பாஞ்சாகுளம் பள்ளி விவகாரம் பற்றி முதன்மை கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
போதை இல்லா பாதை எனும் அமைப்பின் மூலம் போதை ஒழிப்புக்காக தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சார பயணம் வரும் அக்டோபர் 2ம் தேதி சென்னையிலிருந்து துவங்கப்படவுள்ளது.
இந்த பிரச்சார பயணம் தொடர்பான போஸ்டரை சென்னை சேப்பாக்கத்தில உள்ள பிரஸ் கிளப்பில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (செப்டம்பர் 20) வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பை மாணவர்கள் உணருவதில்லை. இதுபோன்ற போதைக்கு அடிமையானவர்கள் மருத்துவர்களை நேரில் சென்று அணுக வேண்டும்.
மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுபவர் அவமானமாக கருதக்கூடாது. சிற்பி என்ற மாணவர் அமைப்பு மூலம் போதை தடுப்பு விழிப்புணர்வு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் இருந்து முதல் ஜுலை மாதத்தின் முதல் 5 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு 1 மணி நேரம் மருத்துவம்,சமூக நலம்,காவல்துறை சார்பாக விழிப்புணர்வு வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கற்றல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என முதல்வர் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
பள்ளிகளில் பிரச்சனை இருந்தால் மாணவர்கள் 1447 கட்டணமில்லா தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம்” என்றவர் தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் பள்ளியிலும் தீண்டாமை பின்பற்றப்படுவது பற்றி வெளியான தகவல் குறித்த கேள்விக்கும் பதிலளித்தார்.
“பாஞ்சாகுளம் பள்ளி விவகாரம் பற்றி முதன்மை கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.
அன்று 12 மாணவர்கள் ஏன் பள்ளிக்கு வர வில்லை என்று விசாரணை நடந்து வருகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
கிருஷ்ணகிரியில் ஒரு பள்ளியில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டியில் எஸ்சி எஸ்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது பற்றிய கேள்விக்கு,
”சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அதற்கு உண்டான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பியபோது,
”சுகாதாரத்துறை அதிகாரிகளின் குழு கலந்தாலோசித்து அதற்கான முடிவுகளை எடுப்பார்கள்” என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கலை.ரா