ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் பாஜகவின் ஆதரவைக் கேட்டு ஜனவரி 21 ஆம் தேதி அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் கமலாலயம் சென்றனர்.
முதல் நாள் ஜனவரி 20 ஆம் தேதி அரியலூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி அங்கிருந்தபடியே சேலம் சென்றுவிட்டார்.
அடுத்த நாள் பாஜகவின் ஆதரவைக் கோரி துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோரை அனுப்பி வைத்தார்.
பாஜக அலுவலகம் செல்லும் முன்பு கேபி. முனுசாமி, செங்கோட்டையன் ஆகியோரோடு ஆலோசனை நடத்தினார் எடப்பாடி. அப்போது, “பன்னீர் செல்வம் ஒரு புரோக்கர். காரியம் ஆகணும்னா அவர் எங்க வேணும்னாலும் போவாரு.
ஆனால் நான் அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருக்குறவன். அவ்வளவு சீக்கிரம் கமலாலயத்துக்கு நானே நேரா வர்றது நல்லா இருக்காது.

அதனால தலைமை நிர்வாகிகள் நீங்கள் போயிட்டு வாங்க’ என்று கே.பி.முனுசாமியிடம் கூறிய எடப்பாடி பழனிசாமி மேலும் சில முக்கிய தகவல்களையும் அண்ணாமலையிடம் தெரிவிக்குமாறு பணித்துள்ளார்.
’ஈரோடு கிழக்கு தொகுதியில கடந்த முறை தமாகா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. இந்த தொகுதியில் அதிமுகவுக்கு வலுவான வாக்கு வங்கி இருக்கிறது. அதிமுக என்பது இப்போது நம் (அதாவது எடப்பாடி) கையில்தான் இருக்கிறது.
ஓ.பன்னீருக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு வார்டில் பூத் கமிட்டி போடக் கூட ஆள் இல்லை. எனவேதான் அவர், பாஜக போட்டியிட்டால் ஆதரவு கொடுக்கத் தயார் என்று அறிவித்துள்ளார். ஆனால் நாங்கள் எங்கள் வலிமையில் நம்பிக்கையாக இருக்கிறோம். அதனால்தான் நாங்கள் போட்டியிடுவதற்கு உங்கள் ஆதரவைக் கேட்கிறோம்.

நீங்கள் எல்லா டேட்டாவையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு திருப்தி என்றால் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். எங்களோடு வாருங்கள். இல்லையென்றால் நாங்கள் மக்களிடம் செல்கிறோம்.
எல்லாவற்றையும் மக்களின் முடிவுக்கே விட்டுவிடுவோம்’ என்பதுதான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி மூலமாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் சொல்லியிருக்கும் செய்தி.
கமலாலயத்தில் இதை அண்ணாமலையிடம் தெரிவித்த கே.பி.முனுசாமி சந்திப்பு முடிந்ததும் மீண்டும் எடப்பாடியைத் தொடர்புகொண்டார்.
‘நீங்கள் சொன்னதை எல்லாம் அண்ணாமலையிடம் சொல்லிவிட்டேன். அதற்கு அண்ணாமலை, ‘நீங்க சொல்ற விவரம் எங்களுக்கும் தெரியுங்கண்ணா.. எல்லாத்தையும் மேல சொல்லியிருக்கோம். அவங்க சொல்றதுக்காக காத்திருக்கோம்’ என்று சொன்னதையும் எடப்பாடியிடம் தெரிவித்துள்ளார்.
‘வந்தால் எங்களோடு வாங்க, இல்லையென்றால் எங்களை மக்களிடம் செல்ல விடுங்க’ என்பதுதான் பாஜகவுக்கு எடப்பாடி சொல்லியனுப்பியுள்ள செய்தி.
இதேநேரம் பன்னீர்செல்வம் பாஜக தலைவர்களிடம், “நான் 2017 முதல் உங்களுக்கு நம்பகமான தோழனாக இருக்கிறேன். அதிமுக- பாஜக கூட்டணி தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆனால் எடப்பாடி அதிமுக என்ற கட்சியின் நலனை விட, இந்த கூட்டணியின் நலனை விட தன் சொந்த நலனையே விரும்புகிறார். அதனால்தான் அவர் தன்னை முதல்வராக்கிய சசிகலாவுக்கும் நம்பகமானவராக இல்லை.
தன்னை நான்கு ஆண்டுகள் முதல்வராக தொடர உதவிய பாஜகவுக்கும் நம்பகமானவராக இல்லை. அவரை நம்பி ஒரு முடிவெடுத்தீர்கள் என்றால் இடைத்தேர்தல் முடிந்த பிறகு அவர் உங்களுக்கே எதிராக பகிரங்கமாகத் திரும்புவார். அதன்படி ஆலோசித்து நிதானமாக முடிவெடுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
எடப்பாடியின் பலமா, ஓ.பன்னீர்செல்வத்தின் நம்பகமா எதை முன்னிறுத்தி முடிவெடுப்பது என்று குழம்பியிருக்கிறது பாஜக.
–ஆரா
டிஜிட்டல் திண்ணை: பாஜக போட்டியிடலாமா? அண்ணாமலை நடத்தும் அவசர சர்வே!
ஈரோடு கிழக்கு: இளங்கோவன் போட்டி – அழகிரி ஆடிய ஆட்டம்!