unemployment of youth Parliament intruders’ motive
நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று (டிசம்பர் 13) இரு இளைஞர்களும், நாடாளுமன்ற வளாகத்தில் இரு இளைஞிகளும் வண்ணப் புகை குண்டுகளை வீசிய விவகாரம் நாடு முழுதும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் மீண்டும் வெடித்தது.
நாடாளுமன்றதுக்கே பாதுகாப்பு இல்லை, எம்பி.க்களுக்கே பாதுகாப்பு இல்லை, உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே நேற்றைய வண்ணப் புகை குண்டு வீச்சில் ஈடுபட்ட சாகர் சர்மா, மனோ ரஞ்சன், நீலம் தேவி, அன்மோல் மற்றும் இத்திட்டத்தில் ஐந்தாவதாக ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறாவது நபரும் இந்த திட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவரை தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் கூறுகிறார்கள்.
இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வண்ணப் புகை குண்டுகளை வீசிய நால்வரையும் பாதுகாப்புப் படையினர் விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
“குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் நான்கு ஆண்டுகளாகவே சமூக தளம் மூலமாக நட்பில் இருந்திருக்கிறார்கள். சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே நாடாளுமன்றத்துக்குள் நுழைவது பற்றி திட்டமிட்டுள்ளனர். அவர்கள் காவல்துறையினரிடம், பல்வேறு பிரச்சினைகளை பற்றி அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலேயே இவ்வாறு வண்ண புகை குண்டுகளை வீசினோம் என்று தெரிவித்துள்ளனர்.
வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனைகள் மற்றும் மணிப்பூர் வன்முறை போன்ற பிரச்சனைகளால் நாங்கள் வருத்தம் அடைந்திருக்கிறோம். இதுபற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்துக்கும், அரசின் கவனத்துக்கும் கொண்டு வருவதற்காகவே இந்த உத்தியை நாங்கள் வகுத்தோம்’ என்று அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்ல, ‘நாங்கள் பிரதமர் மோடியை சந்திக்கலாம் அவர் முன்னால் இதை செய்யலாம் என்றுதான் மக்களவைக்கு வந்தோம். ஆனால் அப்போது பிரதமரும் அங்கே இல்லை. இப்போதும் நாங்கள் பிரதமர் மோடியை சந்திக்க விரும்புகிறோம்’ என்று தங்களை விசாரித்த அதிகாரிகளிடம் அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் சொல்வதை முழுமையாக நம்பாத போலீஸார், இந்த வண்ணப் புகை குண்டுவீச்சின் உண்மையான நோக்கம் வேறாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். இதற்காக அவர்களின் மொபைல் போன்களை கேட்டபோது ஐந்து பேரிடமும் மொபைல் போன்கள் இல்லை.
எங்கே உங்கள் மொபைல் போன்கள் என்று விசாரித்தபோதுதான், இவர்கள் அனைவரின் செல்போன்களும் தப்பி ஓடிய லலித் ஜாவிடம் உள்ளது என்பது தெரியவந்திருக்கிறது. ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் லலித் செல்போன்களுடன் தலைமறைவாகி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதேநேரம் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய நீலம் தேவியின் சகோதரரும், தாயாரும், “ நீலம் பல்வேறு படிப்புகளை படிச்சிருக்கா. ஆனால் அவளுக்கு வேலை கிடைக்கலை. ’வேலை கெடைக்கலேங்குற விரக்தியில செத்துடலாம் போல தோணுதும்மா’ என அடிக்கடி சொல்லுவா. அவ டெல்லி போனதே எங்களுக்கு தெரியாது. படிச்ச படிப்புக்கு வேலை கெடைக்கலையேனு கோபத்துலயும் விரக்தியிலும் அவ இருந்தா. விவசாயிகள் போராட்டத்துல கூட அவ கலந்துகிட்டா” என்று கூறியுள்ளனர்.
உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாகர் சர்மா, ஹரியானாவை சேர்ந்த நீலம் தேவி, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அனுமோல், கர்நாடாகாவை சேர்ந்த மனோரஞ்சன் என நாட்டின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் சமூக தளம் மூலமாக நட்பாகி விவாதித்து… இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் பற்றி நாட்டின் கவனத்தை ஈர்க்க இவ்வாறு திட்டமிட்டிருக்கிறார்கள்.
நாடாளுமன்ற வளாகத்தில் போலீஸாரிடம் சிக்கியபோது கூட நீலம் தேவி, ‘படிப்புக்கு வேலை கொடுங்க’ என்றே மூச்சுமுட்ட கோஷமிட்டிருக்கிறார்.
ஆண்டுக்கு இரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று சொல்லி பிரதமர் பதவிக்கு வந்தார் மோடி. ஆனால், 2014 முதல் 2023 வரை ஒன்பது லட்சம் மத்திய அரசு வேலை வாய்ப்புகளையே உருவாக்கியிருப்பதாக மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்த நிலையில்தான் இளைஞர்கள் வண்ணப் புகையோடு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் செய்தது சட்டப்படி குற்றம்தான். அதேநேரம் கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் பற்றி மோடியின் கவனத்தை ஈர்க்கவே இந்த உத்தியை அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது முதல் கட்டமாக தெரியவந்திருக்கிறது.
–வேந்தன்
மக்களவையில் அமளி : 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக எம்.பி கணக்கை துவங்கும்: பிரேமலதா உறுதி!
unemployment of youth Parliament intruders’ motive
சூப்பர் ..
இது ஆரம்பம் தான! இன்னும் பிதுக்கிற பிதுக்குல நிறைய சொல்வாங்கன்னு எதிர் பாக்குரோம்..
😜😜😜😜🤭🤭🤭🤭🤭🤭