அமெரிக்க அதிபர் தேர்தலும், உலக அரசியல் சூழலும்: தமிழர்கள் அறிய வேண்டியவை என்ன?

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

உலகின் எந்தப் பகுதியுமே இன்று தனித்தீவு அல்ல. மிக நெருக்கமாகப் பின்னப்பட்ட பொருளாதார வலைப்பின்னல் அனைத்து சமூகங்களையும் பிணைத்துள்ளது. நீங்கள் கேட்கலாம். இது புதியதல்லவே, உலகில் தூர தேசங்களிடையே வர்த்தகம் என்பது பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ளதே என்று. உதாரணமாக, தமிழ்நாட்டில் ரோமப் பேரரசின் நாணயங்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

ஆனால், இத்தகைய வர்த்தகப் பரிமாற்றங்கள் உள்நாட்டு பொருளாதாரத்தை, உள்ளூர் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பவையாக இருக்கவில்லை. ஏனெனில் பண்டங்கள் அனைத்தையும் தொலைதூரங்களுக்கு துரிதமாகக் கொண்டு செல்லும் வாய்ப்பு இல்லாததால், பெரும்பாலும் நுகர்வு என்பது உள்ளூர் உற்பத்தியை சார்ந்தே இருக்கும்.

இன்றைக்கு உணவுப் பொருட்கள், காய்கறிகள் என அனைத்துமே பிரம்மாண்டமான போக்குவரத்து வலைப்பின்னலில் பிணைக்கப்பட்டுள்ளன. அதனால் பெட்ரோல் போன்ற எரிபொருட்களின் விலை அதிகரித்தால் உள்ளூர் சந்தையில் காய்கறிகள் விலை அதிகரிக்கும் சூழல் உள்ளது. முதலீடு, உற்பத்தி, தொழிலாளர்கள், பண்டங்கள், நுகர்வு எல்லாமே எல்லைகள் கடந்து இடம்பெயரும், பரவும் தன்மையுடன் உள்ளன.

அத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டியது என்னவென்றால், மக்களாட்சி அரசியல் என்ற தத்துவமும் உலகளாவிய ஒரு சிந்தனைப்போக்காக மலர்ந்தது என்பதைத்தான். ஒவ்வொரு பண்பாட்டிலும் அதற்கான வேர்கள், விழுமியங்கள் பலவிதமாக உருவாகியிருக்கலாம். ஆனால், அவையனைத்தும் ஒன்றோடொன்று இணைந்து உலக அளவிலான மானுடவாத நோக்காக, மக்களாட்சி தத்துவமாக மலர்ந்தது. தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தன்னை இந்த உலகளாவிய மறுமலர்ச்சியின் பகுதியாகத்தான் கருதியது. பல்வேறு உலக சிந்தனையாளர்களையும், பல்வேறு நாட்டின் அரசியல் இயக்கங்களையும் குறித்து திராவிட இயக்க ஏடுகள் தொடர்ந்து எழுதி வந்தன.

இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, ஐரோப்பிய நாடுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் தங்கள் ஆட்சியை நிறுவியதுதான். அதனால் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டி என்பது 1914-ம் ஆண்டு உலகப் போராக மாறியது. அதனால்தான் தமிழ்நாட்டுக்கு எந்த நேரடித் தொடர்பும் இல்லாத ஜெர்மனியின் எம்டன் கப்பல் 1914-ம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் குண்டுகளை வீசியது. இதனால் எம்டன் என்ற சொல் தமிழ் மொழியில் வெகுஜன வழக்கில் ஆபத்தான திறமையும், ஆதிக்க உணர்வும் கொண்டவர்களை குறிக்க பயன்படுத்தப்பட்டது.

முதல் உலகப்போரின் விளைவாக செய்தித்தாள் வாசிப்பும், பத்திரிகைகள் வாசிப்பும் தமிழ்நாட்டில் அதிகரித்தது. முதல் உலகப் போர் முடிந்து இருபது ஆண்டுகள் கழித்து இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. இதனால் உலக அரசியல் என்பது குறித்த அக்கறை தமிழ்நாட்டில் தவிர்க்கவியலாமல் பரவியது.
பல்வேறு நாடுகளிலும் காலனி ஆதிக்கத்தை எதிர்த்தும், பழைய மன்னராட்சி போன்றவற்றை எதிர்த்தும் உருவான மக்கள் கிளர்ச்சிகள், போராட்டங்கள் ஆகியவை தமிழ்நாட்டிலும் அரசியல் தன்னுணர்வை வளர்க்கப் பயன்பட்டன. துருக்கியின் கமால் பாட்ஷா, வியட்நாமின் ஹோசிமின் உள்ளிட்ட பல தலைவர்களைக் குறித்து திராவிட இயக்க ஏடுகள் எழுதி வந்தன.

இருப்பினும் கடந்த சில பத்தாண்டுகளில் உலக அரசியலில் தமிழ் ஊடகங்கள் போதுமான ஆர்வம் காட்டுவதில்லை. உள்ளூர் அரசியல் செயல்பாடுகளில் கவனத்தைக் குவிப்பதால் நம்மை வெகுவாக பாதிக்கக்கூடிய உலகச் செய்திகளைக்கூட மிகக் குறைவாகவே ஊடகங்கள், குறிப்பாக தமிழ் தொலைக்காட்சி ஊடகம் விவாதிக்கிறது.

உண்மையில் உலகம் இன்று மிக விநோதமான ஒரு முரண்பாட்டில் சிக்கியுள்ளது. மிகப்பெரிய பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள், Multi National Corporation (MNC) என்பவை உலகளாவிய உற்பத்தி, வர்த்தகத்தை நிர்வகிக்கின்றன. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் நிறுவப்பட்ட உலக வங்கி (World Bank), சர்வதேச நிதிக் குவியம் (International Monetary Fund) ஆகியவை உலக நாடுகள் அனைத்திற்கும் கடன் வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தை நிர்வகித்து வருகின்றன. அதேசமயம், உலகெங்கும் பல தேசங்களிலும் தீவிர வலதுசாரி தேசியம் இன வெறுப்பு அரசியலையும், குறுகிய தேசிய பார்வையையும் கொண்டு வளர்ந்து வருகிறது.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இரு துருவ உலக அரசியலின் குறியீடாக விளங்கிய பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும் இணைந்தபோது, ஒரு துருவ உலகம் உருவாகிவிட்டதாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து சோவியத் ரஷ்யாவின் கம்யூனிச அரசு வீழ்ந்ததும், ரஷ்யா பல நாடுகளாக சிதறியதும் ஒரு துருவ உலக அமைப்பு (Unipolar World) நிலைபெற்றதாகக் கருத இடமளித்தது. உலக அளவில் மிகப்பெரிய ராணுவ பலத்தைக் கொண்ட அமெரிக்கா, பொருளாதார ஆற்றல் மிக்க நாடாகவும் இருந்ததால் ஒரு துருவ உலகின் மேற்பார்வையாளனாக, போலீஸாக இருக்கும் என்றும் கருதப்பட்டது. இன்றைக்கு அதில்தான் மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது.

மீண்டும் இரு துருவ உலகம்

எண்பதுகளில் சீனா, அமெரிக்க முதலீட்டை அனுமதித்ததால், அமெரிக்காவுடன் பிரம்மாண்டமான வர்த்தகப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதால் அது ஒரு துருவ உலக அமைப்புக்கு எதிரானதாகக் கருதப்படவில்லை. ஆனால், கடந்த முப்பதாண்டுகளில் அது அமெரிக்காவுக்கு இணையான ராணுவ, பொருளாதார வலிமை கொண்ட தேசமாக மாறியுள்ளது. ராணுவ பலம் இருந்தாலும், பொருளாதார வலுவில்லாத ரஷ்யாவுக்குப் பின்புலமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. வட கொரியா, ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய அணு ஆயுத சக்தி வாய்ந்த நாடுகள் தெளிவாக அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கு எதிராக இயங்கும் வல்லமையுடன் கூட்டணி சேர்ந்து உள்ளன.

எந்த நாடு அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினாலும் அது பெரும் சேதத்தை விளைவிப்பதுடன், உலகப் போருக்கே வித்திடலாம் என்பதால் அணு ஆயுத நாடுகளைப் பிற நாடுகள் நேரடியாகத் தாக்குவது தவிர்க்கப்படுகிறது. அணு ஆயுத ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தபோது மேற்கத்திய நாடுகள் அனைத்தும் உக்ரைனுக்கு ராணுவ, பொருளாதார உதவிகள்தான் செய்கின்றனவே தவிர, எந்த நாடும் ரஷ்யாவைத் தாக்க முன்வரவில்லை. காரணம், அப்படித் தாக்கினால் ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தத் தயங்க மாட்டார் என்பதுதான். அதனால் உக்ரைன் போர் மூன்றாவது ஆண்டாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. அவ்வப்போது தாக்குதல்கள் கடுமையாகி உக்ரைனில் கடும் சேதங்கள் விளைகின்றன. உக்ரைனும் ரஷ்யாவின் மீது சில தாக்குதல்களை நிகழ்த்துகிறது என்றாலும், ரஷ்யா பன்மடங்கு வலுவானது என்பதால் உக்ரைன் அதை வெல்வது சாத்தியமில்லை.

ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து அதைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் அமெரிக்காவால் வெற்றி பெற முடியவில்லை. இந்தியா உட்பட பல நாடுகளும் வர்த்தக ஆதாயம் கருதி ரஷ்யாவுடன் தொடர்ந்து பொருளாதார உறவுகளைப் பேணி வருகின்றன. இந்தியாவும், பிரதமர் மோடியும் போர் நிறுத்தத்திற்கு முயற்சி செய்வதாகச் சொன்னாலும், சந்தர்ப்பவாத நிலைபாடுகளையே மேற்கொள்வதாகத் தெரிகிறது. சீனா வெளிப்படையாகவே ரஷ்யாவை ஆதரித்து அதற்கான பின்புலமாக விளங்கி வருகிறது.

உக்ரைனுக்கு அடுத்த முக்கிய போர்ச்சூழலாக இஸ்ரேல் – லெபனான் – ஈரான் போர் மூளத் தொடங்கியுள்ளது. வெகுகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பாலஸ்தீனியப் பிரச்சினையில், காஸாவின் மீதான தன் ஒடுக்குமுறையை இஸ்ரேல் தளர்த்தாததால், காஸாவில் ஆட்சியிலிருந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தீவிரவாதத் தாக்குதலைத் தொடுத்து, பலரை கடத்திச் சென்றது. ஹமாஸுக்கு பாடம் புகட்டுவதாக இஸ்ரேல் காஸாவின் மீது கொடூரத் தாக்குதலை நிகழ்த்தி, அப்பாவி மக்களை இரக்கமின்றி கொன்று குவிக்கத் தொடங்கியது.

இந்தப் போர் துவங்கி ஓராண்டுக் காலம் ஆகியும் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. நாற்பதாயிரம் அப்பாவி பாலஸ்தீனியர்களைக் கொன்றும், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. பிணையக் கைதிகளையும் மீட்க முடியவில்லை. இதற்கிடையில் ஹமாஸுக்கு ஆதரவாகத் தெற்கு லெபனானிலிருந்து ஹிஸ்புல்லா என்ற தீவிரவாத அமைப்பு இஸ்ரேலை தாக்க, இஸ்ரேல் அங்கும் கடும் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டது. ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர் கருவிகளில் குண்டு வைத்து விநியோகம் செய்து அவற்றை வெடிக்கச் செய்த இஸ்ரேல் பல அப்பாவி மக்களும் அந்த விபரீத பேஜர் வெடிப்புகளில் இறக்கக் காரணமாகியது.

ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேல் தாக்குதல்கள் லெபனான் மீதான தாக்குதல்களாக மாற, ஹிஸ்புல்லா/லெபனானுக்கு ஆதரவாக ஈரான் இஸ்ரேலைத் தாக்கியுள்ளது. பதிலடியாக இஸ்ரேலும் ஈரானைத் தாக்கப் போவதாகக் கூறியுள்ளது. ஈரானுக்கு ஆதரவாக சீனா குரல் எழுப்பியுள்ளது. லெபனானுக்கு ஆதரவாக ரஷ்யாவும், ஃபிரான்ஸும் குரல் கொடுத்துள்ளன. எந்த நேரத்திலும் மிகப்பெரிய போர் ஒன்று இஸ்ரேல் – அரேபியப் பகுதிகளில் வெடிக்க வாய்ப்புள்ளது. இத்தகைய பதற்றமான சூழ்நிலையில்தான் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் அலங்கோலங்கள்

மன்னரேயில்லாத நவீன மக்களாட்சிக் குடியரசாக இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உருவான அமெரிக்காவின் மக்களாட்சி இன்று அலங்கோலமாகக் காட்சியளிக்கிறது. காரணம், ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப். இவர் கடுமையான இனவெறி வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதுடன், சர்வதேச அரசியலிலும் வாய்க்கு வந்தபடி பேசி அதிர்ச்சியளிப்பவராக இருக்கிறார்.

டொனால்ட் டிரம்ப் ரியல் எஸ்டேட் அதிபரான தந்தைக்குப் பிறந்தவர். தந்தையும், தனயனும் பல சர்ச்சைக்குரிய பணப்பரிமாற்றங்களில், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். பின்னர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராகப் புகழ்பெற்றார். அவர் அரசியலில் புகுந்து ரிபப்ளிகன் கட்சியின் வேட்பாளராக 2016-ம் ஆண்டு களம் இறங்கினார். அப்போதே அவர்மீது பாலியல் ரீதியான புகார்கள், பெண்களை இழிவாகப் பேசிய புகார்கள் எழுந்தன. ஆனால் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் வரும் அகதிகளுக்கு எதிராக கடும் இனவெறுப்பு அரசியல் பேசியும், தீவிர வலதுசாரி அரசியல் பேசியும் கவனம் ஈர்த்தார்.

அமெரிக்கத் தேர்தல் முறை வித்தியாசமானது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேர்தல் சபை பிரதிநிதிகள் உண்டு. அமெரிக்க அதிபராகப் போட்டியிடும் வேட்பாளருக்கு அனைத்து மக்களும் நேரடியாக வாக்களித்தாலும், மாநில வாரியாக யார் அதிக வாக்குகள் பெறுகிறாரோ அவருக்கு அந்த மாநிலத்தின் தேர்தல் சபை வாக்குகள் அனைத்தும் கிடைத்துவிடும். இந்த முறையில் டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்ட டெமாக்ரடிக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனைவிட டிரம்ப் தேசிய அளவில் குறைவான வெகுஜன வாக்குகள் பெற்றாலும், அதிக தேர்தல் சபை வாக்குகளைப் பெற்று அதிபராகப் பதவி ஏற்றார். இவர் பதவிக் காலத்திலும் சர்ச்சைகளுக்குக் குறைவில்லை; கொரோனா வைரஸ் குறித்து இவர் பேசியதெல்லாம் இன்னொரு வேடிக்கை.

அதையெல்லாம் தூக்கியடித்தது என்னவென்றால் 2020 தேர்தலில் இவர் டெமாக்ரடிக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தெளிவாகத் தோற்றபோதும் இவர் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்ததுதான். இவருடைய ஆதரவாளர்களை ஏவிவிட்டு அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தையே தாக்க வைத்தார். தேர்தல் முடிவுகளுக்கு எதிராக இவர் தொடுத்த வழக்குகள் எல்லாம் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும், இவரும், இவர் ஆதரவாளர்களும் இன்றுவரை தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார்கள் என்பதுதான் விபரீதமானது.

இப்போது நடைபெறும் தேர்தலில் இவருக்கு எதிராக டெமாக்ரடிக் கட்சியில், துணை குடியரசுத் தலைவராக உள்ள, கருப்பின மற்றும் இந்திய-தமிழ் வம்சாவழியினரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அமெரிக்காவின் இருநூற்றைம்பது கால மக்களாட்சி வரலாற்றில் இதுவரை ஒரு பெண் அதிபராக பதவி வகித்ததில்லை என்பது வெட்கக் கேடானது. இதைக் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக் கூரை என்று அமெரிக்கப் பெண்கள் அமைப்புகள் வர்ணிக்கின்றன. அந்த கண்ணாடிக் கூரையான ஆணாதிக்க மனப்பான்மையின் துணையுடன்தான் ஹிலாரி கிளிண்டன் என்ற பெண்ணை தோற்கடித்து டிரம்ப் ஆட்சிக்கு வந்தார்.

உலக அரசியலின் பிரச்சினைகளுக்குப் பின்னணியில் அமெரிக்க உலக மேலாதிக்க முயற்சிகளின் வரலாறு இடம்பெற்றுள்ளது. அதனால் திடீரென அமெரிக்கா அந்தப் பிரச்சினைகளிலிருந்து விலக முடியாது. ஆனால், தீவிர வலதுசாரி தேசியம் பேசும் டிரம்ப் தேசிய சுயநலத்தை வெகுஜன கவர்ச்சி அரசியலாகப் பேசுகிறார். உலக செல்வந்தர் பட்டியலில் முதலிடம் வகிக்கும் எலான் மஸ்க் டிரம்ப்பை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

உக்ரைன் X ரஷ்யப் போர், இஸ்ரேல் X காஸா – லெபனான் – ஈரான் போர் ஆகியவற்றின் பின்னணியில் அமெரிக்காவின் தொடர் செயல்பாடுகள் உள்ளன. ஒரு காலத்தில் ரஷ்யாவின் அங்கமாக இருந்த உக்ரைனை அதன் செல்வாக்கிலிருந்து பிரித்து நேட்டோ அமைப்பில் சேர்த்து தங்கள் வசம் கொண்டுவர அமெரிக்கா செய்த முயற்சிகளின் விளைவாகத்தான் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது என்பதே வல்லுநர்கள் பலரின் கருத்து. அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டுமானால் அது அமெரிக்காவின் பங்கின்றி நடக்காது. டிரம்ப் உக்ரைனை கைவிட நினைக்கிறார். அது மேலும் சமன் குலைவையே ஏற்படுத்தும்.

அதைவிட இஸ்ரேலுக்கு டிரம்ப் இரு தினங்களுக்கு முன் சொன்ன ஆலோசனைதான் கடும் அதிர்ச்சியளிப்பது. ஈரானின் அணு ஆயுத நிலையங்களைத் தாக்கி அழித்துவிட வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அறிவுறுத்தியுள்ளார் டிரம்ப். அவர் சமநிலையுடன் (Mental balance) சிந்தித்துச் செயல்படுவதில்லை என்று அவருடன் பணியாற்றிய சிலர் கூறியுள்ளார்கள். அந்தக் கூற்றை நம்பாமல் இருக்க முடியவில்லை. இஸ்ரேல் அப்படி ஈரானின் அணு ஆயுத ஆற்றலைத் தாக்கினால் ஈரான் என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா? அல்லது ஈரானுக்கு பின்னால் நிற்கும் சீனாதான் வாளாவிருக்குமா?

உலக அரசியல் முரண்பாடுகள் மிகுந்த சிக்கலடைந்து கொண்டுள்ளது தெளிவாக உள்ளது. அந்த சிக்கலுடன் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகும் சிக்கலையும் உலகம் தாங்குமா என்று தெரியவில்லை. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்கும் மக்களுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன உலக அரசியல் தெரியுமோ அந்த அளவுக்குக்கூட தெரியுமா என்பது ஐயமே.

இதுதான் இன்றைய உலகின் நிலை. பெரும்பாலான நாடுகளில் மக்கள் அன்றாட பிரச்சினைகளில் மூழ்கியுள்ளார்கள் அல்லது அதிலிருந்து விடுபட கேளிக்கைகளை நாடுகிறார்கள். முதலீட்டிய சக்திகளும், தேசிய அரசுகளும் சிக்கலான அதிகாரப் போட்டியில் பெரும் ராணுவங்களுடன், அணு ஆயுதங்களுடன் ஈடுபட்டுள்ளன. முற்போக்கு சிந்தனையாளர்கள் இடையில் கிடந்து அல்லாடுகிறார்கள்.

கட்டுரையாளர் குறிப்பு:   

US Presidential Election and Global Political Environment: What Tamils ​​Need to Know? by Rajan Kurai Article in Tamil

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மக்களாட்சி வரலாற்றில் தி.மு.க: பவள விழாவும், பயணத்தின் தொடர்ச்சியும்!

அரசியல் தத்துவத்தில் புதுப்பாதை அமைத்த அறிஞர் அண்ணா

பிறப்பே தண்டனையா? திராவிட இயக்கத்தின் அரசியல் தத்துவப் போராட்டம்!

காலையில ஏர் ஷோ, நைட் பீர் ஷோ – அப்டேட் குமாரு

விமான நிகழ்ச்சி: பாதுகாப்பு குளறுபடியால் மக்கள் உயிரிழப்பு… எடப்பாடி கண்டனம்!

பியூட்டி டிப்ஸ்: டிரெண்டாகும் ரோஸ்மேரி வாட்டர்: கூந்தல் வளர்ச்சிக்கு உதவுமா?

ஹெல்த் டிப்ஸ்: கர்ப்பப்பையை நீக்கினால் தாம்பத்ய உறவு பாதிக்குமா?

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *