ஏவுகணை விபத்தில் இருவர் உயிரிழந்தது தொடர்பாக போலாந்து நாடு நடத்தும் விசாரணைக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ முழு ஆதரவு தரும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் எல்லைக்கு அருகில் கிழக்கு போலாந்தில் உள்ள கிராமமான ப்ரெஸ்வோடோ கிராமத்தில் ஏவுகணை விழுந்ததில் நேற்று இரவு 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நேட்டோவில் உள்ள உறுப்பினர் நாடுகளில் ஒன்றான போலாந்து விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், இன்று நேட்டோ தூதர்கள் ஏவுகணை விழுந்த பகுதியில் ஆய்வு செய்ய உள்ளனர்.
நேட்டோ ராணுவ கூட்டணி ஒப்பந்தத்தின் 4 வது பிரிவின் கீழ், உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள், பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தால், அதிகாரப்பூர்வமாக நேட்டோ விசாராணையில் இறங்கும்.
இதற்கிடையே போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டுடா மற்றும் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஆகியோருடன் ஜோ பைடன் பேசினார்.
இந்தோனேசியாவில் ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போலாந்தில் நடந்த ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதை அடுத்து ஜி7 மற்றும் நேட்டோவின் தலைவர்களுடன் அவசர கூட்டத்தை கூட்டினார்.
இந்த கூட்டத்தில் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி,
ஜப்பான் பிரதமர் கிஷிடா ஃபுமியோ, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், நெதர்லாந்து பிரதமர் மார்க் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்களுடன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின் ஜோ பைடன் அளித்த பேட்டியில், ”ஏவுகணை விபத்து தொடர்பாக போலாந்து நாடு நடத்தும் விசாரணைக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ முழு ஆதரவு தரும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ”நாங்கள் முழுமையாக விசாரிக்கும் வரை நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. ஏவுகணை தாக்குதலை பார்க்கும் போது இதுவரை ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை” என்று கூறினார்.
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ஏற்கெனவே நேட்டோ நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது உறுப்பு நாடுகளில் ஒன்றான போலாந்து மீதான ஏவுகணை தாக்குதல் உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
போலாந்து மீதான ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து சமூக வலைதளங்களில் #WorldWar3 என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
“ஒருநாள் இது நடக்கும்” : இறப்பதற்கு முன் ஷ்ரத்தா
பிரியா மரணத்திற்கு காரணம்: அரசு மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்!