நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பலத்த சர்ச்சையைக் கிளப்பியது வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளும் வக்ஃப் வாரிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால்… வழக்கத்துக்கு மாறாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது வக்ஃப் வாரிய மசோதா.
இதையடுத்து ஜேபிசி எனப்படும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு நாடு முழுதும் முக்கிய நகரங்களில் இந்த மசோதா தொடர்பான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. நாடாளுமன்றத்துக்கு நிகராக இந்த கூட்டுக் குழுக் கூட்டங்களிலும் சர்ச்சைக்குரிய காட்சிகளுக்குக் குறைவில்லை.
அதன் உச்சமாகத்தான் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவரும் பாஜக உறுப்பினருமான ஜெகதாம்பிகா பால், குழுவின் விதிகளை மீறி ஊடகங்களை சந்தித்திருக்கிறார்.
It is unfortunate that the chairman of the Joint working committee on Waqf (Amendment) Bill 2024 conducted a press conference and transpired the proceedings / happenings in the meeting whatsoever; knowing fully well that the proceedings are confidential and not to be disclosed.…
— A RAJA (@dmk_raja) October 23, 2024
இந்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,
“வக்ஃப் திருத்த மசோதா 2024க்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் கூட்டத்தில் நடந்த நடவடிக்கைகள்/நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் சரி; நடவடிக்கைகள் இரகசியமானவை மற்றும் வெளியிடப்படக்கூடாது என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
ஆனால், தலைவரே பத்திரிகையாளர்களை சந்திப்பது போன்ற அணுகுமுறை உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீதி கிடைக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தடைகளை மீறி நமது ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களை நிலைநிறுத்த போராடுவோம்” என்று அக்டோபர் 23 ஆம் தேதி தெரிவித்திருக்கிறார்.
அக்டோபர் 22 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற வக்ஃப் நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டத்தில் நடந்த சம்பவங்களுக்குப் பிறகுதான் இப்படி ஒரு சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார் ஆ.ராசா.
இந்தக் கூட்டத்துக்கு ஜேபிசி தலைவர் ஜெகதாம்பிகா பால் தலைமை வகித்தார். திமுகவின் ஆ.ராசா, ஓவைசி உள்ளிட்ட எம்பிக்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி மூன்று முறை பேசினார். மீண்டும் அவர் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டபோது, கூட்டுக் குழுவில் இருக்கும் பாஜக உறுப்பினர் அபிஹித் முகர்ஜி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். திரிணமூல் காங்கிரஸ் எம்பி பேசக் கூடாது என சத்தம் போட்டார் பாஜக எம்.பி. இருவருக்கும் இடையே கடுமையான வார்த்தை மோதல் நடைபெற்றது.
ஒருகட்டத்தில் தனது கோபத்தைக் கட்டுப்படுத்த இயலாத கல்யாண் பானர்ஜி, தன் முன்னே இருந்த கண்ணாடி வாட்டர் பாட்டிலை மேசை மீது ஓங்கியடித்தார். அது உடைந்து சிதறியது. அத்தோடு நிற்காமல், அந்த உடைந்த பாட்டிலை பிடித்து அழுத்தியதால், அவரது கைகளிலும் காயம் ஏற்பட்டது. பின் அந்த உடைந்த பாட்டிலை ஜேபிசி தலைவர் ஜெகாதாம்பிகா பாலை நோக்கி வீசினார் கல்யாண் பானர்ஜி. இதனால் களேபரம் ஏற்பட்டு கொஞ்ச நேரம் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. கல்யாண் பானர்ஜியை ஓவைசி உள்ளிட்ட உறுப்பினர்கள் அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
இதனால் கொஞ்ச நேரம் ஒத்தி வைக்கப்பட்ட கூட்டம், மீண்டும் கூடியபோது கல்யாண் பானர்ஜியை நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இருந்து ஒரு கூட்டத்துக்கு சஸ்பெண்ட் செய்திருக்கிறார் குழுவின் தலைவர்.
அதுமட்டுமல்ல, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விதிகளுக்கு மாறாக குழுவின் தலைவரே பத்திரிகையாளர்களை சந்தித்து நடந்ததைச் சொல்லி, ‘கடவுள் அருளால் நான் தப்பித்தேன்’ என்றும் கூறினார்.
இதையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள், “வக்ஃப் சட்டத் திருத்தம் பற்றி விவாதிக்கக் கூடும்போது கூட்டுக் குழுவில் இருக்கும் பாஜக எம்பிக்கள் எதிர்க்கட்சி எம்பிக்களை பார்த்து அருவெறுக்கத் தக்க வகையில் பேசி ரசாபாசம் உண்டாக்குகிறார்கள். கூட்டுக் குழுக் கூட்டத்தை ஆரோக்கியமாக நடத்தும் திட்டம் பாஜகவுக்கு இல்லை. கூட்டத்தில் ஏதாவது அசம்பாவிதங்களை ஏற்படுத்தி எதிர்க்கட்சிகள் மீது பழிபோடும் திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது” என்கிறார்கள்.
டெல்லியில் திருணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கண்ணாடி பாட்டிலை உடைத்தார் என்றால், கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி பெங்களூருவில் நடந்த வக்ஃப் திருத்த கூட்டுக் குழுக் கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசாவும் டென்ஷனாகிவிட்டார்.
இந்தக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே கர்நாடக பாஜக முன்னாள் மாநில துணைத் தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் சிறுபான்மை ஆணைய தலைவருமான அன்வர் மணிப்பாடி ஜேபிசி கூட்டத்தில் ஒரு புகாரை எழுப்பினார்.
அதாவது கர்நாடகத்தைச் சேர்ந்தவரும் காங்கிரஸ் அகில இந்திய தலைவருமான கார்கே, கல்புர்கியில் வக்ஃப் நிலங்களை தவறாக பயன்படுத்தி ஆதாயம் அடைந்தாக குற்றம் சாட்டினார். இதைக் கேட்டதும் திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொந்தளித்தனர்.
ஜேபிசியின் விதிகளின்படி ஜேபிசி முன்பு ஒரு புகாரையோ அறிக்கையையோ வழங்குவதாக இருந்தால்… அதன் நகலை கூட்டம் கூடும் முன் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும். அதன் பிறகே சம்பந்தப்பட்ட அவர் தனது கருத்துகளை முன் வைக்க வேண்டும்.
ஆனால், குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படாமல், பாஜகவைச் சேர்ந்தவரான அன்வர் மணிப்பாடி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீது குற்றம் சாட்டும் திட்டத்துடன் அரசியல் நோக்கில் ஜேபிசி கூட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதுதான் எதிர்க்கட்சியினரின் புகார்.
இதனால் கூட்டத்தில் கடுமையான விவாதம் ஏற்பட்டது, ஒரு கட்டத்தில் ஆ.ராசா, அந்த அன்வர் மணிப்பாடியின் அறிக்கையை கிழித்து எறிந்தார். மேலும், குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பாலை நோக்கி வேகமாக முன்னேறிச் சென்றார். அதன் பின் உறுப்பினர்கள் அவரை சமாதானப்படுத்தினர். பிறகு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜேபிசி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் பற்றி முழுமையாக ஆலோசித்து பல சட்டப் புத்தகங்களை வாசித்து, முழு தயாரிப்போடு ஜேபிசி கூட்டங்களுக்குச் செல்கிறார் ஆ.ராசா.
இன்னும் சொல்ல வேண்டுமானால் அவர் மீது 2ஜி வழக்கு தொடரப்பட்டபோது எப்படி, தானே முழுமையான தயாரிப்புகளோடு நீதிமன்றத்தில் தனக்காக வாதாடினாரோ… அதே அளவுக்கு வக்ஃப் சட்டத் திருத்தம் பற்றியும் பலவேறு தரவுகள், ஆவணங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து முழுமையான தயாரிப்போடு கூட்டத்துக்கு செல்கிறார் ஆ.ராசா.
ஜேபிசி கூட்டங்களில் ஆ.ராசாவின் பங்களிப்பை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல, ஆளும் பாஜக உறுப்பினர்களே வியப்போடு பார்க்கிறார்கள்.
இதற்கிடையில் வக்ஃப் மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) கூட்டத்தில் பங்கேற்ற மூன்று பாஜக எம்பிக்கள், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், திரிணாமுல் காங்கிரஸ் கல்யாண் பானர்ஜி மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரியும், நடந்த சம்பவத்தின் மீதான விசாரணை முடியும் வரை அவரை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
நிஷிகாந்த் துபே, அபராஜிதா சாரங்கி மற்றும் அபிஜீத் கங்கோபாத்யாய் ஆகிய மூன்று எம்.பி.க்கள் ஜேபிசி கூட்டத்தின்போது கல்யாண் பானர்ஜி பாட்டிலை அடித்து நொறுக்கியது உட்பட, கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி, பானர்ஜியை மக்களவையில் இருந்தும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
ஆ.ராசா போன்ற சில உறுப்பினர்களே இந்த அளவுக்கு முழுமையான தயாரிப்புகளோடு கலந்துகொள்கிறார்கள். அவர்களின் நிபுணத்துவமான வாதங்களால் வக்ஃப் சட்டத்தில் எதிர்க்கட்சிகள் முன் வைக்கும் திருத்தங்கள் ஏற்கப்படும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்தான்… ஜேபிசி கூட்டங்களை பிஜேபி கூட்டங்களைப் போல நடத்தி வருகிறார்கள் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
அடுத்தடுத்த கூட்டங்களில் என்ன நடக்குமோ?
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
35 ஆண்டுகால பிரச்சாரம் முதல் வயநாடு வேட்பாளர் வரை : யார் இந்த பிரியங்கா காந்தி?
‘பாதுகாப்பாக’ தீபாவளி கொண்டாடுங்கள்… ஐம்பெரும் துறைகளுக்கு மேலிடம் எச்சரிக்கை!