பாஜகவின் நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளால் தான் 140 கோடி இந்தியர்களும் கொடூர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என பிரதமர் மோடிக்கு கார்கே பதிலடி கொடுத்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி ஆதாரத்துக்கு மீறி அதிக வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர்களை எச்சரித்துள்ளதாக பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருந்தார்.
இதனை விமர்சித்து பிரதமர் மோடி நேற்று காங்கிரஸை விமர்சித்திருந்தார். அவர், “உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது.ஆனால் அவற்றை முறையாக செயல்படுத்துவது கடினம் அல்லது சாத்தியமற்றது என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது. ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் அவர்கள் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தின்போதும் மக்களுக்கு ஏராளமான போலி வாக்குறுதிகளை அளித்தார்கள். இப்போது, மக்கள் முன் மோசமாக அம்பலமாகி நிற்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக மோடிக்கு பதிலளித்து மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் தள பக்கத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மலிவான பிஆர் ஸ்டன்ட்!
அதில், “பொய், வஞ்சகம், போலித்தனம், கொள்ளை மற்றும் விளம்பரம் ஆகியவை உங்கள் அரசாங்கத்தை சிறப்பாக விவரிக்கும் 5 வார்த்தைகள்.
100 நாள் திட்டத்தைப் பற்றி நீங்கள் முழக்கமிட்டது ஒரு மலிவான பிஆர் ஸ்டன்ட். மே 16, 2024 அன்று, 2047-க்கான சாலை வரைபடத்திற்காக 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களிடமிருந்து கருத்துகளை பெற்றதாகக் கூறினீர்கள். ஆர்டிஐ கேள்வியில் பிரதமர் அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்த மறுத்ததன் மூலம், உங்கள் பொய்கள் அம்பலமாகின.
இந்தியாவின் வேலையின்மை விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது ஏன்? ஒருசில வேலைகள் காலியாக இருக்கும் இடங்களிலெல்லாம் ஏன் கடும் போட்டி காணப்படுகிறது? 7 ஆண்டுகளில் 70 தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு யார் பொறுப்பு? பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று 5 லட்சம் அரசு வேலைகளை பறித்தது யார்?
வரி பயங்கரவாதம் மூலம் தண்டிப்பது யார்?
உங்கள் அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.150 லட்சம்+ கோடிகளை கடனாகப் பெற்றுள்ளது. ஒவ்வொரு இந்தியர் மீதும் ரூ.1.5 லட்சம் கடன் சுமை உள்ளது. வீட்டுச் சேமிப்பு ஏன் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்தது? தக்காளி விலை 247%, உருளைக்கிழங்கு 180% மற்றும் வெங்காயம் 60% அதிகரித்தது எப்படி? பால், தயிர், கோதுமை மாவு, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதித்தது யார்? வரி பயங்கரவாதத்தில் ஈடுபடுவதன் மூலம் நடுத்தர வர்க்கத்தை தண்டிப்பது யார்?
பொருளாதார சமத்துவமின்மை 100 ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சராசரி வளர்ச்சி 6% க்கும் குறைவாக உள்ளது, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இது 8% ஆக இருந்தது. தனியார் முதலீடு கடந்த பத்தாண்டுகளில் உற்பத்தித் துறையில் சராசரி வளர்ச்சி வெறும் 3.1% ஆக உள்ளது. அதே சமயம் காங்கிரஸ் ஆட்சியில் இது 7.85% ஆக இருந்தது” என்று கார்கே தெரிவித்துள்ளார்.
அனைத்தும் இடிந்து விழுகிறது!
நீங்கள் கட்டியதாக கூறிய அனைத்தும் இடிந்து விழுகிறது – மகாராஷ்டிராவில் உங்களால் திறக்கப்பட்ட சிவாஜி சிலை, டெல்லி விமான நிலையக் கூரை, அயோத்தியில் ராமர் கோயில் கசிவு, குஜராத்தில் மோர்பி பாலம் மற்றும் பீகாரில் புதிய பாலங்கள் இடிந்து விபத்து என உதாரணங்கள் நீள்கிறது. REEL PR-ல் பிஸியாக இருக்கும் அமைச்சரால் எண்ணற்ற ரயில் விபத்துகள் நடந்து வருகின்றன.
உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 105 (2024) இல் உள்ளது, அதே நேரத்தில் UN மனித மேம்பாட்டுக் குறியீட்டில் அதன் தரவரிசை 134 ஆகவும், உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டு எண் 129 ஆகவும் உள்ளது.
பாஜகவின் மிகப்பெரிய நிதிக் குற்றம்!
நாட்டில் எஸ்சிகளுக்கு எதிரான குற்றங்கள் 46%, எஸ்டிகளுக்கு எதிரான குற்றங்கள் 48% அதிகரித்துள்ளன. SC/ST பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2014 உடன் ஒப்பிடும்போது 2022 இல் 1.7 மடங்கு அதிகரித்துள்ளது.
SC, ST, OBC & EWS சமூகத்தினரிடம் இருந்து அரசு வேலைகளை பறிக்கப்பட்டுள்ளது. சாதாரண/ஒப்பந்த பணியமர்த்தல் 91% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப்படும் என MSPக்கான சட்ட உத்தரவாதம் மறுக்கப்படுகிறது. 35 பண்ணை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. ஆயுதப் படைகளுக்கான நிரந்தர ஆட்சேர்ப்பை அக்னிபாத் மூலம் தற்காலிகமாக மாற்றியுள்ளீர்கள்.
அரசியல் சட்டத்திற்கு முரணான தேர்தல் பத்திரங்கள் மூலம் கொள்ளையடிப்பது பாஜகவின் மிகப்பெரிய நிதிக் குற்றமாகும். உங்கள் ஆட்சியில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்டோர் ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்து தப்பி ஓட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எங்களை நோக்கி குற்றஞ்சாட்ட விரல் நீட்டுவதற்கு முன் பிரதமர் மோடி கொஞ்சம் உங்களை தயவுசெய்து கவனிக்கவும், உங்கள் உத்தரவாதத்தால் 140 கோடி இந்தியர்கள் கொடூரமான மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை” என கார்கே தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மருமகன் இருக்க பயம் ஏன்? முதன்முறையாக அறிமுகமான பிரியங்கா மகன்!
இந்து கோவிலுக்குள் எப்படி செல்லலாம்… ஃபகத் பாசில் செய்தது என்ன?