உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த வருடம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, கட்டேஹரி, கர்ஹல், மீராபூர் குண்டர்கி உள்ளிட்ட எட்டு தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
மேலும் சிசமௌ தொகுதி எம்.எல்.ஏவான சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த இர்ஃபான் சொலான்கி கிரிமினல் வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அதனால் இந்த ஒன்பது தொகுதியிலும் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி அறிவித்தது. பின்னர் தேர்தல் நவம்பர் 20 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று குண்டர்கி தொகுதியில், போலீஸார் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை வாக்களிப்பதிலிருந்து தடுத்தார்கள் எனவும், சில நபர்கள் கள்ளத்தனமாக வாக்குகள் செலுத்தினார்கள் எனவும் சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் குண்டர்கி வேட்பாளரான மொஹம்மத் ரிஸ்வான் இந்தியத் தேர்தல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ” இன்று(நவம்பர் 20) காலையில் இருந்து அரசு நிர்வாகமும் போலீஸாரும் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வது மட்டுமல்லாமல், எங்கள் கட்சியின் ஆதரவாளர்களை பயமுறுத்தி வருகிறார்கள்.
நாங்கள் இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம். மேலும் இந்த தேர்தலை ரத்து செய்து, மீண்டும் புதிதாகத் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை வைக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். குண்டர்கி மாவட்டம் இஸ்லாமிய மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சில போலீஸார் வாக்களிக்க வரும் மக்களின் வாக்காளர் அட்டைகளையும், ஆதார் அட்டைகளையும் சட்டவிரோதமாகச் சரிபார்க்கிறார்கள். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.
மேலும் மீராபூர் மாவட்டத்தில் ஒரு போலீஸ் அதிகாரி துப்பாக்கியை காட்டி வாக்காளர்களை பயமுறுத்துவதை அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம் இதுவரை 7 போலீஸாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் 3 காவல்துறை துணை ஆய்வாளர்களும் அடக்கம்.
இதனால் உத்தரப் பிரதேசத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு : காவல்துறை பற்றி நீதிமன்றம் சொன்னது என்ன?
சர்ச்சை பேச்சு : நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்!
‘3 விநாடி வீடியோ நீக்கியே ஆக வேண்டும் ‘- நயனை விரட்டும் தனுஷ்