ஜார்க்கண்ட்டில் பாஜகவிடம் இருந்து தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இறங்கியுள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து கடந்த 2019ம் ஆண்டு முதல் ஜார்க்கண்டில் ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட் அரசியலிலும் புயல் வீச தொடங்கியுள்ளது.
முதல்வர் மீது சுரங்க மோசடி புகார்!
அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஆண்டு தனது பெயரில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உரிமையை பெற்றார்.
ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக தனது பதவியை சட்டவிரோதமாக பயன்படுத்தி முதல்வர் ஹேமந்த் சோரன் அதனை பெற்றுள்ளார் என்றும், அதில் ரூ.100 கோடி அளவில் மோசடி நடைபெற்றுள்ளது என்றும் இந்திய தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் செய்தது.
இதுகுறித்து விசாரித்த தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக ஹேமந்த் சோரன் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்றதை உறுதி செய்தது.
இதனையடுத்து முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவியை தகுதி நீக்கம் செய்ய ஜார்க்கண்ட் ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இதன்மூலம், ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ மற்றும் முதல்வர் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
ஒருவேளை அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டால், முதல்வர் பதவியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும், அதற்கிடையே ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் வேறுகட்சிக்கு மாறிவிட்டால் நிலைமை மோசமடைந்துவிடும். ஆளும் கட்சி என்ற தகுதியை இழக்கவும் நேரிடும்.
ரகசிய இடத்திற்கு பயணம்!
எனவே முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மதியம் நடைபெற்றது. அதில் இரு கூட்டணி கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து ஜே.எம்.எம், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் 3 பஸ்களில் ரகசிய இடத்திற்கு இன்று அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களை மேற்கு வங்காளம் அல்லது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்க ஹேமந்த் சோரன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.
தமிழகத்தை நினைவுபடுத்தும் ஜார்க்கண்ட்!
முன்னதாக இதே போன்றதொரு காட்சி, கடந்த 2017ம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதா மறைவையொட்டி ஏற்பட்டது.
அப்போது நடந்த அரசியல் குழப்பம் காரணமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் கிராமத்தில் உள்ள ‘கோல்டன் பே’ ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து கோவா, மஹாராஷ்டிரா போன்ற உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இதேபோல ரிசார்ட்டுக்கு பயணிக்கும் கலாச்சாரம் நடந்தேறி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
கங்கை வெள்ளப் பெருக்கு… மாடியில் எரியும் சடலங்கள்! உதவி கேட்கும் வங்காள தேசம்!