தமிழிசையை மேடையில் வைத்து கண்டித்த அமித்ஷா?

Published On:

| By Kavi

சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா மேடையில் மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சவுந்தரராஜனை அழைத்து பேசும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா இன்று (ஜூன் 12) வெகு விமரிசையாக விஜயவாடாவில் நடைபெற்றது.

இவ்விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா, நிதின் கட்கரி மற்றும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு, உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் இருந்து முன்னாள் ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

விழா மேடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வெங்கைய நாயுடுவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது வரும் தமிழிசை சவுந்தரராஜன் வெங்கைய நாயுடு, அமித்ஷாவுக்கு வணக்கம் வைத்தவாறு செல்கிறார்.

தன்னை கடந்து செல்லும் தமிழிசையை அழைக்கும் அமித்ஷா அவரிடம் கண்டிப்புடன் பேசுவது போன்றும் தமிழிசை சொல்வதை ஏற்க மறுத்து தான் சொல்வதை கேட்குமாறு, அமித்ஷா பேசுவது போன்றும் தெரிகிறது.

தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருக்கிறது.  ஜூன் 9ஆம் தேதி பதவி ஏற்பு விழாவுக்கு அண்ணாமலை டெல்லி சென்று வந்த நிலையில், தமிழ்நாட்டில் நடக்கும் உட்கட்சி பூசல் தொடர்பாக தேசிய குழு சார்பில் விசாரணை செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில் மேடையில் வைத்து தமிழிசையிடம் அமித்ஷா பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

“கட்சி அலுவலகத்தில் மட்டுமே பிரஸ்மீட்” : தமிழிசையை கட்டுப்படுத்தும் அண்ணாமலை?

தொடர்ந்து உயரும் தங்கம் விலை – இன்றைய நிலவரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel