பிபிசி ஆவணப்படத்திற்கு தடை : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

அரசியல்

பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனுக்களுக்கு 3 வார காலத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 3) நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு நடந்தேறிய குஜராத் கலவரம் குறித்து பிபிசி நிறுவனம் ‘இந்தியா – மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படத்தை இரு பகுதிகளாக வெளியிட்டிருந்தது.

அப்போது குஜராத் முதல்வராக இருந்த தற்போதைய பிரதமர் மோடியும் கலவரத்திற்கு முக்கிய காரணம் என்று ஆவணப்படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தப்படத்தினை திரையிடுவதற்கு மத்திய அரசு தடை விதித்தது.

அதன்படி ஜனவரி 21 ஆம் தேதி, தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் கீழ், அவசரகால வழிமுறைகளை பின்பற்றி,

இந்தியா-மோடிக்கான கேள்விகள்‘ என்ற சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தின் இணைப்புகளை யூடியூப், ட்விட்டர் தளங்களில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம், வழக்கறிஞர் பிரசாந்த் பூசன், மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா ஆகியோர் கூட்டாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு மனுதாக்கல் செய்தனர்.

அதேபோல் இந்த தடை உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பி.எல்.சர்மாவும் மனுதாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், “பிபிசி ஆவணப்படத்தின் மீதான தடையை நீக்க வேண்டும். குஜராத் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதற்கு ஆவணத் தொடரின் இரு பகுதிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் நடந்த தவறை மறைக்க மத்திய பாஜக அரசு முயலக் கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு இன்று விசாரணை மேற்கொண்டது.

அதன் அடிப்படையில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம் எம் சுந்தரேஷ் அடங்கிய அமர்வு, “இந்த மனுக்களுக்கு மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்புகிறோம்” என்று உத்தரவிட்டனர்.

மேலும் பிபிசி ஆவணப்படத்தின் இணைப்புகளை நீக்குமாறு விதிக்கப்பட்ட உத்தரவு தொடர்பான அசல் கோப்புகளையும் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து இந்த வழக்குகளின் மறுவிசாரணை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

சமரசத்துக்கு வந்த ஓபிஎஸ், மறுத்த ஈபிஎஸ்: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

அதிமுக இடைத் தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்ய பொதுக் குழுவா? மீண்டும் குழப்பம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.