தக்காளி விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக நாட்டில் தக்காளி விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. விளைச்சல் குறைவு, வடமாநிலங்களில் கனமழை காரணமாக தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கிலோ ரூ.100க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.
இந்த நிலையில் திருச்சி கேர் கல்லூரியில் வரும் 27ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க இருக்கும் மாநில அளவிலான வேளாண் கண்காட்சிக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. இதனை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று (ஜூலை 16) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு!
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தக்காளி விலை உயர்வு குறித்து பேசினார்.
அவர், ”காலநிலைக்கு ஏற்ப தக்காளி விலை உயர்கிறது, குறைகிறது. தற்போது வட மாநிலங்களில் பெய்துவரும் அதிகளவு மழை பொழிவு காரணமாக தக்காளி விலை உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. அதனை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனினும் முதல்வர் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் மற்ற மாநிலங்களை விட தக்காளி விலை தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது.
தமிழகத்தில் உழவர் சந்தை மூலமாகவும், கூட்டுறவு துறை மூலமாகவும் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்து வருகிறது. மேலும் ரேஷன் கடைகள், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமும் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.” என்று தெரிவித்தார்.
300 அரங்குகளுடன் கண்காட்சி
மேலும், “வரும் 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் கேர் கல்லூரி மைதானத்தில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த வேளாண் சங்கமம் விழாவை வருகிற 27-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னையில் கடந்த 10-ந்தேதி தொடங்கிய மாபெரும் கண்காட்சியை தொடர்ந்து திருச்சியிலும், 300-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் கண்காட்சி அமைக்கப்பட உள்ளது.” என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஜூக்கர்பெர்க்குடன் கைகோர்த்த எலோன் மஸ்க்: எப்புரா???
மூன்று வகையான மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு!