மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வில் முறைகேடு நடந்தது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா செய்தியிருப்பது பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், மனோஜ் சோனி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
இந்தியாவின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. இதன் தலைவராக 2023 ஆம் ஆண்டு மனோஜ் சோனி நியமிக்கப்பட்டார்.
யுபிஎஸ்சியில் தலைவர் உட்பட 9 முதல் 11 உறுப்பினர்கள் இருக்கலாம். ஒவ்வொரு உறுப்பினரின் பதவிக்காலமும் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது வரை வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முழு சுயாட்சி மற்றும் சுதந்திரத்துடன் செயல்படும் சில நிறுவனங்களில் யுபிஎஸ்சியும் ஒன்று. அப்படிபட்ட நிறுவனத்தின் தலைவர் பதவியை வகித்த மனோஜ் சோனி ஓராண்டு இரு மாதம் மட்டுமே அந்த பதவியை வகித்துள்ளார்.
யார் இவர்?
1965ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர். யுபிஎஸ்சியில் பதவி வகிப்பதற்கு முன்னதாக, ஒரு கல்வியாளராக பல்கலைக் கழகங்களில் பணியாற்றியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். குஜராத்தில் உள்ள மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழகத்தில், தனது 40 வயதிலேயே துணைவேந்தராக நியமிக்கப்பட்டு, இளம் துணைவேந்தர் என பெயர் பெற்றவர்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் குஜராத் கேடரில் இவருக்கு பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. .
2009 முதல் 2015 வரை குஜராத்தில் உள்ள டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றினார்.
பின்னர் 2017லேயே இவர் யுபிஎஸ்சியில் தனது பணியை தொடங்கினார். யுபிஎஸ்சி உறுப்பினாராக தேர்வு செய்யப்பட்ட மனோஜ் சோனி, 2023 மே மாதத்தில் தலைவரானார். அதன்படி பார்த்தால் இன்னும் 5 ஆண்டுகளுக்கு அவர் பதவியில் நீடிக்க வேண்டும். ஆனால் அவர் முக்கிய பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுகொள்ளப்பட்டதா… இல்லையா என்ற தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
யுபிஎஸ்சி தேர்வுகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், இவரது ராஜினாமாவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பூஜா கேட்கர் விவகாரம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர் விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குடிமைப் பணி தேர்வு 2022க்கு பரிந்துரைக்கப்பட்ட போட்டியாளரான பூஜா கேட்கர் போலி சான்றிதழ்கள் மூலம் தேர்வானதாக குற்றசாட்டுகள் எழுந்தது.
உடல் ரீதியான குறைபாடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ்களை முறைகேடாக சமர்ப்பித்து பணியில் சேர்ந்ததாகவும், புனேயில் அவர் உதவி ஆட்சியராக இருந்தபோது, பதவியை துஷ்பிரயோகம் செய்து பிறரை மிரட்டியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளிலும் சிக்கினார்.
அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து ஆய்வுசெய்ய மத்திய பணியாளர் துறையின் கூடுதல் செயலர் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. இதில் பூஜா ஓபிசி இடஒதுக்கீட்டைத் தவறாகப் பயன்படுத்தியது தெரியவந்தது.
இந்தநிலையில் அவர் மீது காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் ஓம்.பிர்லா மகள் மீது புகார்!
2019ஆம் ஆண்டுக்கு முன்னர் மாடலிங் துறையில் இருந்த சபாநாயகர் ஓம் பிர்லா மகள் அஞ்சலி பிர்லா, 2019ஆம் ஆண்டு நடந்த தேர்வில் முதல் முயற்சியிலேயே பங்கேற்று வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆனார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ராம்ஜாஸ் கல்லூரியில் பொலிட்டிகள் சயின்ஸ் படித்திருக்கும் அஞ்சலி தற்போது ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார்.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்கு அஞ்சலி மறுப்புத் தெரிவித்திருந்தார். “ யுபிஎஸ்சி தேர்வு நியாயமாக நடத்தப்படக்கூடியது. இதில் பின்வாசல் வழியாக தேர்ச்சிபெற முடியாது” என்று கூறியிருந்தார்.
எனினும் இவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இப்படி பல்வேறு புகார்களை யுபிஎஸ்சி எதிர்கொண்டிருக்கும் நிலையில் மனோஜ் சோனி, தனிபட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்திருப்பதாக கூறியுள்ளார்.
“ஆன்மீகத்தில் அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதால் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும், யுபிஎஸ்சியில் எனது பயணம் நிறைவாக உள்ளது” என்றும் கூறியுள்ளார்.
குஜராத்தில் உள்ள சுவாமிநாராயண் பிரிவின் கிளையான அனூபம் மிஷனில், தொண்டு செய்வதில் அதிக நேரம் ஒதுக்க மனோஜ் சோனி விரும்புவதாக தகவல்கள் வருகின்றன. 2020 இல் தீட்சை பெற்று இவர் ஒரு துறவி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“அவனுக்கு நான் அக்கா அல்ல அம்மா” : உருக்கமாக பேசிய தேவயானி… கண்கலங்கிய நகுல்
உச்ச நீதிமன்றம் காட்டம்… மையம் வாரியாக வெளியான நீட் முடிவு: பார்ப்பது எப்படி?
Comments are closed.