PTR - Annamalai clash of words

பிடிஆர் – அண்ணாமலை : மீண்டும் வார்த்தை போர்!

அரசியல்

அரசு வேலை குறித்த அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்திருந்த நிலையில், இதற்கு அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று வேலூர் மாவட்ட அணைகட்டு பகுதியில் பேசிய அண்ணாமலை, ”2026ல் பாஜக ஆட்சிக்கு வந்தால், இதுவரை தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தில் ஒரு தலைமுறைக்கு கூட அரசு வேலை கிடைக்காதவர்களுக்கு, அவர்களுக்கு கட்டாயமாக அரசு வேலை கொடுப்போம்” என தெரிவித்தார்.

அண்ணாமலையின் பேச்சு பேசு பொருளான நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இதுதொடர்பாக பாஜகவுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுகுறித்து இன்று (பிப்ரவரி 6) தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரு ஒப்பீட்டுக்கு– தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம்…

பாஜக கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று….அதாவது, குழந்தைகள், ஓய்வு பெற்றவர்களையும் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3-இல் ஒருவருக்கு அரசு வேலையாம்!
அல்லது, வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா” என கேட்டிருந்தார்.

இந்நிலையில் அமைச்சரின் கேள்விக்கு பதிலளித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகக் குடும்பங்களில் இதுவரை அரசு வேலை கிடைக்காத குடும்பங்களில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு, அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று நான் கூறியதை திமுகவின் குடும்பத் தொலைக்காட்சி திரித்துச் சொல்லியிருப்பதில் ஆச்சரியமில்லை. அவர்கள் தொலைக்காட்சி நடத்துவதே மக்களிடம் இருந்து உண்மைகளை மறைக்கத்தான்.

ஆனால், ஒரு மாநிலத்தின் அமைச்சர், வேலையில்லாமல் எவ்வளவு தூரம் வெட்டியாக இருக்கிறார் என்பது, திமுகவின் குடும்பத் தொலைக்காட்சியில் வந்த பொய்யான செய்திக்கும் கருத்து சொல்லிக் கொண்டிருப்பதில் இருந்து தெரிகிறது. அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுத ஆண்டுதோறும் விண்ணப்பிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் முப்பது லட்சம்தான் என்பது மனிதவளத் துறையின் அமைச்சராக இருந்து நீக்கப்பட்ட பழனிவேல் தியாகராஜனுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமே.

30 லட்ச விண்ணப்பதாரர்களில், அரசுப் பணி பெறாத குடும்பத்தாரை கண்டறிந்து, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது சுமையாக நீங்கள் கருதலாம், ஆனால் அதுதான் உண்மையான சமூகநீதி. இதை பாஜக செய்யும். திமுகவை போல் 3.5 லட்ச காலி பணியிடங்களை நிரப்புவோம் என்று வாக்குறுதி கொடுத்து அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றமாட்டோம்.

முதலில், அரசுப் பணிக்கான தேர்வுகள் எழுதி, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, தேர்வு முடிவுகளோ, நேர்முகத் தேர்வுக்கான அழைப்போ, பணி நியமனமோ, செய்யாமல் இருக்கும் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையத்தின் தூக்கத்தைத் தட்டி எழுப்பும் பணியை பழனிவேல் தியாகராஜன் செய்யட்டும்.

அதற்கு முன்பாக, இரண்டு ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் இருக்கும் தேர்வாணையத் தலைவர் பொறுப்புக்கும் உறுப்பினர் பொறுப்புக்கும் தகுதியானவர்களை நியமிக்கட்டும். திமுகவின் போலிச் செய்திகளுக்கும், பொய் புனைதலுக்கும் கருத்து பிறகு சொல்லிக் கொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ‘ஆட்டமிழக்காமல்’ இருந்த வீரர்கள்!

இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கம் இவர்தான் : ராகுல் பேட்டி!

+1
0
+1
2
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0

1 thought on “பிடிஆர் – அண்ணாமலை : மீண்டும் வார்த்தை போர்!

  1. பிடிஆர் தொடர்ந்து நிதியமைச்சரா இருந்தா, நம்மள ஓவரா நாறடிச்சுவாரோனு பயந்து எப்படியோ அவரை கழட்டி விட்டாய்ங்க. அவரோட அனுபவ அறிவு இந்த சங்கிகளுக்கு ரொம்பவே எரிச்சல். ஜீ கூடதான் வருடத்துக்கு ரெண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, ஒவ்வொருத்தர் வங்கி கணக்குலயும் பதினஞ்சு லட்சம்னு பீலா விட்டாரு, இந்த பத்து வருசத்துல என்ன சாதிச்சாராம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *