24*7 குடிநீர் திட்டம், புதிய பேருந்து நிலையங்கள்: அமைச்சர் கே.என்.நேரு முக்கிய அறிவிப்பு!

அரசியல்

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் 8ஆவது நாளாக இன்று (மார்ச் 30) நடைபெற்றது.

இன்றைய தினம் தமிழக அமைச்சரவையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக கருதப்படும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது அத்துறை அமைச்சர் கே.என்.நேரு 58 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

24*7 நேரமும் குடிநீர், புதிய பேருந்து நிலையங்கள் என முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 24*7 குடிநீர் திட்டம்

அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் குடிநீர் வினியோகம் முறையாக தொடர்ந்து 24 மணி நேரமும் கிடைக்கும் என்ற நிலையினை அடைந்திட பரீட்சார்ந்த முறையில் திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர், கடலூர், தாம்பரம், ஈரோடு மற்றும் நாகர்கோயில் ஆகிய மாநகராட்சிகளிலும்,

காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் ராஜபாளையம் ஆகிய நகராட்சிகளிலும் சுமார் 5000 முதல் 10,000 வரையிலான குடிநீர் இணைப்புகள் மூலம் 24*7 குடிநீர் திட்டம் 420 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்படும்.

செறிவூட்டப்பட்ட உயிரி எரிவாயு கலன் அமைத்தல்

மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், தஞ்சாவூர், நாகர்கோயில், மற்றும் தாம்பரம் ஆகிய 9 மாநகராட்சிகளில் உயிரி எரிவாயு தயாரிக்க பொது தனியார் பங்களிப்புடன் தினமும் 930 எம்.டி திறன் கொண்ட புதிய பயோ சி.என்.ஜி அமைக்கப்படும்.

கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை செயலாக்கும் ஆலைகள் அமைத்தல்

கோவை, மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, மற்றும் திருப்பூர் ஆகிய ஆறு மாநகராட்சிகளில் கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை செயலாக்கும் ஆலைகள் 22.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

முழு தானியங்கி வள மீட்பு மையங்கள் அமைத்தல்

மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளில் தினமும் 1300 எம்டி உலர் கழிவுகளை பாதுகாப்பான முறையில் பிரித்து அப்புறப்படுத்தும் வகையில் முழு தானியங்கி வள மீட்பு மையங்கள் அமைக்கப்படும்.

புதிய பேருந்து நிலையங்கள்

திண்டுக்கல், நாகர்கோயில், திருச்சி (ஸ்ரீரங்கம்) ஆகிய மூன்று மாநகராட்சிகள், மாங்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், கொமாரபாளையம், அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருவாரூர், உளுந்தூர்பேட்டை மற்றும் பத்மநாபபுரம் ஆகிய 9 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் 174 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

பேருந்து நிலையங்கள் மேம்படுத்துதல்

மேட்டுப்பாளையம், பெரம்பலூர், சீர்காழி, திருத்துறைப்பூண்டி, காரைக்குடி காயல்பட்டினம், குழித்துறை, ராசிபுரம், செங்கோட்டை, மதுராந்தகம், திருவந்திபுரம் மற்றும் குன்னூர் ஆகிய 12 நகராட்சிகளில் உள்ள பேருந்து நிலையங்கள் 42.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன முறையில் மேம்படுத்தப்படும்.

புதிய நவீன எரிவாயு தகன மேடைகள்

அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் குறைந்தபட்சம் ஒரு நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்படும் என்ற கொள்கையின்படி இந்த ஆண்டு மேலும் 25 புதிய நவீன எரிவாயு தகன மேடைகள் 52.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

தகன மேடைகள் மேம்படுத்துதல்

மதுரை, சேலம், நாகர்கோயில் மற்றும் தாம்பரம் ஆகிய நான்கு மாநகராட்சிகள் மற்றும் ஒட்டன்சத்திரம், திருமங்கலம், தென்காசி, பழனி, கம்பம், உசிலம்பட்டி, தேவகோட்டை மற்றும் புளியங்குடி ஆகிய எட்டு நகராட்சிகளில் உள்ள 17 தகன மேடைகள்  8.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடைகளாக மாற்றப்படும்.

பூங்காக்கள் அமைத்தல்

பொதுமக்கள் பொழுதுபோக்கிற்கு பயன்படும் வகையில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 307 பூங்காக்கள் 111.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ஏற்படுத்த ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இந்த நிதியாண்டில் மேலும் 100 பூங்காக்கள் 60.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

நீர்நிலைகள் மேம்படுத்துதல்

அனைத்து நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் நீர் ஆதாரத்தினை உயர்த்துதல் என்ற கொள்கையின் படி கடந்த ஆண்டுகளில் சென்னை நீங்கலாக பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 269 நீர் நிலைகள் 233.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

இந்த ஆண்டில் மேலும் 50 நீர் நிலைகள் 42 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

பள்ளி கட்டடங்கள் மேம்பாடு

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான அடிப்படையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும் 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்..

குடிநீர் அபிவிருத்தி பணிகள்

ராசிபுரம், ஆற்காடு, செங்கல்பட்டு நகராட்சிகளில் பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி விநியோகிக்க 22.69 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி பணிகள் செயல்படுத்தப்படும்.

புதிய சந்தைகள் அமைத்தல்

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.219.07 கோடி மதிப்பீட்டில் 40 புதிய சந்தைகள் அமைத்திடவும், ரூ.91.03 கோடி மதிப்பீட்டில் ஏற்கனவே உள்ள 20 சந்தைகளை மேம்படுத்திடவும் ஆணை வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

இந்த நிதியாண்டில் மேலும் 28 நகராட்சிகளில் 123.80 கோடி மதிப்பீட்டில் புதிய வார சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகள் அமைக்கப்படும்.

அறிவுசார் மையங்கள் அமைத்தல்

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் கற்றல் திறன் மேம்படுத்துதல் மற்றும் போட்டி தேர்வர்கள் பயன்பெறும் வகையில் நூறு நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையங்கள் அமைத்தல் என்ற நோக்கோடு தற்போது 89 நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக 11 நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையங்கள் 22 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

மண்சாலைகள் தரம் உயர்த்தல்

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 400 கிலோமீட்டர் மண்சாலைகள் 288 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை, கான்கிரீட் அல்லது பேவர்பிளாக் சாலைகளாக மாற்றப்படும்

இயற்கை உரத்திற்கான தரக்குறியீடு

நகர்ப்புறங்களில் சேகரிக்கப்படும் மட்கும் குப்பைகள் நுண்ணுர கூடங்களில் இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. தரமான இயற்கை உரத்தை நுகர்வோருக்கு அளிக்கும் பொருட்டு உரத்தின் தலை, மணி மற்றும் சாம்பல் சத்து பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இவ்வாறு பகுப்பாய்வு செய்யப்பட்ட இயற்கை உரத்தினை செழிப்பு என்ற பெயரில் தரக் குறியீடு நிர்ணயம் செய்து அனைத்து நகரங்களிலும் விற்பனை செய்து வருமானம் ஈட்ட வழிவகை செய்யப்படும்.

சுற்றுலா நகரங்கள் மேம்படுத்துதல்

சுற்றுலா நகரங்கள் மற்றும் ஆண்டுதோறும் சிறப்பு விழாக்கள் நடைபெறும் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அடிப்படை வசதிகள் உருவாக்கிடவும் மேம்படுத்திடவும் 20 கோடி ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் கே.என்.நேரு.

பிரியா

‘மணிரத்னம் வேண்டாம் என்றேன்’: பொன்னியின் செல்வன் விழாவில் துரைமுருகன்

100 நாள் வேலை திட்டம்: அதிரடி அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *