”மத்திய அமைச்சரின் வார்த்தைகள் வலி நிறைந்தவை” என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லம்புவா சட்டசபை தொகுதியில் நடைபெற்ற போதைப்பழக்க மீட்பு நிகழ்ச்சியில் ”மதுப்பழக்கம் என் மகனை கொன்றுவிட்டது. மருமகள் விதவை ஆகிவிட்டார். எனவே போதைப் பிரியர்களுக்கு உங்கள் வீட்டுப் பெண்களை திருமணம் செய்து கொடுக்காதீர்கள்.
இது ஒரு சாதாரண மனிதரின் விண்ணப்பம் அல்ல. மத்திய மந்திரி ஒருவரின் வேதனை வேண்டுகோள்” என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் கெளஷல் கிஷோர், தெரிவித்திருந்தார்.
மேலும் அவர், ”ஒரு குடிகாரரின் ஆயுள் ரொம்ப குறுகியது. நான் ஒரு எம்பியாகவும், என் மனைவி ஒரு எம்எல்ஏவாகவும் இருந்துமே எங்கள் மகனை காப்பாற்ற முடியவில்லை.
அப்படி இருக்கும்போது, ஒரு சாதாரண மனிதரால் எப்படி தங்கள் பிள்ளையைக் காப்பாற்ற முடியும்? நான் என் மகனை காப்பாற்றத் தவறியதால் என் மருமகள் விதவை ஆகிவிட்டார்.
தயவுசெய்து, உங்கள் மகள்கள், சகோதரிகளுக்கு இந்த நிலை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். போதைப் பிரியர்களுக்கு உங்கள் வீட்டுப் பெண்களை திருமணம் செய்து கொடுக்காதீர்கள்.
குடிப்பழக்கம் உள்ள ஒரு அதிகாரியைவிட, அந்தப் பழக்கம் இல்லாத ஒரு ரிக்க்ஷாக்காரர் அல்லது கூலித்தொழிலாளி நல்ல மாப்பிள்ளைதான்” எனத் தெரிவித்திருந்தார்.
மத்திய அமைச்சரின் இந்த வேதனை நிறைந்த கருத்து தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இன்று (டிசம்பர் 26) பதிவிட்டுள்ளார்.
அதில், ”உங்கள் மகளையோ, சகோதரியையோ குடிப்பழக்கம் உள்ள உயரதிகாரிக்கு மணம் முடிப்பதைவிட, குடிப்பழக்கம் இல்லாத தொழிலாளிக்கோ, ரிக்ஷா ஓட்டுபவருக்கோ திருமணம் செய்து கொடுங்கள் என்று மத்திய இணையமைச்சர் கௌஷல் கிஷோர் கூறியிருக்கிறார்.
அவரது வார்த்தைகள் உண்மையானவை. மத்திய அமைச்சரின் வார்த்தைகள் வலி நிறைந்தவை. அவர் எம்பியாக இருந்தபோது அவரது மனைவி எம்எல்ஏ ஆனாலும் மதுவுக்கு அடிமையான மகனை மீட்க முடியவில்லை. இளம் வயதில் அவர் இறந்தார். இளம் வயதில் மருமகள் கைம்பெண் ஆனார். அப்போது அவர்கள் குழந்தையின் வயது 2.
இதே கொடுமைதான் தமிழகத்தில் தெருவுக்கு தெரு நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் இளம் கைம்பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். சாலை விபத்துகள், தற்கொலைகள், மனநல பாதிப்புகள் ஆகியவற்றில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதற்கும் மதுவே காரணம்.
மத்திய அமைச்சர் கௌஷல் கிஷோரின் வலி நிறைந்த வார்த்தைகளை ஆட்சியாளர்களும், பொதுமக்களும் திறந்த மனதுடன் ஆய்வு செய்ய வேண்டும்.
குடிப்பழக்கம் உள்ளவர்கள் புத்தாண்டில் அல்ல…. நாளை அல்ல…. இன்றே, இந்த நிமிடமே மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும். மதுவால் நாடு சீரழிவதைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்குத்தான் கூடுதலாக உள்ளது.
இளம்பெண்கள் கைம்பெண்களாவதையும், குழந்தைகள் ஆதரவற்றவர்கள் ஆவதையும் தடுக்க தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும்.
தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார். புகை மற்றும் மதுப்பழக்கத்திற்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
“ஓபிஎஸ் ஒரு டம்மி பீஸ்” – கலாய்த்த ஜெயக்குமார்