அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, போட்டியிடும் கமலா ஹாரிஸ் – டொனால்ட் டிரம்ப் இடையே இந்திய நேரப்படி இன்று (செப்டம்பர் 11) காலை 7 மணியளவில் பரபரக்கும் காரசார விவாதம் நடைபெற்றது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற முதல் அதிபர் வேட்பாளர்கள் விவாதத்தில் ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பாக டிரம்ப்பும் பங்கேற்றனர். ஆனால் இதில் பைடன் தனது வயது முதிர்வு பிரச்சனையில் அவதிப்பட்டது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பலரும் விமர்சித்த நிலையில், அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து பைடன் விலக, அமோக ஆதரவுடன் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் துணை அதிபர் கமலா ஹாரிஸ்.
இதனையடுத்து தேர்தல் களத்தில் துடிப்பாக செயல்பட்டு வரும் கமலா ஹாரிஸ், அனுபவம் வாய்ந்த டிரம்பை நேருக்கு நேராக எப்படி சந்திக்க போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
பிலடெல்பியாவில் நடந்த இன்றைய விவாதத்தில் பொருளாதாரம், கருக்கலைப்பு, குடியேற்றம் என்ற 3 முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் சுமார் 90 நிமிடங்கள் காரசார விவாதம் மேற்கொண்டனர்.
பைடன் ஆட்சியில் பணவீக்கம்!
டிரம்ப் பேசுகையில், “கொரோனா தொற்றை சிறப்பாக கையாண்டு அமெரிக்காவுக்கான சிறந்த பொருளாதாரத்தை நான் உருவாக்கினேன். அதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை .
ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். மோசமான குடியேற்றத்தால் அமெரிக்காவில் பணவீக்கம் ஏற்பட்டு பொருளாதாரம் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டது.
ஜோ பைடனின் தவறான கொள்கைகளை கமலா ஹாரிஸும் பின்பற்றி வருகிறார். பைடன் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா கடுமையான அளவில் பணவீக்கத்தால் பாதித்தது. அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்தால் மூன்றாவது உலகப் போர் மூளும் நிலை இருக்கிறது.
அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்!
உலகின் பல்வேறு நாடுகளின் சிறைகள், மனநல மையங்களில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர். அப்படி வந்தவர்கள் அமெரிக்க- ஆப்பிரிக்கர்களின் வேலைகளை எடுத்துக்கொள்கின்றனர். இதனால் தொழிற்சங்கங்கள் விரைவில் பாதிக்கப்படும். அமெரிக்கா முழுவதிலும் உள்ள நகரங்களில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். அவர்கள் நம்முடைய வீடுகளைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் நம் நாட்டை அழித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.
தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நோக்கத்தில் குற்றவாளிகள், தீவிரவாதிகள், கடத்தல்காரர்களை நம் நாட்டில் சட்டவிரோத குடியேற பைடன் அனுமதி அளித்துள்ளார்.
கருக்கலைப்புக்கு எதிரானவன்!
கருக்கலைப்பு கமலா ஹாரிஸ், ஜோ பைடன் ஆட்சியில் 9 ஆவது மாதத்திலும் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கின்றனர். எனது நிலைப்பாடு கருக்கலைப்புக்கு எதிரானது என்றாலும் மக்களின் கருத்துப்படி செயல்படுவேன்.
கமலா அதிபரானால், இஸ்ரேல் காணாமல் போய்விடும்!
கமலா ஹாரிஸ் ஒரு மார்க்சிஸ்ட். அவருடைய தந்தை ஒரு மார்க்சிஸ்ட், அதனால் அவரிடம் அமெரிக்காவுக்கு வளர்ச்சிக்கான எந்தத் திட்டமும் இல்லை. கமலாவிடம் வளர்ச்சிக்கான எந்த திட்டமும் இல்லை. நான் அதிபராக இருந்திருந்தால், ரஷ்யா உக்ரைனுக்குள் நுழைந்திருக்காது. கமலா அதிபரானால், இஸ்ரேல் என்ற நாடே காணாமல் போய்விடும்.
நீதித் துறையை எனக்கு எதிராக திருப்பிவிட்டு தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றிபெற முயற்சித்து வருகிறது.
நமது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதாரத்தை நான் உருவாக்கினேன். அதை மீண்டும் செய்வேன். அதிக வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெறுவேன்” என்று பேசினார்.
டிரம்ப் சீனாவிற்கு அமெரிக்காவை விற்றுவிட்டார்!
இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக கமலா ஹாரிஸ் பேசுகையில், “ டிரம்ப் ஆட்சிக்காலத்தில் சுகாதாரமும், பொருளாதாரமும் மோசமாக இருந்தது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சிப்களை சீனாவுக்கு விற்பனை செய்து சீனாவின் ஆயுத வலிமைக்கு டிரம்ப் உதவினார். டிரம்பின் தவறான கொள்கைகளால் சீன ராணுவம் பலமடைந்துள்ளது. டிரம்ப் சீனாவிற்கு அமெரிக்காவை விற்றுவிட்டார்.
கோடீஸ்வரர்களுக்கு வரிச்சலுகை அளித்தார்!
டிரம்ப் அரசில் கோடீஸ்வரர்களுக்கும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மட்டுமே அதிகளவில் வரிச்சலுகை கொடுத்ததே தவிர நடுத்தர மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை. சரியான தலைவர் வரமாட்டார்களா என்ற பெரும் மன அழுத்தத்திற்கு மக்கள் ஆளான காலகட்டத்தில் மோசமான நிலையில் நாட்டை விட்டுவிட்டுச் சென்றார். உலகத் தலைவர்கள் அவரை பார்த்து சிரிக்கின்றனர்.
அமெரிக்காவில் ஆட்சியை பைடன் கைப்பற்றியபோது நமது ஜனநாயகத்தின் டிரம்ப் மீது மிக மோசமான தாக்குதலை நடத்தி விட்டு சென்றார். டிரம்ப் மோசமான பொருளாதாரத்தை விட்டுவிட்டுச் சென்றார். மோசமான வேலைவாய்ப்பின்மையை விட்டுச் சென்றார். மோசமான பொது சுகாதாரத்தை விட்டுச் சென்றார். எனவே அதிபராக இருந்து டிரம்ப் செய்த குழப்பத்தையே இன்னும் சுத்தம் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.
அதிபரானால் வழக்குகளில் இருந்து தப்பிவிடுவார்!
குற்றவாளியான டிரம்ப் குற்றவாளிகள் குறித்து பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. டிரம்ப் மீண்டும் அதிபரானால் அவர் மீதான வழக்குகளில் இருந்து தப்பிவிடுவார். டிரம்ப் எந்தச் சூழலிலும் அமெரிக்க அதிபராக விடக்கூடாது. தான் தோற்றபோது நாடு முழுவதும் வன்முறை தூண்டிவிட்டு அதைக் கைகட்டி வேடிக்கை பார்த்தவர் டிரம்ப். உலக தலைவர்கள் அவரை பார்த்து சிரிக்கிறார்கள்.
கருக்கலைப்புக்கு ஆதரவு!
ஒரு பெண்ணின் உடல் தொடர்பாக மற்றவர்கள் முடிவெடுக்க அனுமதிக்கக் கூடாது. பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று டிரம்ப் சொல்லக்கூடாது. பெண்களின் அடிப்படை உரிமைகளை அரசு நிர்ணயிக்க கூடாது. பெண்கள் சுயமாக செயல்பட வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்புக்கு ஆதரவாக இருப்போம். டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் தேசிய கருக்கலைப்பு கொள்கையை கொண்டுவந்துவிடுவார்.
உழைப்பவர்களுக்காக இருப்பேன்!
நெருக்கடியான காலத்தில் அமெரிக்காவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நாட்டிற்கும் மக்களுக்கும் ஒரு திறமையான, சரியான தலைவர் தேவை. மக்கள் பிரச்னைகள் குறித்து டிரம்ப் ஒருபோதும் பேசமாட்டார். மக்களுக்காக நான் பேசுகிறேனா… இல்லையா? என்பதை எனது பிரசாரப் பொதுக் கூட்டங்களுக்கு வந்து பார்த்தால் தெரியும்.
நான் நடுத்தர வர்க்கத்தில் இருந்து வந்துள்ளதால் உழைப்பவர்களை உயர்த்துவதற்காக முயற்சிப்பேன். அதுவே எனது லட்சியம். என்னை அதிபராக தேர்ந்தெடுத்தால், அமெரிக்க நடுத்தர குடும்பங்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு பயனளிக்கும் வகையிலான திட்டங்களை செயல்படுத்துவேன்” என்றார் கமலா ஹாரிஸ்.
இவ்வாறு விவாதம் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரில் 47 சதவீதமும், குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் 44 சதவீதமும் ஆதரவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திடீரென உயர்ந்த தங்கம் விலை…நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பணி!