும் இணைக்கும் நெடுஞ்சாலை இந்தப் பகுதி வழியாகச் செல்கிறது.

அக்சாய்சின்


கொரோனா தொற்று, எல்லை மோதல், சந்தை செறிவு

சீனாவில் கொரோனா பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு இந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் லடாக் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையில் மோதல் வெடித்தது. சீன ராணுவம் இந்திய பகுதியில் முகாம் அமைத்து ஆக்கிரமித்தது. அங்கிருந்து வெளியேற இருவருக்கும் பொதுவான இரு ராணுவமும் செல்லாத பகுதியை (Buffer Zone) ஏற்படுத்த சீனா கோரியது. இந்தியா மறுத்தது. பாதுகாப்பு காரணங்களைக் காட்டி மின்னணு பொருளாதாரத்தில் இருந்து சீன நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டன. சீன முதலீட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது.

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் உற்பத்தி சங்கிலியை உடைத்து மற்ற நாடுகளுக்கு மாற்றப்போவதாக செய்திகள் வெளியானது. சீனாவில் இருந்து வெளியேறும் உற்பத்தியை இந்தியாவுக்குக் கொண்டுவர ஏதுவாக புதிய கல்விக் கொள்கை, விவசாய மற்றும் தொழிலாளர் சட்டத் திருத்தம் ஆகியவை கொண்டு வரப்பட்டது.

கொரோனாவை எதிர்கொள்ள அமெரிக்கா ட்ரில்லியன் கணக்கில் மேலும் டாலரை வெளியிட்டது. இந்த டாலர் முதலீட்டுக்கு மேலும் அதிகமாக இந்தியா திறந்துவிடப்பட்டது. ரூபாய் மூலதனத்தை முழுமையாக டாலர் பதிலீடு செய்தது. இந்தியாவின் டாலர் கையிருப்பு வரலாறு காணாத (642 பில்லியன்) உச்சத்தை கண்டது.

இந்த முதலீட்டின் மூலம் அமேசான், வால்மார்ட், ஜியோ, கூகுள், முகநூல் நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தையும், மின்னணு வர்த்தகத்தையும் கைப்பற்றின. எரிபொருள், போக்குவரத்து, மின்னாற்றல், தரவுகள் சேமிப்பு, வீட்டு பயன்பாட்டு பொருட்கள் என எல்லாவற்றிலும் அதானி கால் பதித்தார்.

மூலதனம், தொழில்நுட்பம், வர்த்தகம் என அனைத்திலும் இந்தியா அமெரிக்கமயமானது. அம்பானி, அதானி மற்றும் அமெரிக்க நிறுவனங்களிடம் இந்திய பொருளாதாரம் செறிவடைந்தது. பொதுத்துறையில் இருந்த ரூபாய் மூலதன சேமிப்பை ஒன்றிய அரசுக்கு நெருக்கமானவர்கள் கடனாக வாங்கிக்கொண்டு கம்பி நீட்டினார்கள். வாராக்கடன் வரலாறு காணாத அளவை எட்டியது.

மீண்டும் டாலர் சுருக்கம், நெருக்கடியில் இந்தியா

முன்பு போலவே இம்முறையும் மிகைடாலர் வெளியீடு உலகம் முழுக்க எண்ணெய், விலைவாசி உயர்வைக் கொண்டு வந்தது. 2013ஐப் போலவே டாலர் சுருக்க சுழற்சியை ஆரம்பித்தது அமெரிக்கா. இந்திய பங்குச்சந்தை இறங்கி ரூபாயின் மதிப்பும் சரிய ஆரம்பித்தது.

இம்முறை ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை ரூபாயில் இறக்குமதி செய்து சமாளித்தது பாஜக அரசு. இதன் பலனை மக்களுக்குக் கொடுத்து அவர்களின் வாங்கும் திறனை கூட்டி ரூபாய் சார்ந்த ஒரு பொருளாதார சுழற்சியை ஏற்படுத்தி இருக்கலாம்.

மாறாக ரிலையன்ஸ் மொத்தமாக ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் பார்த்தது. ஒன்றியம் தனது வரி வருவாய் பற்றாக்குறையையும் நிதி நிறுவனங்களின் வாராக்கடனையும் இதன்மூலம் சரி செய்தது. பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறும் போதெல்லாம் பொதுத்துறையின் ரூபாய் சேமிப்பைக்கொட்டி பங்கின் விலையை வீழாமல் காத்தது.

விலை குறைவாக இருக்கும்போது அந்நிய முதலீட்டாளர்கள் வாங்குவதும் விலை கூடியவுடன் விற்று வெளியேறுவதும் அந்த அதிக விலை கொண்ட பங்குகளை உள்ளூர் நிதி நிறுவனங்கள் வாங்குவதையும் விவேக் கவுல் போன்றவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

பங்குச்சந்தை உயர்வில் பெரும்பங்கு குறிப்பிட்ட நிறுவனங்களாக இருப்பதை பலரும் பேசினார்கள். இது அதானிக்கு சொத்து மதிப்பை உயர்த்திக் காட்டவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டவும் தோதாக இருந்ததால் விளையாட்டு தொடர்ந்தது.

இப்போது இந்திய மக்களின் சேமிப்பு ஜிடிபியில் 27 விழுக்காடாக குறைந்திருக்கிறது. சிலிக்கன் பள்ளத்தாக்கில் சளி பிடித்து ஐம்பதாயிரம் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அடுத்து இந்திய ஜிடிபியில் ஒன்பது விழுக்காடு பங்களிக்கும் மென்பொருள் துறைக்கு காய்ச்சல் வராமல் போகாது.

வங்கிகள் நிறுவனங்களுக்குத் தரும் கடனைவிட தனிநபர்களுக்கு கொடுக்கும் கடன் பெருகி இருக்கிறது. மக்கள் வாங்கும் திறனற்றுப்போய் இருக்கிறார்கள். இந்திய ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறைய ஆரம்பித்திருக்கிறது.

மாற்று உலக ஒழுங்கை நோக்கி பாஜக, மாறுமா ஆட்சி?

சீன முதலீட்டுக்கும் நிறுவனங்களுக்கும் விதித்த தடை எல்லையில் இழந்த மேற்பார்வை உரிமையை திரும்ப தரவில்லை. அதன்பின் குறைந்த இந்திய ஏற்றுமதி அதிகரித்த சீன இறக்குமதி இந்தியாவின் சீனசார்பு பலகீனத்தையே வெளிப்படுத்தியது. அது இந்தியா சீனாவின் இருவரும் மேற்பார்வையிடாத பகுதியை உருவாக்கும் முன்மொழிவை ஏற்க வைத்திருக்கலாம். இதன் தொடர்ச்சி சீனாவுடனான சமரசமாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.

எதிர்வரும் பிரிக்ஸ் கூட்டத்தில் பொதுவான நாணயம் குறித்து பேசுவோம் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பேசி இருந்தார். இதோடு சமீபத்தில் இந்தியா தெற்காசிய நாடுகளின் கூட்டத்தைக் கூட்டி பேசியது.

இது ரஷ்யாவின் எண்ணெயை இந்தியாவில் சுத்திகரித்து உருவாகும் எரிபொருளையும் மற்ற பொருட்களையும் இந்திய ரூபாயில் இந்த பிராந்தியத்துக்குள் பரிவர்த்தனை செய்து ஒரு பொருளாதார சுழற்சியை உருவாக்கி தெற்கு ஆசியாவின் துருவமாக இந்தியாவை மாற்றும் நகர்வாக இருக்கலாம்.


டாலருக்கு வெளியில் நடக்கும் மாற்று நாணய பொருளாதார நகர்வுகள் அதன் ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்குபவை. அதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் அதானி – பாஜகவின் மீது இந்த தாக்குதல் தொடுத்திருக்க வாய்ப்புகள் உண்டு.

ரூபாய் மூலதனத்தின் மொத்த பலன்களையும் கடனாகவும், வரிச் சலுகையாகவும், பங்கில் முதலீடாகவும் ஒருவரிடம் குவித்ததால் டாலர் மூலதனம் ரூபாயை தாக்குவதற்கு எளிதான வாய்ப்பை பார்ப்பனிய பாஜக ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

இந்தத் தாக்குதல் உள்நாட்டில் என்ன விளைவுகளை உண்டாக்கும்? அதனால் ஏற்படும் பொருளாதார பிரச்சினைகள் 2014ஐப் போன்று 2024லும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா? இந்திய தேசிய சந்தைக்கான டாலர் ஓர்மையின் அரசியல் முகமாக இந்திய ஒற்றுமை பயணம் செல்லும் காங்கிரஸ் மாறுமா? பிராந்திய கட்சிகளின் அழுத்தத்தில் இரண்டு ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கமும் உடைந்து ரூபாய் மீண்டு உண்மையான பன்மைத்துவம் மலருமா?

அமெரிக்கா-பார்ப்பனியம் ஆகிய இரு ஏகாதிபத்தியங்களும் மோதிக்கொண்டு பலகீனப்படும் இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பிராந்திய கட்சிகள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் எரிபொருள், வங்கி, காப்பீடு, தொலைத்தொடர்பு, தரவுகள், வரிவிதிப்பு ஆகியவற்றை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து மாநில சுயாட்சியையும் சுயசார்பையும் ஏற்படுத்துவார்களா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பகுதி 1

நிறைவடைந்தது

கட்டுரையாளர் குறிப்பு

USA targets Hindutva and Brahminism Bhaskar Selvaraj
பாஸ்கர் செல்வராஜ்,

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தளபதி 67 அப்டேட் : களமிறங்கும் பாலிவுட், மாலிவுட், டோலிவுட் நடிகர்கள்!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *