அதானி குழுமம்: பாஜக மீதான நேரடி குற்றச்சாட்டு – முதல்வர் மு.க. ஸ்டாலின்

அரசியல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ”உங்களில் ஒருவன் பதில்கள்” நிகழ்ச்சியில் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

”கேள்வி: புதுமைப் பெண் கல்வித் திட்டத்தின் 2ம் கட்டத்தைத் தொடங்கி வச்சிருக்கீங்க. இந்த திட்டத்தின் பயனை மாணவிகள் உணரத் தொடங்கி இருக்கிறதா கருதுறீங்களா?

பதில்: முதலில் 1 லட்சத்து 16 ஆயிரம் மாணவிகள் இந்த திட்டத்தைப் பெற்றனர். புதுமைப் பெண் 2ம் கட்ட தொடக்க விழா மூலமாக மேலும் 1 லட்சம் மாணவிகள் பயன்பெற போகிறார்கள். உதவித் தொகை பெற வந்த மாணவிகளின் முகத்தில் மலர்ச்சியைப் பார்த்தேன்.

இப்படி எத்தனையோ மாணவிகளின் வாழ்க்கையில் கலங்கரை விளக்காக அமைந்திருக்கிறது புதுமைப் பெண் திட்டம். தலைமுறை தலைமுறையாய் பயனளிக்கும் திட்டமாகவும் அமைந்திருக்கிறது.

கேள்வி: பொய் வாக்குறுதிகளை வழங்கி திமுக ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருக்காரே?

ungalil oruvan pathilgal

பதில்: தூத்துக்குடியில் போராடியவர்களைத் துப்பாக்கியால் சுட சொல்லிவிட்டு டிவியை பார்த்துத் தான் தெரிஞ்சிக்கிட்டேன் என்று பொய் சொன்னாரே அந்த பழனிசாமியா. 85 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம்.

இன்னும் ஓரிரு திட்டங்கள் பாக்கியிருக்கிறது. அதையும் வரும் ஓராண்டிற்குள் நிறைவேற்றிக் காட்டுவோம்.

கேள்வி: நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பதிலுரை குறித்து உங்களுடைய பார்வை என்ன?

பதில்: யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லாமல் மணிக் கணக்கில் எப்படிப் பேசுவது என்பதை நான் தெரிந்து கொண்டேன். பாஜக ஆட்சி மீதும் அவர் மீதும் இருக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குப் பிரதமர் பதில் சொல்லவில்லை. நாட்டு மக்கள் அவருக்கு கவசமாக இருக்கிறார்கள் என்பதை மக்கள் சொல்லாமலேயே அவரே சொல்லிக் கொள்கிறார்.

சேற்றை அள்ளி வீசுங்கள் தாமரை மலரும் என்ற வார்த்தை ஜாலங்கள் தான் அவருடைய உரையில் இருந்ததே தவிர பிபிசி ஆவணப்படம் குறித்தோ, அதானி விவகாரம் குறித்தோ அவர் விளக்கமளிக்கவில்லை. எந்தெந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம் என்று அவர் வரிசைப்படுத்தவில்லை.

சேது சமுத்திர திட்டம், நீட், மாநில உரிமைகள், ஆளுநரின் தலையீடுகள், ஆன்லைன் ரம்மி சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது என எத்தனையோ கேள்விகளை திமுக உறுப்பினர்கள் கேட்டார்கள். இதற்கு அவரிடம் பதில் இல்லை. குறிப்பாகத் தமிழ்நாட்டிற்குச் சொல்ல அவரிடம் எதுவும் இல்லை.

கேள்வி: திமுக ஆட்சியைக் கலைத்த காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாமானு கேட்கிறாரே பிரதமர்?

பதில்: பாஜக ஆட்சியைக் கவிழ்த்த அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறவர் இதை கேட்கலாமா?

கேள்வி: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடருது. ஆனால் அதற்கான தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநரின் பிடிவாதமும் தொடருதே?

பதில்: இன்னும் எத்தனை பேர் பலியானால் அவர் கையெழுத்துப் போடுவார். ஆன்லைன் தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். அதன்படி உரியச் சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்டமன்றத்தை அவமதிக்கிறார் ஆளுநர்.

அமைச்சரவை அனுப்பிய அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், சட்டமன்றம் மூலமாக நிறைவேற்றி அனுப்பிய அதே சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தான் மர்மமாக இருக்கிறது.

இதிலும் என்ன கொடுமை என்றால், ஆன்லைன் விளையாட்டில் வெல்லும் தொகைக்கும் வரி விதிப்பது தான். ஒன்றிய நிதியறிக்கையில் இது இருக்கிறது.

கேள்வி: ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு இருக்கிறதா கருதுகிறீர்களா?

பதில்: ஆமாம். தமிழ்நாட்டிற்காக அறிவித்த ஒரே ஒரு திட்டம் எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் தான். அதை கட்டுவதற்கு ஜப்பான் நாட்டு நிதியுதவியைக் கேட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஜப்பான் நாட்டு நிதியுதவியும் வரவில்லை, இவர்களும் நிதி ஒதுக்கவில்லை. இதிலிருந்தே தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது தெரிகிறது.

கேள்வி: அதானி குழுமத்துக்கு எதிராக வந்துள்ள அறிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கோ, நாடாளுமன்ற விவாதத்துக்கோ ஒன்றிய அரசு தயாரா இல்லாம இருக்குறத பத்தி உங்க கருத்து என்ன?

பதில்: அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள், பாஜக அரசின் மீதான நேரடி குற்றச்சாட்டுகளாக இருக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வே தீவிரமாக விசாரிக்கிறது. எனவே இதை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படணும். நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.

ராகுல் காந்தி எழுப்பியுள்ள கேள்விகள் ஆணித்தனமானவை. ஆனால் அதற்குப் பிரதமர் பதில் அளிக்காதது அதிர்ச்சியாக இருக்கிறது.

கேள்வி: அமலாக்கத்துறைதான் எதிர்க்கட்சிகளை இணைச்சிருக்குனு பிரதமர் பேசியிருக்கிறது ஆரோக்கியமான அரசியலா?

பதில்: எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குகிறேன் என்று முதல் முறையாகப் பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார். இது நாட்டிற்கும் நல்லதில்லை, தன்னாட்சி அமைப்பிற்கும் நல்லதில்லை, ஜனநாயகத்திற்கும் நல்லதில்லை” என்று பதிலளித்துள்ளார்.

மோனிஷா

அண்ணாவுக்குப் பின் நெடுஞ்செழியன் வந்திருந்தால்… ஈரோட்டில் சீமானின் முதலியார் டார்கெட்!

வரி ஏய்ப்பு புகார்: சென்னையில் ஐடி ரெய்டு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *