ஜிஎஸ்டி வந்த பிறகு மாநில நிதி சுயாட்சி பறிக்கப்பட்டுவிட்டதாக இன்று (ஜனவரி 21) நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
“நிதித்துறையில் மாநில உரிமைகள் பறிப்பு” எனும் தலைப்பில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார்.
அவர் பேசுகையில், “தமிழ்நாடு சாதாரண நாடல்ல. இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டது.
24 லட்சம் கோடி ரூபாயுடன் பொருளாதாரம் இருக்கிறது என்றால் இந்தியாவிலேயே அது தமிழ்நாடு தான்.
கொரோனா காலத்தில் தப்பிப் பிழைத்தது தமிழ்நாடு மட்டும்தான். அப்போது பாசிடிவ் க்ரோத் என்று சொல்லக் கூடிய வகையில் மேல் நோக்கிய வளர்ச்சியிலிருந்தது தமிழ்நாடு.
இத்தகையைப் பெருமையைக் கொண்ட தமிழ்நாட்டை ஒன்றிய அர்சு ஊக்குவிக்கவில்லை. நிதித்துறையில் நாம் கோரிய கோரிக்கைகளைத் தந்திருக்கிறதா என கேள்விகளை எழுப்பினால், அதற்குப் பதில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு வந்ததற்குப் பிறகு மாநில நிதி சுயாட்சி பாதிக்கப்பட்டுள்ளது. எந்த பொருளுக்கு வரி விதிக்க வேண்டும், எந்த விகிதங்களில் வரி விதிக்க வேண்டும், எந்த முறையில் விதிக்க வேண்டும் என்கிற உரிமையை ஒன்றிய அரசு மாநிலங்களிடமிருந்து பறித்துக்கொண்டது.
இப்படிப் பறிக்கும் போது கூட உங்களுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் பாதுகாக்கப்படும் என்று சொன்னார்கள். வளர்ச்சியைத் தருவோம் என்று சொன்னார்கள். ஆனால் 5 ஆண்டுகளைத் தாண்டியும் வளர்ச்சி வந்திருக்கிறதா என்று கேட்டால் இல்லை.
இதற்கான இழப்பீடுகளைக் கொடுங்கள் என்று கேட்டோம். இழப்பீட்டுத் தொகை மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி. இதில் ஒரு பைசா கூட நமக்குக் கிடைக்கவில்லை.
இழப்பீட்டிற்கான காலத்தை 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்று கேட்டோம். அதற்கு ஒன்றிய அரசு ஒத்துக்கொள்ளவில்லை.
தமிழ்நாட்டிலிருந்து 6.5 லட்சம் கோடி ரூபாய் நாம் வரி கொடுக்கிறோம். ஆனால் நமக்கு வரி பகிர்வாக 2.5 லட்சம் கோடி ரூபாய் தான் வருகிறது.
ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் அப்படி இல்லை. உத்தரப் பிரதேச மாநிலம் 2.7 லட்சம் கோடி ரூபாய்தான் கொடுக்கிறது. ஆனால் அந்த மாநிலத்துக்கு 11 லட்சம் கோடி ரூபாய் வரி பகிர்வாகக் கொடுக்கிறார்கள்.
ஒரு கண்ணில் சுண்ணாம்பையும், ஒரு கண்ணில் வெண்ணெய்யும் வைக்கிறார்கள்.
நாம் ஒரு ரூபாய் வரி கட்டினால் நமக்கு 29 காசுதான் வருகிறது. தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நாளை வழக்கம் போல் பரிசோதனைகள் நடத்தப்படும்: நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவமனை!
கேலோ இந்தியா 2024: அடுத்தடுத்து 2 தங்கப்பதக்கங்களை வென்று தமிழ்நாடு அசத்தல்!