”வங்கதேசத்தில் ஆட்சிக் கலைப்புக்கு காரணம் அமெரிக்காவின் சதி” : ஷேக் ஷசீனா குற்றச்சாட்டு!
தனது ஆட்சியைக் கலைக்க அமெரிக்கா சதி திட்டம் தீட்டியதாக இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது.
குறிப்பாக, பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியது அரசையே கலங்கடித்தது.
இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரும் கிராமீன் வங்கியின் நிறுவனருமான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.
எனினும் அங்கு தொடர்ந்து ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர் மற்றும் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் ஷேக் ஹசீனா தான் வங்கதேசத்தில் இருந்து வெளியேறும் முன் இருந்த சூழ்நிலை குறித்தும், ஆட்சி கலைப்புக்கு யார் காரணம் என்றும் தனது நெருக்கமானவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக என்.டி.டி.வி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
உரை நிகழ்த்த முடியவில்லை!
அதில், ”பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நான் டாக்கா இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, நாட்டுக்காக உரையாற்ற விரும்பினேன். ஆனால் வன்முறையாளர்கள் வீட்டு வாசலை அடைந்ததால், நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் என்னை சீக்கிரம் வெளியேறுமாறு அறிவுறுத்தியதால் உரை நிகழ்த்த முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
நான் ஏன் வெளியேறினேன்?
மேலும் அவர், “வன்முறையில் இறக்கும் உடல்களைப் பார்க்கக் கூடாது என்பதற்காகவே நான் என் பதவியை ராஜினாமா செய்தேன். மாணவர்களின் சடலங்களை வைத்து அவர்கள் ஆட்சிக்கு வர விரும்பினார்கள். ஆனால் நான் அதை அனுமதிக்கவில்லை. ஒருவேளை, நான் நாட்டில் தங்கியிருந்தால், இன்னும் பல உயிர்கள் பலியாகியிருக்கும்.
மேலும் வளங்கள் அழிக்கப்பட்டிருக்கும். நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்ததால், நான் உங்கள் தலைவராக ஆனேன். நீங்கள் என் பலம். அதனால்தான் நான் ராஜினாமா செய்தேன். வங்கதேச மக்களே என் பலம். ஆனால், அவர்களே என்னை விரும்பவில்லை. அதனால்தான் நான் வெளியேறினேன்” என கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேச மக்களுக்கு வெற்றி!
மேலும் தனது தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அவாமி லீக் கட்சி எப்போதும் மீண்டு வந்துள்ளது. நம்பிக்கையை இழக்கக்கூடாது; நான் விரைவில் திரும்பிவருவேன். நான் தோற்றுவிட்டேன், ஆனால் வங்கதேச மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவாமி லீக் தலைவர்கள் குறிவைக்கப்படுவது வேதனையளிக்கிறது. வங்கதேசத்தின் எதிர்காலத்திற்காக நான் என்றென்றும் பிரார்த்தனை செய்வேன். என தெரிவித்துள்ளார்.
அரசை கவிழ்க்க சதி!
இதற்கிடையே போராட்டம் நடத்தும் மாணவர்களை நான் ரசாக்கர்கள் (பாகிஸ்தான் தூண்டுதலின் பேரில் போராடுபவர்கள்) என்று அழைக்கவில்லை. மாறாக அவர்களை தூண்டுவதற்காக எனது வார்த்தைகள் திரிக்கப்பட்டன. முழு வீடியோவைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
எனது அரசாங்கத்தைக் கவிழ்க்க மிகப்பெரிய சதி தீட்டப்பட்டது. நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வந்தது. வாய்ப்பு கிடைத்திருந்தால், இதை தனது உரையில் கூறியிருப்பேன்” என அதில் தெரிவித்திருப்பதாக என்.டி.டிவி செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுடன் முரண்பாடு!
ஷேக் ஹசீனாவின் ஆட்சி காலத்தில் அமெரிக்காவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்த நிலையில் இருந்தன.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தல்களை சுதந்திரமானவை அல்ல என்று அமெரிக்கா கூறியிருந்தது.
அதே போன்று, தனது அரசாங்கத்தை கவிழ்க்க சதிகள் தீட்டப்படுவதாகவும், வங்காளதேசம் மற்றும் மியான்மரில் இருந்து புதிய கிறிஸ்தவ நாட்டை செதுக்க வெள்ளை மனிதர்கள் சதி செய்வதாகவும் ஷேக் ஹசீனா கடந்த மே மாதம் கூறியிருந்தார்.
மேலும் அவர், “வங்கதேசத்தில் விமானப்படை தளம் அமைக்க ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு நான் அனுமதி அளித்திருந்தால், எனக்கு எந்த பிரச்சனையும் இருந்திருக்காது” என்றும் அப்போது ஹசீனா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
IPL 2025: மெகா ஏலத்தில் ரிடென்ஷன் குறித்து வெளியான முக்கிய தகவல்!
பொன் மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு!