உலகம் முழுவது பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் அமெரிக்கா நாட்டின் அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைய உள்ளது.
உலகின் சக்தி வாய்ந்த நாடாக கருதப்படும் அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவி காலம் வரும் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. இதனையடுத்து அந்நாட்டு சட்டப்படி நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற வேண்டும். அதன்படி பலத்த எதிர்பார்ப்பிற்கிடையே இன்று தேர்தல் நடைபெறுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை போட்டியிடும் துணை அதிபரும், ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸுக்கும், குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கருத்துகணிப்புகள் என்ன சொல்கிறது!
இருவரும் கடந்த 6 மாதங்களாக நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கருத்துக்கணிப்புகளில் கமலா முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை இறுதியில் வெளியான தேர்தல் கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸுக்கான ஆதரவு அதிகமாக இருந்தது. ட்ரம்பைவிட அவருக்கு கூடுதலாக 3 சதவீதம் பேர் ஆதரவு அளித்தனர்.
தொடர்ந்து கடந்த அக்டோபரில் வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் கமலாவுக்கு 44 சதவீதம் பேரும், ட்ரம்புக்கு 43 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர். இருவருக்குமான இடைவெளி ஒரு சதவீதமாக இருந்தது.
தேர்தலுக்கு முந்தைய இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பு கடந்த நவம்பர் 2-ம் தேதி பிரபல ‘தி ஹில்’ நாளிதழ் வெளியிட்டது.
அதில், கமலாவுக்கு 47.9%, ட்ரம்புக்கு 46.9% வாக்குகள் கிடைத்தன. இவை உட்பட புதிதாக வெளியான பல்வேறு கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸே தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்காக கமலா சார்பில் இதுவரை ரூ.6,640 கோடியும், ட்ரம்ப் சார்பில் ரூ.3,000 கோடியும் செலவிடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றியாளரை தீர்மானிக்கும் 7 மாகாணங்கள்!
இந்த நிலையில் தான் இன்று உச்சக்கட்ட பாதுகாப்புடன் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. இதில் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவேடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை அணி மாறும் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
பொதுவாக அதிபர் தேர்தலின்போது இந்த 7 மாகாணங்களின் மக்கள் ஒருமுறை குடியரசு கட்சிக்கும், மறுமுறை ஜனநாயக கட்சிக்கும் ஆதரவாக வாக்களிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
எனவே அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த 7 மாகாணங்களின் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.
வாக்குப்பதிவு எப்போது தொடங்கும்?
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவுகள் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 7 மணிக்கு முடிவடையும். அதாவது இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடையும்.
அதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை உடனடியாக துவங்கும். வழக்கமாக, தேர்தல் நாளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் முதலில் எண்ணப்படும். அதன்பின்னர் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வாக்குகள், தபால் வாக்குகள், சந்தேகத்திற்குரிய வாக்குகள், வெளிநாட்டு மற்றும் ராணுவ வாக்குகள் எண்ணப்படும்.
அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் தேர்வாகும் 538 பிரதிநிதிகளில், 270க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை பெறும் வேட்பாளரே அடுத்த அதிபராக அறிவிக்கப்படுவார்.
அவர் 2025ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி திங்கட்கிழமை அன்று அமெரிக்க கேபிடல் வளாகத்தின் மைதானத்தில் அமெரிக்காவின் 60வது அதிபராக பதவியேற்பார்.
சாதிக்க போவது யார்?
கடந்த 236 ஆண்டுகளாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆண்களே வெற்றி வாகை சூடியுள்ள நிலையில், முதன்முறையாக பெண் அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவாரா?
அல்லது கருத்துக்கணிப்பில் பின்தங்கியுள்ள டொனால்ட் ட்ரம்ப், அதை பொய்யாக்கி மீண்டும் அதிபர் நாற்காலியில் அமர்வாரா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
முகுந்த வரதராஜனின் சாதி அடையாளம் இடம்பெறாதது ஏன்? : இயக்குநர் ராஜ்குமார் விளக்கம்!
தமிழக அரசின் முதல்வர் மருந்தகம் அமைக்க முழு விவரங்கள்!