பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உறுதி செய்யும் சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வர முடியாது என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும், வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது.
இதனையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்தநிலையில், வாக்குறுதி அளித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய அமைப்புகள் டெல்லியில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக, பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரேதம் மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் டிராக்டரில் டெல்லி நோக்கி படையெடுத்தனர். ஹரியானா – டெல்லி எல்லையில் உள்ள ஷம்பு பகுதியில் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்களது டிராக்டர்கள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தி பல அடுக்கு தடுப்புகளை உடைக்க முயன்றனர். இதனால் ஹரியானா – டெல்லி எல்லையில் பதட்டமான சூழல் நிலவியது.
போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை வீசியதால் வயல்வெளிகளை நோக்கி விவசாயிகள் ஓடினர். இன்று இரண்டாவது நாளாக ஷம்பு எல்லையில் 100 -க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் அணிவகுத்து நிற்கின்றனர். அவர்களை டெல்லி எல்லைக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் போரட்டம் குறித்து மத்திய வேளாண்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறும்போது, “அனைத்து பங்குதாரர்களையும் கலந்தாலோசிக்காமல் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உறுதி செய்யும் சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வர முடியாது. இந்தப் பிரச்னையில் விவசாய அமைப்புகள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
அரசியல் ஆதாயங்களுக்காக போராட்டம் நடத்தும் விவசாய அமைப்புகளுடன் விவசாயிகள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வம் இருக்கை மாற்றம்!
இரவிலும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு!